Published : 11 Mar 2020 04:37 PM
Last Updated : 11 Mar 2020 04:37 PM

கரோனா வைரஸால் யார் இறக்கிறார்கள்?- லேன்செட் ஆய்வு என்ன கூறுகிறது?

வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அவர்கள் இறக்கும் வாய்ப்பு அதிகம் என்று லேன்செட் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 220 பேருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் - 19 காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு கடந்த இரு மாதங்களாக பேசுபொருளாகியுள்ள கரோனா வைரஸ் பற்றிய வதந்திகளும் ஒருபக்கத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிக்கன் சாப்பிட்டால் கரோனா வரும், மது அருந்தினால் கரோனாவிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் போன்ற வதந்திகளுக்கு மத்தியில் மருத்துவ இதழான லேன்செட், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் இறக்கும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என்ற ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இறக்கும் வாய்ப்பு அதிகம் என்று அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லேன்செட் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

“வயதானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் செப்சிஸ் (உடலில் இயங்கும் முக்கிய பாகங்கள் செயல்படாத வண்ணம் பாதிப்பு ஏற்படும்) போன்ற நோய்கள் எளிதாக அவர்களைத் தாக்கும்.

மேலும், வயது மூப்பு காரணமாக வயதானவர்களின் உடல் நிலையில் போதிய எதிர்ப்பு சக்தி இல்லாததால் சுவாசக் கோளாறுகள், மூளை, இதயம் போன்றவை அதிகம் பாதிப்படையும்.

கரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களில் உடலில் இவ்வைரஸ் சுமார் 20 நாட்கள் வரை இருந்தது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்தவர்களில் இவ்வைரஸ் அவர்கள் இறப்பு வரை அவர்களது உடலில் இருக்கும்.

காய்ச்சலின் சராசரி காலம் கரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களுக்கு சுமார் 12 நாட்கள் நீடிக்கும். கரோனா வைரஸால் இறந்தவர்களுக்கு இந்தக் கால அளவே காய்ச்சல் நீடிக்கிறது. ஆனால், இருமல் கரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களுக்கு இறுதி வரை இருக்கிறது. கரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களில் 45% பேருக்கு இன்னும் இருமல் நீடிக்கிறது.

கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு சுமார் 13 நாட்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கிறது. ஆனால், இறந்தவர்களுக்கு சுவாசக் குறைபாடு இறுதி வரை நீடிக்கிறது’’.

இவ்வாறு லேன்செட் தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்சிகள் மூலம் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, கரோனா வைரஸைப் பற்றிய தேவை இல்லாத பயத்தை நீக்கி தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி நோயற்ற வாழ்வில் பயணிப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x