கரோனா வைரஸ்: கையிருப்பு இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ரிச்சி ஸ்ட்ரீட்

கரோனா வைரஸ்: கையிருப்பு இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ரிச்சி ஸ்ட்ரீட்
Updated on
1 min read

சென்னையின் பரபரப்பான சாலைகளில் அண்ணா சாலையும் ஒன்று. அதில் அமைந்திருப்பது ரிச்சி தெரு. இது தென்னிந்தியாவின் மார்க்கெட் மையமாகத் திகழ்கிறது. இங்கு 2,500-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. எனினும் தற்போது கரோனா வைரஸால் இங்கு வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

சீனாவிலிருந்து பரவிய கோவிட்-19 காய்ச்சல், உலகம் முழுவதும் 112 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கோவிட் -19 காய்ச்சலுக்கு 1,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் மட்டும் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வழக்கமாக அங்கு நடைபெறும் தொழில் முடங்கியுள்ளது. இதனால் சென்னையில் உள்ள ரிச்சி தெருவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு விற்பனையாகும் பொருட்களில் பெரும்பாலானவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையே.

இது தொடர்பாக சென்னை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஃபோடெக் வியாபாரிகள் சங்கத் தலைவர் சாந்தலியா கூறும்போது, ''உலகப் பொருளாதாரமே சுணக்கம் கண்டுள்ள சூழலில் இங்கும் விற்பனை பாதித்துள்ளது. அத்துடன் கரோனா பாதிப்பால் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் குறைந்துள்ளன. இதனால் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களின் இருப்பு குறைந்துவிட்டது.

ஏப்ரல் மாதத்துக்குள் சூழல் சரியாகவில்லை என்றால், நிலை சிக்கலாகி விடும். ஏனென்றால் 70 சதவீதப் பொருட்கள் சீனாவில் இருந்துதான் வருகின்றன. சீனப் புத்தாண்டுக்கு முன்புதான் கடைசியாக சரக்குகள் வந்தன.

கடந்த இரண்டு மாதங்களில் சந்தையில் புதிய மொபைல் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், அவற்றுக்குத் தேவையான உதிரி பாகங்கள் எங்களிடம் இல்லை. அதேபோல பள்ளி, கல்லூரிகளில் ப்ராஜெக்ட் செய்வதற்காகவும் மாணவர்கள் ரிச்சி தெருவுக்கு வருவார்கள். குறைவான பொருட்களே கையிருப்பில் உள்ளதால், அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பாதிக்கப்படுகின்றனர்'' என்று சாந்தலியா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in