

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயதுச் சிறுவனுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனால் அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கான சோதனையில் கரோனா தொற்று இல்லை என உறுதியானதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் சுகாதாரத்துறை அமைச்சகம் கடும் கட்டுப்பாடுகளை, வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கு அளித்து அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 44 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அறிகுறியுடன் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை உடனடியாகக் கண்டறியவும், பயணிகளைப் பரிசோதிக்கவும், அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் விமான நிலையங்களில் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் ஓமனிலிருந்து வந்த நபர் ஒருவர் கரோனா வைரஸ் அறிகுறியுடன் சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் அனுமதிக்கப்பட்ட இரு தினங்களில் அமெரிக்காவிலிருந்து காய்ச்சலுடன் வந்த 15 வயதுச் சிறுவனுக்கு கரோனா தொற்று அறிகுறியிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து தனி வார்டில் சிறுவனை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுவனின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று முடிவு வந்தது. இதையடுத்து இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.