கரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் 1,500 பேருக்குப் பரவியது

ஸ்பெயினில் பேருந்துகளுக்கு சுகாதாரத் துறையினர் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மருந்தடிக்கும் காட்சி.
ஸ்பெயினில் பேருந்துகளுக்கு சுகாதாரத் துறையினர் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்தடிக்கும் காட்சி.
Updated on
1 min read

ஸ்பெயினில் ஒரேநாளில் 1500 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக இதுவரை உலகெங்கிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கிடையே ஒரே இரவில் 1,500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இத்தாலிக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

ஸ்பெயினில் இதுவரை 136 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயின் நாடு கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இன்று தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியபோது, மருத்துவ சுகாதாரப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிலை மற்றும் பொது இடங்களில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அம்சங்களை அறிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஸ்பெயினில் வைரஸ் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பார்கள், உணவகங்கள் மற்றும் அனைத்து விளையாட்டு மற்றும் கலாச்சார நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

ஏறக்குறைய 3,000 பேருக்கு வைரஸ் நோய்த் தொற்று கண்டிருக்கும் நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாட்ரிட் பகுதியில் அனைத்து அத்தியாவசியக் கடைகள், மால்கள், தொழில் நிறுவனங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in