கரோனா வைரஸும் மூட நம்பிக்கைகளும்: பூண்டு சாப்பிட்டால் தடுக்க முடியுமா? செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா?

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அது தொடர்பான மூட நம்பிக்கைகளும், வதந்திகளும் சேர்ந்து வலம் வருகின்றன. அது குறித்த சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.

கொசுக்கள் மூலம் கரோனா வைரஸ் பரவுமா?

சமீபத்திய ஆய்வுகளின்படி கோவிட்-19 வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது என்பதற்கான எந்தவிதமான சான்றும், தகவலும் இல்லை. கோவிட்-19 என்பது சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் வைரஸ். அதாவது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்முதல், இருமுதல் ஆகியவற்றின்போது தெறிக்கும் துளிகள் மூலம் அதை மற்றவர் சுவாசிக்க நேர்ந்தால் அந்த வைரஸ் அவருக்குப் பரவும். ஆதலால், கோவிட்-19 வைரஸிருந்து தற்காத்துக்கொள்ள சிறந்தவழி கைகளை சோப்பு மற்றும் ஆல்கஹால் கலந்த சுத்தம் செய்யும் திரவம் மூலம் கழுவ வேண்டும்

உடலில் ஆல்கஹால் அல்லது குளோரினைத் தெளிப்பதன் மூலம் கரோனா வைரஸைக் கொல்ல முடியுமா?

இல்லை. உடலில் ஆல்கஹால் அல்லது குளோரினைத் தெளித்தாலும் கரோனா வைரஸைக் கொல்ல முடியாது. அவ்வாறு ஏதாவது செய்தால் அது உடுத்தும் ஆடைக்கும், தோல் பகுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குளோரின், ஆல்கஹால் இரண்டும் தரைதளத்தில் கிருமி நாசினியாகப் பயன்படும். ஆனால், அதை முறைப்படி பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மூலம் கரோனா வைரஸ் பரவுமா?

சமீபத்திய ஆய்வுகளின்படி வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய், பூனை ஆகியவை மூலம் கோவிட்-19 பரவுகிறது என்பதற்கான சான்று இல்லை. வீட்டு வளர்ப்பு விலங்குகளுடன் விளையாடிய பிறகு, நமது கைகளை சோப்பு, தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். அதேசமயம், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஈகோலி, சல்மோன்னல்லா போன்றவை மனிதர்களுக்கு வரக்கூடும்.

கோவிட்-19 வைரஸைத் தடுக்க நிமோனியாவுக்குப் பயன்படுத்தும் தடுப்பூசிகளைப் போடலாமா?

இல்லை. நிமோனியா, நிமோகோக்கல் தடுப்பூசி, ஹேமோபிலஸ் இன்ப்ளூன்ஸா டைப் பி போன்ற தடுப்பூசிகளை கோவிட்-19 வைரஸைத் தடுக்கப் பயன்படுத்த முடியாது. இந்த கோவிட்-19 வைரஸ் புதிதானது. இதைத் தடுக்க புதிதாகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளைப் பூண்டு சாப்பிடுவதால் கோவிட்-19 வைரஸைத் தடுக்க முடியுமா?
உடலுக்குச் சத்தானது வெள்ளைப் பூண்டு. அதன் மூலம் கோவிட்-19 வைரஸைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை

கோவிட்-19 அதிகமாக முதியோரைத் தாக்குமா அல்லது இளம் வயதினரைத் தாக்குமா?

கோவிட்-19 வைரஸ் மூலம் அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம். ஆனால், சிலர் ஏற்கெனவே நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். உதாரணமாக ஆஸ்துமா, நீரிழிவு, இதய நோய், ரத்தக்கொதிப்பு ஆகிய நோய்களுக்கு மருந்து, மாத்திரை சாப்பிடுபவர்கள் எளிதாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கோவிட்-19 வைரஸைத் தடுக்குமா?
இல்லை, ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் மூலம் கோவிட்-19 வைரஸைத் தடுக்க முடியாது. பாக்டீரியாவுக்கு எதிராக மட்டுமே ஆன்ட்டிபயாடிக் செயல்படும். கோவிட்-19 வைரஸுக்கு எதிராக ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது

கோவிட்-19 வைரஸைத் தடுக்க பிரத்யேக மருந்து இருக்கிறதா அல்லது சிகிச்சை முறை இருக்கிறதா?

இப்போதுவரை கோவிட்-19 வைரஸைத் தடுக்க எந்தத் தடுப்பு மருந்தும் இல்லை. சிகிச்சை முறையும் இல்லை. அதன் அறிகுறிகளுக்குத் தேவையான சிகிச்சையும், கவனிப்பும் தரப்படும். தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சில பிரத்யேக சிகிச்சை முறை குறித்த ஆய்வாளர்கள் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆதாரம்: உலக சுகாதார அமைப்பு(WHO)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in