கரோனா அச்சம்: மாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடல்: தொல்லியல் துறை அறிவிப்பு
கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் கலைச்சின்ன வளாகங்கள் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரைக் கோயில் மற்றும் ஐந்து ரதம் உள்ளிட்ட குடைவரைக் கோயில் சிற்பங்கள் மற்றும் இயற்கை அழகுடன் கூடிய கடற்கரையைக் கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர்.
இந்நிலையில், உலக நாடுகள் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதை பொதுமக்கள் தவிர்த்துள்ளனர். இதனால், சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரியக் கலைச்சின்ன வளாகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் வரும் 31-ம் தேதி வரையில் மூடப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதன் பேரில், சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச்சின்ன வளாகங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை வளாகங்களுக்குச் செல்லும் நுழைவு வாயில் பகுதிகளின் கதவுகள் மூடப்பட்டுள்ளன. இதனால், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
