

ஈரானில் சிக்கியுள்ள இந்திய யாத்ரீகர்களையும், மாணவர்களையும் திரும்ப அழைத்து முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தகவல் அளித்தார்
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளைப் பாதித்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஈரானின் குவும் நகரில் ஆயிரத்து 100 யாத்ரிகர்கள், மாணவர்கள் சிக்கியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை அழைத்து வர என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் மக்களவையில் பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. ஈரானில் இதுவரை 6 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளார்கள். இதில் குவாம் நகரில் மட்டும் மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 1100 யாத்ரீகர்கள், மாணவர்கள் சிக்கியுள்ளார்கள்.
இவர்களை மீட்டு இந்தியா கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏற்கெனவே 58 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களையும் மீட்பது தொடர்பாக ஈரான் அதிகாரிகளிடம் பேசப்படும். ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு முறைப்படி பரிசோதனை செய்யப்பட்டபின் அவர்களை அழைத்து வர விமானமும் ஏற்பாடு செய்யப்படும்.
அதேபோல ஆயிரம் இந்திய மீனவர்களும் ஈரானில் சிக்கியுள்ளார்கள். இவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் கரோனா வைரஸ் பாதிக்கப்படாத பகுதிகளில் இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை
அதேபோல ஐரோப்பியாவில் நிலைமை மோசாக இருக்கிறது. அதிலும் இத்தாலியில் கரோனா வைரஸால் அங்கு நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. அங்கிருக்கும் இந்தியர்கள் மருத்துவப் பரிசோதனையில் கரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் அழைத்துவரப்படுவார்கள். அதேபோல பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களைப் பத்திரமாக அனுப்பி வைத்த நாடுகளையும் பாராட்ட வேண்டும்.
உலக அளவில் கரோனா வைரஸ் எவ்வாறு பரவி வருகிறது என்பதை, தொடர்ந்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துத் தலைமையில் செயலாளர்கள் குழு, அமைச்சர்கள் குழு கண்காணித்து வருகிறது''.
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கரோனா வைரஸால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதில் அளிக்கையில், "கரோனா வைரஸால் மக்களவை ஒத்திவைக்கப்படாது. அவ்வாறு எந்தத் திட்டமும் இல்லை. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு வேண்டுமானால் தடை விதிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.