

கரோனா வைரஸ் பயத்துக்கு நோ சொல்லுங்க, கரோனாவை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு யெஸ் சொல்லுங்கள் என்று பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள், உலகம் முழுவதும் ஒருலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் குறைந்த அளவே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த கரோனா வைரஸ் கடந்த சில நாட்களாகத் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 73 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கரோனா வரைஸைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களைச் செய்து வரும் மத்திய அரசு, விமானநிலையங்களில் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்த பின்பே பயணிகளை அனுமதிக்கிறது. ஏப்ரல் 15-ம் தேதிவரை வெளிநாட்டு பயணிகளுக்கு விசாவையும் ரத்து செய்து, கரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் கரோனோ வைரஸ் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ட்விட்டரில் பிரதமர் மோடி கூறுகையில், " கரோனா குறித்த அச்சத்தால், கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகள், மத்திய அமைச்சர்கள், பன்முக நடவடிக்கைகளை, ஆக்கப்பூர்வமான முறையில் மக்களின் பாதுகாப்புக்காக எடுத்து வருகின்றன.
வெளிநாட்டினருக்கு விசாக்களை ரத்து செய்தல் முதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துவது வரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனாவுக்கும், பயத்துக்கும் மக்கள் நோ சொல்லுங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு யெஸ் சொல்லுங்கள்.
அடுத்துவரும் நாட்களில் மத்திய அரசில் உள்ள எந்த அமைச்சரும் வெளிநாட்டுக்குச் செல்லமாட்டார்கள். ஆதலால் அவசியமின்றி மக்கள் யாரும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டாம். கரோனா வேகமாகப் பரவுவதைத் தடுக்க வேண்டும், அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆதலால், மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்துவிடுங்கள் " எனத் தெரிவித்தார்