Last Updated : 10 Mar, 2020 10:19 PM

 

Published : 10 Mar 2020 10:19 PM
Last Updated : 10 Mar 2020 10:19 PM

கோவிட்-19 வைரஸிருந்து தற்காத்துக்கொள்ள, தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பிரதிநிதித்துவப் படம்.

கரோனா வைரஸுக்கு இதுவரை உலகில் எந்தவிதமான தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், கரோனா வராமல் தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு வழிமுறைகள், தடுப்பு முறைகள் இருக்கின்றன. அவை என்ன என்பதைப் பார்க்கலாம்.

கோவிட்-19 வைரஸிருந்து தற்காத்துக்கொள்ளவும், தடுக்கவும் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொருவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை

  • ஆல்கஹால் கலந்த கை சுத்தம் செய்யும் திரவம் அல்லது சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இதை அடிக்கடி செய்யும்போது கைகளில் வைரஸ் ஒட்டியிருந்தால் அவை கொல்லப்படலாம்.
  • யாரேனும் ஒருவர் இருமினாலோ அல்லது தும்மினாலோ குறைந்தபட்சம் அந்த நபரிடம் இருந்து ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். அந்த நபர் இருமல், தும்மலில் இருந்து தெறிக்கும் சிறிய துளிகளைக் கூட சுவாசித்தால் அந்த நபருக்கு கோவிட்-19 இருக்கும்பட்சத்தில் நமக்கும் கோவிட்-19 தாக்கக்கூடும்.
  • கைகளைக் கொண்டு கண்கள், மூக்கு, வாய் பகுதிகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். நமது கைகள் எங்கெல்லாம் படுகிறதோ அந்த இடத்திலிருந்து வைரஸ் இருந்தால் அது ஒட்டிக்கொள்ளும். கைகளில் வைரஸ் ஒட்டிக்கொண்டபின், சுத்தம் செய்யாமல் கண்களை, மூக்கை, வாய் பகுதியைத் தொட்டால் உடலில் சென்று கோவிட்-19 வைரஸ் தாக்கக்கூடும்.
  • உங்களைச் சுற்றி இருப்பவர்கள் நன்கு சுவாசிக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டை, டிஷ்யூ பேப்பர் ஆகியவை மூலம் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த டிஷ்யூ பேப்பரை உடனடியாக குப்பைத் தொட்டியில் போட்டுவிட வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நலனுக்காக நாம் இந்தப் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • உடல்நிலை சீராக இல்லையென்றால் வீட்டில் இருக்க வேண்டும். காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம் இருந்தால் மிக விரைவாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுதல் அவசியம்.
  • கோவிட்-19 அதிகமாகப் பரவும் இடங்கள் குறித்து அவ்வப்போது அறிந்திருத்தல் அவசியம். இதுபோன்ற இடங்களுக்கு வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் பயணிக்காமல் இருப்பது அவர்களைத் தற்காத்துக்கொள்ள உதவும்.

யாருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது?

இப்போது நடந்துள்ள முதல்கட்ட ஆய்வுகளின்படி வயதில் மூத்தோர், ஏற்கெனவே நோய்களுக்குச் சிகிச்சை எடுத்து வருபவர்கள். அதாவது ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள், இதய நோய், நுரையீரல் நோய் இருப்பவர்கள், புற்றுநோய், நீரழிவு நோய் இருப்பவர்கள் ஆகியோருக்கு கோவிட் -19 அதிகமாகத் தொற்ற வாய்ப்பு உள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன் தருமா?

இல்லை. நிச்சயமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வைரஸ்களுக்கு எதிராகப் பயன் தராது. ஆன்டிபயாட்டிக் மருந்து, பாக்டீரியாவுக்கு எதிராக மட்டுமே செயல்படும். கோவிட்-19 என்பது வைரஸால் உருவாவது. ஆதலால் ஆன்டிபயாட்டிக் வேலை செய்யாது. கோவிட்-19 வைரஸுக்குத் தடுக்கவோ, சிகிச்சைக்கோ ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தக்கூடாது. பாக்டீரியா தொற்றுக்குக் கூட மருத்துவர்கள் ஆலோசனையின் அடிப்படையில்தான் சிகிச்சை எடுக்க வேண்டும்.

கோவிட்-19 வைரஸைத் தடுக்கவோ, தீர்க்கவோ ஏதாவது சிகிச்சை அல்லது மருந்துகள் இருக்கிறதா?

இப்போதுள்ள ஆய்வுகளின்படி கோவிட்-19 வைரஸைத் தடுக்க எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை. அதற்கான சிகிச்சை முறைகளும் இல்லை. மருந்துகள் இருப்பதற்கான ஆதாரங்களும் இல்லை.

கோவிட்-19 வைரஸ் சிகிச்சைக்கு ஏதேனும் தடுப்பூசி, மருந்துகள், சிகிச்சை இருக்கிறதா?

இப்போது வரை கோவிட்-19 வைரஸுக்குத் தடுப்பூசி, மருந்துகள், சிகிச்சை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அறிகுறியில் இருந்து மீள்வதற்கு வேண்டுமானால் சிகிச்சை அளிக்க முடியும். அதேசமயம் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருந்து கவனிப்பது அவசியம்.

கோவிட்-19 வைரஸைத் தடுக்கவும் பிரத்யேகமான தடுப்பு மருந்துகள், கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x