Published : 13 Mar 2020 09:53 AM
Last Updated : 13 Mar 2020 09:53 AM

கரோனா வைரஸ்: போதுமான அறிவை தமிழக அரசு பெற்றிருக்கவில்லை; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய போதுமான அறிவை தமிழக அரசு பெற்றிருக்கவில்லை என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 13) வெளியிட்ட அறிக்கையில், "சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தாக்குதல், மக்களுக்கு பேரதிர்ச்சியையும், உயிர்பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 108 நாடுகளுக்கு மேலாக பரவியுள்ள இந்த கரோனா வைரஸ் சீனாவில் மட்டும் 3,800 பேரை பலி வாங்கியுள்ளது. உலகளவில், இதுவரை 4,500-க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டு, பலியாகியுள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, இதுவரை அதிகாரப்பூர்வமாக 73 நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன. இதில், இந்தியர்கள் 56 நபர்கள், வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் 17 நபர்கள் என்றும் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன. நம் அண்டை மாநிலமான கேரளாவில் இந்த கரோனா வைரஸ் தொற்றுக்கு 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 31 ஆயிரத்து 793 நபர்கள், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் 1,138 நபர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 72 நபர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பியதில் அதில் 69 பேருக்கு, கரோனா பாதிப்புக்கு உண்டான அறிகுறிகள் இல்லையென்ற செய்தி சற்று ஆறுதல் தரக்கூடிய ஒன்று. இருவரது பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியிடப்படாமல் மர்மமாக உள்ளது.

உலகம் முழுவதும் பரவி, மக்களின் உயிரை பலி வாங்கும் இத்தகைய வைரஸ் தொற்று நோய்களுக்கு 'பேண்டமிக்' என்று பொதுவாகப் பெயரிடப்படும். இந்த நோய் தொற்று சீனாவை விட்டு வெளியேறி தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளை கபளீகரம் செய்ய தொடங்கியுள்ளது. இது இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.

பிப்ரவரி 20 அன்று சீனாவை தவிர்த்த பிற நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 1,212 என்கிற எண்ணிக்கையில் இருந்து மார்ச் 10 வரை 38 ஆயிரத்து 179 என்ற அளவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த உயிர்க்கொல்லி நோய் மிகத் தீவிரமாக பரவி வருவதை ஆளும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய - மாநில அரசுகளுக்கு, பொதுமக்கள் மனதில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் தாக்குல் பற்றிய அச்ச உணர்வை நீக்க வேண்டிய கடமையுள்ளது. ஆனால், மத்திய சுகாதார அமைச்சகமோ, இந்திய மக்களுக்கு கைபேசி வாயிலாக, ஒவ்வொரு அழைப்பிலும் 'லொக், லொக்..' என்ற இருமல் குரலோடு ஆங்கிலத்தில் செய்தியைப் பரப்பி, இந்த பீதியை சாமானிய மக்களிடம் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இதைத் தவிர, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ அல்லது நேர்மறையான செய்திகளையோ மக்களிடத்திலே பரப்புரை செய்ய ஆளும் அரசுகள் முற்றிலும் தவறியுள்ளது. இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்திய ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முறைப்படி, இந்த வைரஸ் தொற்று வராமல் தடுப்பதற்கும், வெகுவாக கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் தரமான மருந்துகள் உள்ளன. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிய பொழுது, ஆங்கில மருத்துவ முறையால் அதை கட்டுப்படுத்த முடியாத சூழலில், அதை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கும், குணமாக்குவதற்கும் நம்முடைய பாரம்பரிய முறைப்படி வழங்கப்பட்ட நிலவேம்பு கசாயம் பயன்பட்டதைப்போல, இந்த கரோனா வைரஸ் தாக்குதலுக்கும் ஆயுர்வேத, சித்த மருந்துகளை இலவசமாக வழங்கி, வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க தேவையான முயற்சிகளை உடனடியாக தமிழக அரசு எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், அனைத்து பேருந்துகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், அங்காடிகள், மருத்துவமனைகள் போன்ற முக்கிய இடங்கள் அனைத்திலும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அனைத்து இடங்களிலும் வீரியமுள்ள தரமான கிருமி நாசினியை ஒவ்வொரு மணிநேர இடைவெளியில் முறையாக தெளித்து பராமரிக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும், பொதுமக்களுக்கு கையை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி திரவங்கள் கிடைப்பதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட 'எண் 95' என்கிற முகக்கவசம் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அல்லது இந்த முகக்கவசம் சந்தையில் குறைந்த விலையில் பொதுமக்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைந்து எடுக்க வேண்டும். ஏனெனில், இந்த முகக்கவசங்கள் தற்போது சந்தையில் சில சமூகவிரோதிகள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். அத்தகைய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த அரசு முன்வர வேண்டும்.

