

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒரே நபரும் குணமடைந்து விட்டதாகவும், அவர் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (மார்ச் 16) ஆலோசனை நடத்தினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ அறிவியல் இயக்குநரகத்தில் இருந்தபடியே, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனா பரவலைத் தடுக்க தமிழக-கேரள எல்லையில் நுழையும் வாகனங்கள் முழுவதையும் தீவிரமாகக் கண்காணிக்க காவல் துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். கரோனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 11 பேர் மருத்துவமனைகளில் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
கரோனா அச்சம் நீங்கும் வரை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரம் பொறியாளர் குணமடைந்து விட்டதாகவும், இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் கூறினார்.