

அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்காவின் நைரோபி நகருக்குத் திரும்பிய ஒரு பெண்ணுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கென்யாவின் சுகாதார அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வரும் நோய் கோவிட்-19. இந்நோய் கடந்த ஓரிரு மாதங்களில் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்குப் பரவி வந்தது. இதன் மூலம் இதுவரை 4500க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். தற்போது கரோனா வைரஸ் தொற்று கிழக்கு ஆப்பிரிக்காவிலும் பரவியது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கென்ய நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியதாவது:
''கென்யாவைச் சேர்ந்த இளம்பெண் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் மூலம் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அப்பெண் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து வந்து லண்டனிலிருந்து மார்ச் 5, 2020 அன்று திரும்பினார். அப்பெண் உறுதியானவர். தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மீண்டு வருகிறார்.
கிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் புதிய கரோனா வைரஸ் நோய்த்தொற்றில் முதல் உறுதிப்படுத்தப்பட்ட பெண் இவர்''.
இவ்வாறு கென்ய நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.