

உலக அளவில் கரோனா வைரஸால் ஏற்பட்டுவரும் பாதிப்பு, உலக நாடுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளால் அச்சம் ஆகியவற்றால் இந்தியப் பங்குச்சந்தை இன்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் வர்த்தகத்தின் இடையே 3,304.30 புள்ளிகள் அளவுக்குக் குறைந்தது.. இருப்பினும் வர்த்தகத்தின் முடிவில் 2,919.26 புள்ளிகள் சரிந்து 32,778.14 புள்ளிகளில் நிலைப் பெற்றது. ஒரேநாளில் சென்செக்ஸ் 8.18 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
தேசியப்பங்குச்சந்தை நிப்டியில் 868.25 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 9,590 புள்ளிகளில் முடிந்தது 8.90 சதவீதம் சரிந்தது.
கடந்த 9-ம் தேதி இதேபோன்ற மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில் இந்த வாரத்தில் 2-வது முறையாக பெரும் சரிவை எதிர்கொண்டது. சமீபகாலங்களில் பெரும் முன்னேற்றத்தை அடைந்த பங்குச்சந்தை இந்த வாரத்தில் மட்டும் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
சென்செக்ஸ், நிப்டியும் இதுவரை இல்லாத அளவுக்கு ஜனவரி 14-ம் தேதி உச்ச புள்ளிகளை அடைந்தன. ஆனால், ஆனால், இன்று கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது
பங்குச்சந்தையில் இன்று ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதி ரூ. 7லட்சம் கோடி இழப்பு எனக் கடந்த 72 மணிநேரத்தில் ரூ.18 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் மிகப்பெரும் தொற்று என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததையடுத்து உலகச் சந்தைகள் பெரும் அச்சமடைந்தன. மேலும் உலகளவில் கரோனாவினால் ஏற்பட்டு வரும் பாதிப்பைப் பார்த்தும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியாததைப் பார்த்தும் அச்சமடைந்துள்ளன.
அமெரிக்காவில் பரவும் கரோனா வைரஸ் குறித்துக் கவலையடைந்த அதிபர் ட்ரம்ப், பிரிட்டன் தவிர்த்து எந்த ஐரோப்பிய நாட்டுக்கும் யாரும் அடுத்த 30 நாட்களுக்குச் செல்ல தடைவிதித்தார். உலகளவில் நாடுகள் இதுபோன்ற போக்குவரத்துத் தடைகளை விதித்தால் சர்வதேச பங்குச்சந்தைகள் பெரும் கலக்கமடைந்து, உலகச்சந்தை சரிவை நோக்கி நகர்கின்றனவா என அச்சத்தில் வீழ்ச்சி அடைந்தன.
மும்பைப் பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கியின் பங்குகளின் மதிப்பு மிகப்பெரிய இழப்பை(13சதவீதம்) சந்தித்து. அடுத்தபடியாக ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, டிசிஎஸ், டைட்டன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் இழப்பில் முடிந்தன. மேலும், ரியல்எஸ்டேட், உலோகம், வங்கித்துறை, நிதித்துறை, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளும் வீழ்ச்சி அடைந்தன.