கரோனா வைரஸ் அச்சம்: பூடான் எல்லையை மூடியது மேற்கு வங்கம்

மேற்கு வங்ஙகத்தில் உள்ள பூடான் எல்லை
மேற்கு வங்ஙகத்தில் உள்ள பூடான் எல்லை
Updated on
1 min read

கரோனா வைரஸ் பாதிப்புகள் கடுமையாக பரவி வருவதை அடுத்து பூடான் எல்லைக்கு மேற்கு வங்க அரசு சீல் வைத்துள்ளதாக மாநிலத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல், சீனாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸால் 1.38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்கின்றனர். கோவிட்-19 வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பூடான் எல்லைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து மேற்கு வங்க அரசின் மூத்த அதிகாரி கூறியதாவது:

மேற்கு வங்கத்தின் அலிபுர்துர் மாவட்டம் ஜெய்கானில் இந்தியப் பக்கத்தில் பூடான் எல்லை வாசலை மேற்கு வங்க காவல்துறை அமைத்துள்ளது. இன்று முதல் இந்தியாவிலிருந்து பூடானுக்கு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் பயணிகள் செல்வதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

கடந்த மாதம் இமயமலை அருகே ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணிக்கு கரோனா வைரஸ் ஏற்பட்டதைத் தொடர்ந்து இமயமலையின் அனைத்து வழிகளிலும் இம்மாதத் தொடக்கத்திலேயே தடை விதிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பாதிப்புகள் கடுமையாக பரவி வருவதை அடுத்து சுற்றுலா மற்றும் வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து பூடான் அரசு அலிபுர்துர் மாவட்ட நிர்வாகத்திற்கு சமீபத்தில் ஒரு கடிதத்தை அனுப்பியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கு வங்க அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in