

கரோனா அச்சம் காரணமாக சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை ஒத்தி வைக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 17) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் ஓர் இடத்தில் பெரும் திரளாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலையை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடக்கவிருந்த மாநாடுகள், பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு வடிவங்களில் நடைபெறவிருந்த இயக்கங்கள் அனைத்தும் வரும் மார்ச் 31 வரையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. நிலைமைகள் சீரடைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர், தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட இயக்கங்கள் தொடரும், அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதனை பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் முஸ்லிம்கள், குறிப்பாக முஸ்லிம் தாய்மார்களும், சகோதரிகளும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, மிக அமைதியான முறையில், ஜனநாயக முறையில் எவ்விதமான வன்முறைக்கும் இடமளிக்காது தமிழ்நாடு முழுவதும் போராடிக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
வரலாற்றில் முஸ்லிம் பெண்கள் இவ்வாறு பெருந்திரளாகக் கூடி, இடைவிடாது தொடர் போராட்டமாக பங்கு பெற்றதை நாம் பார்த்தது இல்லை. அவர்களது வீரமிக்க போராட்டத்தை வாழ்த்துவதுடன், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவாமல் தடுத்து மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் அனைவருக்கும் உள்ள நிலையில் நிலைமைகள் சீரடைந்து, இயல்பு நிலை திரும்பும் வரையில், நடத்தி வரும் போராட்டங்களை ஒத்திவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.