

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கோவிட் -19வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி நேற்று தொடங்கியது.
கோவிட் - 19 வைரஸ் குறித்து ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கோவிட் -19 வைரஸ் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி 3 நாட்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த கண்காட்சி அரங்கில் கோவிட் - 19 வைரஸ் நோய் பாதிப்பு, வராமல் தடுப்பது எப்படி?, அறிக்குறிகள் என்ன? உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பேனர்கள் இடம் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவிட் -19 வைரஸ் குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
மேலும், தனியார் மருத்துவமணை உதவியுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை பரிசோதனை செய்கிறோம். ரயில் பெட்டிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை’’ என்றார்.