இதுவரை, மாநிலம் முழுவதும், 300 படுக்கையறைகள் கொண்ட வார்டு மட்டுமே தயார் செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, இந்த நோய் தாக்குதல் பற்றிய போதுமான அறிவை இந்த அரசு பெற்றிருக்கவில்லை என்பதை இந்த அறிவிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

உலக சுகாதார நிபுணர்கள் வழிகாட்டும் அனைத்து முறைகளையும், இந்த அரசு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும். சாதாரண காய்ச்சலோ அல்லது சளியுடன் கூடிய இருமலோ இருப்பவர்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்து தர வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன்.

தமிழக மக்கள் கரோனா வைரஸ் பற்றிய தேவையற்ற அச்சத்தை தவிர்க்க வேண்டும். நம்பகத்தன்மையற்ற செய்திகளை நம்ப வேண்டாம். இந்தக் கரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள தங்களை தாங்களே தயார் செய்து கொள்வதைத் தவிர, இந்த கையாலாகாத அரசுகளை நம்பி எந்த பயனும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழக மக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் என்னவென்றால், தேவையில்லாமல் வெளியூர் பிரயாணம் மேற்கொள்வது, அதிக மக்கள் சந்திக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். காய்கறிகள், பழங்கள், மாமிசங்கள் உள்ளிட்டவைகளை வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து கழுவி, பின்பு பயன்படுத்தவும். இரவு நேரங்களில், படுக்கைக்கு செல்லும் முன் வெதுவெதுப்பான வெந்நீரில் கல் உப்பு சேர்த்து வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் கொப்பளித்துவிட்டு பின் படுக்கைக்குச் செல்லவும்.

வயது முதிர்ந்தவர்களே இந்த நோய் தாக்குதலுக்கு அதிகமாக பாதிக்கப்படுவதால், அத்தகையோர் தற்காலிகமாக பொது இடங்களுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காற்றை விட, தரை மார்க்கமாகவே இந்த வைரஸ் தொற்று பரவும் என்பதால்; வீடு மற்றும் இருப்பிடங்களின் தரைப்பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும். இருமல், தும்மல் வரும்போது, கைக்குட்டையின் உதவியோடு, மூக்கு மற்றும் வாய்ப்பகுதிகளை மூடிக்கொள்ளவும். செல்லப் பிராணிகள் மற்றும் கால்நடைகளுடன் பழகும் சூழ்நிலை ஏற்பட்டால், உடனடியாக கையை, சாதாரண சோப்பு மூலம் நன்றாக சுத்தம் செய்துகொண்டாலே போதுமானது.

ஐஸ்கிரீம், குளிரூட்டப்பட்ட பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ நோய் தொற்றின் அறிகுறி தெரிந்தவுடனே உரிய மருத்துவரை நாடி சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். யாருக்காவது இந்த நோய் தொற்றின் அறிகுறியைப் பற்றி உங்கள் கவனத்திற்கு தெரியவந்தால் 24 மணிநேர உதவிக்கு 044 - 2951 0400, 044 - 2951 0500 என்ற எண்களுக்கு உடனடியாக தொடர்புகொள்ளவும்.

காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பொதுமக்கள் மத்தியில் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுகிறேன். கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் உங்கள் பகுதியில் யாருக்கேனும் தென்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, தேவையான மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யவும். சுற்றுப்புறங்களை சுகாதாரமாக பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து பணியாற்ற அன்போடு வேண்டுகிறேன்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x