

காஷ்மீரில் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரைக் கண்காணிக்கத் தவறிய மருத்துவ அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரை அடிக்கடி சென்று கண்காணிக்க வேண்டிய மருத்துவ அதிகாரி சலீம் பட்டி, தன் கடமையைச் செய்யத் தவறினார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மருத்துவ அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பூஞ்ச் மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவ அதிகாரி சலீம் பட்டியை உடனடியாக பணிநீக்கம் செய்து பூஞ்ச் துணை ஆணையர், ராகுல் யாதவ் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை உடனே மேற்கொள்ளுமாறும் துணை ஆணையர் மாவட்ட மருத்துவக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பூஞ்ச் மாவட்ட துணை ஆணையர் பூஞ்ச் மாவட்ட துணை ஆணையர் மருத்துவ அதிகாரி மீதான பணி நீக்க உத்தரவில் கூறியுள்ளதாவது:
''கண்காணிப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட சலீம் பட்டி தனது கடமையைச் செய்ய மறுத்துவிட்டதாக ஹவேலி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் இந்த கடினமான காலங்களில் மருத்துவ வல்லுநர்கள் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முக்கியமானவர்கள்.
உலகெங்கிலும், மருத்துவ வல்லுநர்கள் கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தங்கள் கடமை என்ற எல்லையோடு நின்றுவிடாமல் மிகவும் அக்கறையோடு பணிபுரிய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் இதற்கு விதிவிலக்கல்ல.
எவ்வாறாயினும், ஒரு மருத்துவரின் இத்தகைய குறைபாடுள்ள அணுகுமுறை மற்ற அனைத்து சுகாதார நிபுணர்களின் முயற்சிகளையும் பயனற்றதாக மாற்றும்.
மருத்துவ அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இடைநீக்க காலத்தில், அவர் அடுத்த கட்ட உத்தரவிற்காக மாவட்ட மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளருடன் இணைந்திருக்க வேண்டும்.''
இவ்வாறு பூஞ்ச் மாவட்ட துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.