Published : 11 Mar 2020 04:09 PM
Last Updated : 11 Mar 2020 04:09 PM

கரோனா தடுப்பு: பன்முக நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கரோனா வைரஸ் தடுப்புக்கான பன்முக நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (மார்ச் 11) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய் அச்சுறுத்தல் இன்று நாடு முழுவதும் உருவாகியுள்ளது. மிக எளிதில் பரவும் தன்மை கொண்ட கரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பன்முகத்தன்மையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கரோனா பாதிப்பு தொடர்பாக அண்மையில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மாநிலம் முழுவதும் 1,225 பேருக்கு பூர்வாங்க சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 72 பேருக்கு ரத்த மாதிரி உள்ளிட்ட உயர் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், ஐந்து பேருக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவர்கள் தீவிர சிகிச்சையில் கண்காணிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சரின் மற்றொரு அறிவிப்பில், மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 300 தனிமைப்படுத்தபட்ட படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக என பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் மட்டும் போதுமானதல்ல என சுட்டிக்காட்ட விரும்புவதோடு, நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த முறையிலான பன்முக நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

நோய் கண்டறிவதற்கான சோதனைகளில் ஒருவருடைய சளி மற்றும் ரத்த மாதிரி உள்ளிட்டவற்றை பரிசோதிப்பதற்கான வசதி தற்போது சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மட்டுமே உள்ளது. தேனி மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்படுவதாகக் கூறியிருந்த மாநிலத்தின் இரண்டாவது சோதனை மையமும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை அதிகமான எண்ணிக்கையில் நோயாளிகளின் சளி, ரத்த மாதிரி உள்ளிட்டவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டுமெனில் அவற்றை மகாராஷ்டிரா மாநிலம் புனே நகருக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலையே தற்போது உள்ளது. எனவே நோய் கண்டறிவதற்கான பரிசோதனை மையங்களை உடனடியாக மாநிலத்தின் பரவலான இடங்களில், வாய்ப்பிருந்தால் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவிலேனும் அமைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நோய் கண்டறியப்பட்டுள்ளவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களும் மாநிலத்தின் பல இடங்களில் ஊரகப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். கரோனா நோய் வந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் செயற்கை சுவாசம் அளிக்க தேவைப்படும் வென்டிலேட்டர்களை தேவையான அளவில் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளின் பராமரிப்பையும், கட்டமைப்பையும் மேம்படுத்திட வேண்டும். அண்மையில் புதியதாக உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதால், அவற்றின் சார்பிலும் கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு உடைகள் போல் தமிழக மருத்துவர்களுக்கும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையனைத்திற்கும் உரிய நிதியை உடனடியாக தமிழக அரசு ஒதுக்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல கரோனா வைரஸ் பாதிப்பால், முகத்தில் அணியும் முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கூடுதல் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. எனவே முகக் கவசங்கள் குறைந்த விலையிலும், தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் பிரதானமாக கூடுகிற இடங்களான பேருந்து, ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தொடர்ச்சியாக நோய்த் தடுப்பு மருந்துகளை தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தற்போது தொலைபேசிகளில் அழைப்பை மேற்கொள்ளும்போது கரோனா நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவிப்பு ஆங்கிலத்தில் வருவதை தமிழிலும் அறிவிக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பிரச்சினை தீரும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள் மற்றும் கேளிக்கை மற்றும் விளையாட்டு மைதானங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறும் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்தும், குறிப்பாக 5-ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு பள்ளி ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து விடுமுறை அளிப்பது குறித்தும் தமிழக அரசு உரிய முறையில் ஆலோசிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஏனெனில் கரோனா நோய் மிக எளிதாக பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால், நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதிலும், நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் முனைப்புடன் கூடிய நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கரோனா வைரஸை தடுப்பதற்கு கேரள அரசு மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் போல், தமிழக அரசும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் உள்ளிட்ட அனைத்து வர்க்க - வெகுஜன அமைப்புகளும் கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்" என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x