

மகாராஷ்டிராவின் கோலாப்பூரைச் சேர்ந்த 68 வயது முதியவரின் உயிரிழப்புக்கு நாட்பட்ட நுரையீரல் நோய்தான் காரணமே தவிர, கரோனா வைரஸ் காரணமல்ல என்று மூத்த சுகாதார அதிகாரி இன்று தெரிவித்தார்.
கரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்தனர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் 68 வயது முதியவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கரோனா வைரஸ் பாதிப்புதான் காரணம் எனச் செய்திகள் பரவின. ஆனால், இதனை மகாராஷ்டிரா சுகாதாரத்துறை இன்று மறுத்துள்ளது.
68 வயது கோலாப்பூர் முதியவர் உயிரிழந்தது நீண்டகால நுரையீரல் நோயால்தானே தவிர, கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று மூத்த சுகாதார அதிகாரி டாக்டர் பி சி கெம்ப்-பாட்டீல் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் பி சி கெம்ப்-பாட்டீல் இன்று கூறுகையில், ''கரோனா வைரஸ் நோய் பாதிப்புகளைக் கொண்ட புனே, ஹரியாணா மற்றும் டெல்லி போன்ற இடங்களுக்கு கோலாப்பூரைச் சேர்ந்த 68 வயது முதியவர் வீரேந்திர சிங் யாதவ் சில வாரங்களுக்கு முன்பு பயணம் செய்தார். அங்கு கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர். இதனையடுத்து அவரிடம் காணப்பட்ட சில அறிகுறிகளின் காரணமாக அவர் மார்ச் 3-ம் தேதி கோலாப்பூரில் உள்ள சத்ரபதி பிரமிலராஜே ருக்னாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று வீரேந்திர சிங் யாதவ் உயிரிழந்தார். கோவிட்- 19 பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது என்ற ஊகத்தின் அடிப்படையில் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்காக தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.
ஆனால், அவர் கரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழக்கவில்லை. நாள்பட்ட நுரையீரல் நோய் காரணமாக இறந்ததாக நிரூபணமானது’’ என்று தெரிவித்தார்.