

கரோனா வைரஸ் பரவுவது குறித்த உலகளாவிய அச்சங்களுக்கு மத்தியில், இத்தாலி மற்றும் ஸ்பெயினிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சிலி சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது சீனாவில் கரோனா பாதிப்பின் தாக்கம் முன்பிருந்த வேகத்தை விடக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
எனினும், உலக நாடுகளில் அதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
கரோனா வைரஸிலிருந்து அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சீனாவிற்கு வெளியே உள்ள ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் முதலிடங்களில் இத்தாலியம் ஸ்பெயினும் உள்ளன. இந்த வைரஸ் இத்தாலியில் 631 பேரைக் கொன்றது. செவ்வாய்க்கிழமை மட்டும் 168 பேர் பலியாகினர். 10,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 36 இறப்புகள் பதிவாகியுள்ளன.
சிலியில் இதுவரை 17 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிலி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சிலி சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "ஸ்பெயினுக்கும் இத்தாலிக்கும் பயணம் செய்த பிறகு, சிலி எல்லைக்குள் நுழையும் மக்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இந்த நாடுகளில் இருந்து வரும் மக்கள் அதிக ஆபத்துள்ள பயணிகள் என வகைப்படுத்தப்படுவார்கள். இப்பயணிகள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் சிலி சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்துள்ளது.