Last Updated : 15 Mar, 2020 07:10 PM

 

Published : 15 Mar 2020 07:10 PM
Last Updated : 15 Mar 2020 07:10 PM

நெருக்கடியில் மத்திய கிழக்கு நாடுகள்: கரோனாவுக்கு ஈரானில் 724 பேர் பலி; மூடப்பட்டது உலகின் மூன்றாவது புனித மசூதி

கரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலக அளவில் இஸ்லாத்தின் மூன்றாவது மிகப்பெரிய புனிதத் தளமாக விளங்கும் அல்-அக்ஸா மசூதியும் காலவரையின்றி மூடப்படுவதாக இஸ்லாமிக் என்டோவ்மெண்ட் இன்று கூறியுள்ளது.

சீனாவில் உருவான வைரஸ் தொற்றுநோய் வைரஸ் உலகளவில் 150,000 க்கும் அதிகமான மக்களை பாதித்து 5,700 க்கும் அதிகமானவர்களைக் கொன்றது. உலகளவில் பாதிப்படைந்த 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

சீனாவிற்கு வெளியே கரோனா வைரஸ் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.

மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரான் மிகவும் மோசமான நிலையில் போராடி வருகிறது.

ஈரானில் கிட்டத்தட்ட 13,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 724 பேர் இதுவரை இக்கொடிய நோய்க்கு இரையாகியுள்ளனர். கடந்த ஒரே நாளில் மட்டும் 113 பேர் பலியாகியுள்ளனர்.

அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால், உண்மையான தொற்றுநோய்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் 110,000 மருத்துவமனை படுக்கைகள் இருப்பதாக அரசு வட்டாரம் தெரிவிக்கிறது. இதில் தலைநகர் தெஹ்ரானில் 30,000 உள்ளன. தேவைக்கேற்ப நடமாடும் கிளினிக்குகள் அமைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியானவர்களில் வயதானவர்கள் மட்டும் இல்லை என்று உள்ளூர் சுகாதார அதிகாரி ஜாலி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் இன்று புள்ளிவிவரங்களை வெளியிட்டது, அதில் கோவிட் 19 வைரஸ் தொற்றினால் ஈரானில் உயிரிழந்தவர்கள் 55% இறப்புகள் 60 வயதில் இருந்ததாகவும், 15% 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இதில் நோயாளிகளும் வயதானவர்களும் மட்டுமில்லை, ஆரோக்கியமானவர்களும் உயிரிழந்தனர் என்று அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஈரானுக்கு நெருக்கடி தந்த அமெரிக்கா

ஈரான் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால் அமெரிக்கா நெருக்கடி தர ஆரம்பித்தது. தற்போது பொருளாதார தடையும் விதித்தது. டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகள் விதித்ததன் காரணமாக நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் முடங்கின. கொடிய வைரஸ்நோய் பாதிப்புக்கும் சேர்த்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

கடந்த வாரம், ஈரான் சர்வதேச நாணய நிதியத்திடம், 5 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டது, 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர் முதல் சர்வதேச கடன் பெற்ற பிறகு இதுவரை எந்தவித கடனையும் எதிர்பாராத நாடாக விளங்கிய ஈரான் தற்போது பொருளாதார நெருக்கடியில் மீண்டும் கடன் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கொடிய வைரஸை கட்டுப்படுத்தமுடியாமல் சமாளிக்க வழியின்றி ஈரான் அரசு கடுமையாக தத்தளித்து வருகிறது.

இதனாலேயே மோசமாக பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை பின்பற்றுவதற்குக் கூட ஈரானிய அதிகாரிகள் மிகவும் மெதுவாகத்தான் செயல்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

ஈரானிய அதிபர் ஹசன் ருஹானி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ''நாட்டிற்கு பொதுத் தனிமைப்படுத்தல் வேண்டாம், நாட்டின் அனைத்து எல்லைகளையும் திறந்துவைக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

ஈரானில், மூத்த துணைத் தலைவர், அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், புரட்சிகர காவல்படை உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் உட்பட பல மூத்த அதிகாரிகளுக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அரசாங்க செயல்பாடுகளும் போதிய வழிகாட்டுதல் இன்றி ஸ்தம்பித்தது.

