Published : 16 Mar 2020 05:26 PM
Last Updated : 16 Mar 2020 05:26 PM

கேரளாவில் கரோனா பாதிப்பு எதிரொலி: மேட்டுப்பாளையத்தில் டன் கணக்கில் தேங்கும் மலைக் காய்கறிகள், வாழைத் தார்கள்

கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் வருகை குறைந்து, மேட்டுப்பாளையம் காய்கறிச் சந்தையில் டன் கணக்கில் மலைக் காய்கறிகள் மற்றும் வாழைத் தார்கள் தேக்கமடைந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், நூல்கோல், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட மலைக் காய்கறிகள் மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் காய்கறி மண்டிகளுக்கு டன் கணக்கில் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வரும் மொத்த வியாபாரிகள் இக்காய்கறிகளை ஏலம் மூலம் விலை நிர்ணயித்து வாங்கி, அவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறு தினமும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் வரும் சுமார் 1,500 டன் காய்கறிகளில் 80 சதவீதம் வரை கேரளாவுக்கே கொண்டு செல்லப்படுகிறது.

அதேபோல, மேட்டுப்பாளையம் பகுதியில் விளையும் வாழைத் தார்களில் 90 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. குறிப்பாக, சிப்ஸ் உள்ளிட்ட தேவைகளுக்கு நேந்திர வாழைகள் இங்குள்ள வாழை மண்டிகளில் இருந்து கேரளாவுக்குச் செல்கின்றன.

மேட்டுப்பாளையம் காய்கறிச் சந்தையில் தேங்கியுள்ள மலைக் காய்கறிகள்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாலும், மக்களிடம் நிலவும் அச்சம் காரணமாகவும் ஒட்டுமொத்த வர்த்தகமும் முடங்கி வருகிறது. கேரளாவில் மக்கள் அதிக அளவில் கூடும் வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், கடைகள், உணவகங்கள் என பெரும்பாலும் மூடப்பட்டு, வியாபாரம் மந்த நிலையில் இருப்பதாலும், கேரளாவுக்குள் நுழையும் அனைத்துப் பொருட்களும் கடும் சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுவதாலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள், தமிழகத்துக்கு வரத் தயக்கம் காட்டுகின்றனர். மலைக் காய்கறிகளை வாங்கவும், வாழைத் தார்களைக் கொள்முதல் செய்யவும் மேட்டுப்பாளையத்தில் குவியும் கேரள வியாபாரிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதால், வழக்கமான வியாபாரம் இல்லாமல் சந்தைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுக்க வரும் வியாபாரிகள் இல்லாததால், தினமும் 1,000 டன் வரை காய்கறிகளும், 500 டன் வரை வாழைத் தார்களும் தேக்கமடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் வியாபாரிகள், இவற்றின் விலையும் சரிந்து வருவதாகக் கூறுகின்றனர்.

நேந்திரம் வாழை கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விலைபோன நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பால் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விலை போவதாகவும், நீலகிரி கேரட் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விலை போன நிலையில் தற்போது ரூ.25 முதல் ரூ.35 வரை மட்டுமே விலை போவதாகவும் கூறுகின்றனர்.

ஒருசில தினங்கள் கூட இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாத காய்கறி மற்றும் பழங்கள் தேங்கி வருவதால் கடும் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், இந்நிலை மேலும் தொடர்ந்தால் விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x