

தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை உலகம் முழுவதும் சுமார் 4,299 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “உலகம் முழுவதும் கோவிட் - 19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 4,299 ஆகப் பதிவாகியுள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 220 பேருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் - 19 காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று செய்தி வெளியானது.
கோவிட் காய்ச்சலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட் - 19 பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
சீனாவில் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரலாற்றிலேயே கோவிட்- 19 காய்ச்சல் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய தொற்று நோயாக மாறி அச்சுறுத்தல் விளைவித்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால், இது கட்டுப்படுத்தக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.