

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்க புதுச்சேரியில் 200 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் தயார் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், சுகாதாரத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ''புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சை அளிப்பதற்காக புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் தலா 10 படுக்கைகள் வீதம் மொத்தம் 200 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்வதற்கு ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 மணி நேரத்தில் முடிவுகள் தெரியவரும். அதேபோல் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கரோனா வைரஸை எதிர்கொள்ள மாநில அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் உள்ள மருந்தகங்களில் மாஸ்க் பதுக்கல் மற்றும் விலை அதிகமாக விற்பதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.