

கர்நாடகாவில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் 63 வயது மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாகா காலாபுர்கியில் கோவிட்-19-க்கு மரணமடைந்த 76 வயது முதியவருக்கு அவரது வீட்டுக்குச் சென்று சிகிச்சை அளித்த 63 வயது மருத்துவருக்கும் கரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
76 வயது நோயாளிக்கு வீட்டில் சென்று அவர் ஆரம்பக்கட்டங்களில் சிகிச்சை அளித்திருக்கிறார் என்று காலாபுர்கி உதவி ஆணையர் ஷரத் தெரிவித்துள்ளார். கரோனா பாதிப்பு ஏற்பட்ட 63 வயது டாக்டர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இவரை இ.எஸ்.ஐ.சி. தனிமைப்பிரிவு வார்டில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த மருத்துவரின் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், மறைமுக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காலாபுர்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர் தவிர பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த 20 வயது பெண் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.