

வூஹானில் சில முக்கிய நிறுவனங்கள் மட்டும் மீண்டும் பணியைத் தொடங்க சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 220 பேருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் -19 காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா அறிகுறி இருப்பவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்புக் காவல் அமைத்து, சீன அரசு சிகிச்சை அளித்து வருகிறது. சீனாவின் வூஹான் பகுதியில் முதன்முதலாக கரோனா கண்டறியப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த வூஹான் நகரமும் தனிமைப்படுத்தப்பட்டது. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள், உடனடி சிகிச்சை ஆகியவற்றால், சீனாவில் கரோனா தொற்று குறைந்துள்ளது. தினந்தோறும் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, நாளடைவில் குறைந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து அதிபர் ஜி ஜின்பிங் ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரத்தை முதன் முதலாகப் பார்வையிட்டிருந்தார். இந்நிலையில், சில முக்கிய நிறுவனங்கள் மட்டும் மீண்டும் பணியைத் தொடங்க சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
அடிப்படைத் தேவைகள், வைரஸைக் கட்டுப்படுத்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குத் தேவையான பொருட்கள், பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவை தொடர்பான நிறுவனங்கள் மட்டும் உடனடியாகத் தங்களின் பணியைத் தொடங்கி, உற்பத்தியை ஆரம்பிக்கலாம் என்று ஹூபெய் மாகாண அரசு தெரிவித்துள்ளது.
பிற நிறுவனங்கள் மார்ச் 20-ம் தேதிக்குப் பிறகு, வேலையைத் தொடர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.