

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் எனும் கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஆயத்த நிலையில் மத்திய அரசு இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மாக்கன் கரோனா வைரஸ் தடுப்பிற்கான மத்திய அரசின் ஆயத்த நிலைகள் கண்களுக்குப் புலப்படாமல் உள்ளது.
பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வார்க்கியா நாட்டில் நிறைய கடவுள்கள் இருக்கின்றனர், ஆகவே கரோனா இங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளாரே என்று அஜய் மாக்கனிடம் கேட்ட போது, இது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை, அனைவருக்கும் அவர்களுக்கேயுரிய நம்பிக்கைகள் உள்ளன, ஆனால் அரசு தயார் நிலை போதாது என்றார்.
“ராகுல்காந்தி தொடர்ந்து கூறிவருவது போல் கரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் தயார் நிலை கண்களுக்குப் புலப்படும் வகையில் இல்லை, அரசு தயாராக இருந்தால் கடவுள்களும் நிச்சயம் உதவிபுரிவார்கள், தயாரிப்பு இல்லையெனில் உதவி எங்கிருந்தும் வராது.
ஆகவே அரசின் தயாரிப்பு நிலை போதாமை வருத்தமளிப்பதாகும், நாளை கரோனா பாதிப்பு அதிகமானால் அரசு ஆயத்தமாக உள்ளதா என்றால் இல்லை என்றே கூற வேண்டியிருக்கிறது.
மற்றொரு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தன் ட்விட்டரில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
சுகாதார அமைச்சகத் தகவல்களின் படி இதுவரை கரோனாவுக்கு 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மரணமடைந்துள்ளனர்.