கரோனா வைரஸின் கடும் பாதிப்புக்கிடையில் மத்திய கிழக்கு நாடுகள்

கரோனா வைரஸினால் மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நாடுகள் பெரும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன, பொது நிகழ்வுகளை ரத்து செய்துள்ளன, சில சந்தர்ப்பங்களில் அத்தியாவசியமற்ற வணிகங்களை வரவிருக்கும் வாரங்களுக்கு மூடுமாறு அழைப்பு விடுத்துள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உலகளாவிய வணிக மற்றும் பயண மையமான வானளாவிய கட்டிடமான துபாயில், அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அனைத்து திரைப்பட அரங்குகள், ஆர்கேட் மற்றும் ஜிம்கள் மாத இறுதிக்குள் மூடப்படும் என்று அறிவித்தனர்.

துபாய் பார்க்ஸ் & ரிசார்ட்ஸ் இந்த மாத இறுதிக்குள் மூடப்படும் என்று அறிவித்தது. 3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்ட இந்த பரந்த பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபி லூவ்ரே அபுதாபி உள்ளிட்ட அதன் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களையும் இந்த மாத இறுதிக்குள் மூடியது.

சிறிய, எண்ணெய் வளம் கொண்ட குவைத் இதற்கிடையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மால்கள், வரவேற்புரைகள் மற்றும் முடிதிருத்தும் கடைகளை மூடியது. அதிகாரிகள் காபி கடைகளை திறந்த நிலையில் வைத்திருக்க அனுமதித்தனர், ஆனால் ஒரே நேரத்தில் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு மேல் வரிசையில் காத்திருக்க கூடாது என்றும் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இஸ்ரேலில், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வழக்கு, இந்த வாரம் தொடங்கவிருந்த பொதுக் கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் நெத்தன்யாகு அரசாங்கத்திற்கு முன்னாள் ராணுவத் தலைவர் பென்னி காண்ட்ஸ் அழுத்தம் கொடுத்து வருகிறார், மூன்று முடிவில்லாத தேர்தல்கள் மற்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக அரசியல் முட்டுக்கட்டை போட்டுவருவதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

காலவரையின்றி மூடப்படும் உலகிலேயே மூன்றாவது புனித மசூதி

கரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலக அளவில் இஸ்லாத்தின் மூன்றாவது மிகப்பெரிய புனிதத் தளமாக விளங்கும் அல்-அக்ஸா மசூதியும் காலவரையின்றி மூடப்படுவதாக இஸ்லாமிக் என்டோவ்மெண்ட் இன்று கூறியுள்ளது. இந்த புனித மசூதி இஸ்ரேல், பாலஸ்தீனம் அருகே பழைமை வாய்ந்த ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது.

இறைத் தூதர் முகம்மது, தனது இரவு பயணத்தின் போது மெக்காவின் பெரிய மசூதியிலிருந்து அல்-அக்ஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

இஸ்லாமிய பாரம்பரிய மரபுப்படி, முகம்மது மக்காவிலிருந்து மதீனாவுக்கு குடிபெயர்ந்த 17 மாதங்கள் வரை, மெக்காவில் உள்ள காபாவை நோக்கி திரும்புமாறு இறைவன் அல்லாஹ் அறிவுறுத்தியபோது, ​இந்த தளத்தை நோக்கிதான் முகம்மது தொழுகைகளை நடத்தினார்.

இந்த மசூதி, பழைமை வாய்ந்த அல் அக்ஸா காம்பவுண்ட் அல்லது ஹராம் ஈஷ்-ஷெரீப் என்று அழைக்கப்படும் கோயில் மவுண்டின் மேல் கட்டப்பட்டது. 746இல் ஒரு பூகம்பம், 1033ல் மற்றொரு பூகம்பம் என பல்வேறு சோதனைகளைக் கடந்து மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பப்ட்டது. தற்போது மிகவும் அழகாக பிரம்மாண்டமாக எழிலார்ந்த பளிங்குக் கல் கட்டுமானத்தில் மிளிரும் மசூதி இது.

1099 இல் சிலுவைப்போர் இந்நகரைக் கைப்பற்றியபோது, ​​அவர்கள் மசூதியை ஒரு அரண்மனையாகவும், டோம் ஆஃப் தி ராக் தேவாலயமாகவும் பயன்படுத்தினர், ஆனால் மன்னன் சலாத்தின் மீண்டும் கோயில் மவுண்ட்டைக் கைப்பற்றினார்.

கடும் சோதனைகளுக்கு பிறகு மன்னன் சலாத்தின் முயற்சியினால் அதன் செயல்பாடு மீண்டும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் ஒரு மசூதியாகவே அல் அக்ஸா மசூதி தொடர்கிறது.

இம் மசூதி காலவரையின்றி மூடப்படுவதால் பிரார்த்தனைகள் மசூதிக்கு வெளியே தொடரும் எனவும் மசூதியின் இயக்குனர் ஷேக் உமர் கிஸ்வானி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x