

கரோனோ வைரஸ் அச்சத்தின் எதிரொலியாக பயோ மெட்ரிக் பதிவு முறை இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசின் நிர்வாகப் பிரிவு அனைத்துத் துறைகளுக்கும் அறிவிப்பு அனுப்பியுள்ளது.
புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை கூடுதல் செயலர் இன்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளார்.
அதன்படி, "கரோனா வைரஸ் அச்சத்தின் எதிரொலியாகவும்/ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பயோ- மெட்ரிக் வருகைப் பதிவேடு இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுகின்றது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு நீடிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து இந்த அறிவிப்பாணை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களுக்கும் உடனடியாக அமலாகிறது. அனைத்துத் துறைகளுக்கும் இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் 81 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.