

கோவிட்-19 அச்சத்தால் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், மற்ற 8 பேர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் ஆஜராகினர்.
கேரளாவில் கோவிட்-19 மற்றும் பறவைக் காய்ச்சல் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், விசாரணைக்கு வந்த சதீஸன், பிஜின் குட்டி, சந்தோஷ் சமி, ஜித்தன் ஜாய், தீபு, மனோஜ் ஆகியோர் முகக் கவசம் அணிந்து வந்தனர்.
இந்நிலையில், இன்றைய விசாரணைகயில் கோத்தகிரி கிராம நிர்வாக அலுவலர் மோகன்குமார் சாட்சி அளித்தார்.
அவரது வாக்கு மூலத்தை மாவட்ட நீதிபதி வடமலை பதிவு செய்துகொண்டார். இன்று மேலும் 5 சாட்சிகளின் விசாரணை நடக்கவுள்ளது.