Published : 09 Mar 2020 06:57 PM
Last Updated : 09 Mar 2020 06:57 PM

கரோனா நெருக்கடி: 10 கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் பதில்கள்

கரோனா வைரஸ் பாதிப்புக்கு முகக் கவசம் அணிய வேண்டுமா? எப்படிப் பரவுகிறது? வெப்ப நாடுகளில் பரவாதா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விரிவாகப் பதிலளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கரோனா வைரஸ் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில்:

மஸ்கட்டிலிருந்து வந்த நபர் முதல் சோதனையின்போது தெரியாமல் போனது எப்படி?

நல்ல கேள்வி. கரோனா வைரஸின் தன்மை என்னவென்றால், நோய்த்தொற்று இருக்கும்போது அறிகுறி தெரியாது. ஆனால் கோவிட்-19 என்பது இருமல் காய்ச்சல் வந்து மூச்சுத்திணறல் வந்த பிறகுதான் நோய் பரவும். அதன் பின்னர் யார் தொடர்பில் இருக்கிறாரோ அவருக்குப் பரவும். இதன் மூலம் நாம் எளிதில் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

கரோனா வைரஸ் சம்மர் சீசனில் பரவ வாய்ப்பு குறைவா?

இதுபோன்ற கேள்விகளைத் தொடர்ச்சியாக நீங்கள் வைப்பதால் சொல்கிறேன். இது புது வைரஸ் என்பதால் மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். உலக சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கேட்டபோது அவர்கள் சொல்வது, படிப்படியாக அந்த வைரஸ் பரவும்போது இதுபோன்ற வெப்பநிலை உள்ள நாடுகளில் அதன் வீரியம் சற்று குறைவாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதுவும் அதிகாரபூர்வ தகவல் இல்லை. அப்படி வந்தால் கட்டாயம் சொல்வோம்.

கிருமிநாசினிகளின் பற்றாக்குறை உள்ளதே?

சோப்பு மட்டும் போதும். நாம் வெளியில் சென்றுவிட்டு வந்தால் கைகளைச் சாதாரண சோப்பு போட்டுக் கழுவினாலே போதும். கிருமிநாசினி திரவம் போட்டுத்தான் கை கழுவ வேண்டும் என்பதில்லை. தியேட்டரில், பள்ளி, கல்லூரிகளில், ஷாப்பிங் மால்களில் கண்ட இடத்தில் கை வைப்போம் என்பதால் அது அவசியம் என்கிறோம். இன்று அனைத்து இடங்களிலும் சோப்புகள் உள்ளன. அதைப் போட்டுக் கை கழுவினாலே போதும்.

எங்கெங்கு வார்டுகள் உள்ளன?

தமிழகம் முழுவதும் 300 படுக்கைகள் தயாராக உள்ளன. ரயில்வே மருத்துவமனையும் தயாராக உள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் பேசியுள்ளோம். முதல்வரும் நிதி பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று தேவையான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி இருக்கிறார்.

தற்போது வைக்கப்பட்டுள்ள நபர் எங்கெங்கு, யாரைப் பார்த்தார் என்பது அரசுக்குத் தெரியுமா?

இந்த விஷயத்தில் இதைத் தவிர்க்கலாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் பொதுமக்கள் பீதியடைய வாய்ப்புண்டு. எங்காவது நாங்கள் தவறினால் எங்களிடம் தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நபர் எங்கெங்கு போனார், யார் யாரைப் பார்த்தார் என்ற அனைத்துத் தகவல்களும் எங்களுக்கும் தெரியும். அந்தக் குடும்பத்திடம் அனைத்து விஷயங்களையும் கேட்டுள்ளோம்.

அதேபோன்று 8,500 பேர் தினமும் வருகிறார்கள். அவர்களை ஸ்க்ரீனிங் செய்யும் நடவடிக்கையில் அவர்கள் நிற்பதற்கே சங்கடப்படுகிறார்கள். ஆனாலும் நாம் அவர்களுக்குப் புரியவைத்து உரிய முறையில் செய்து வருகிறோம். நவீன உபகரணங்களை வாங்கி அதையும் பயன்படுத்தி வருகிறோம்.

தமிழகம் முழுதும் எவ்வளவுபேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?

தமிழகம் முழுவதும் மஸ்கட்டிலிருந்து வந்த ஒரே ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது. அறிகுறிகள் தெரியவந்தால் பயணம் செய்பவர்களை உடனடியாக தனிமைப்படுத்திவிடுகிறோம். ஆகவே பயணம் செய்து வரும் அனைவரும் பாதிக்கப்படுபவர்கள் அல்ல.

தமிழகத்தில் ஒரே ஒரு லேப் உள்ளது? வேறு ஏதேனும் உள்ளதா?

தமிழகத்தில் ஒரே ஒரு லேப் கிண்டியில் உள்ளது. அதை 48 மணிநேரத்தில் தயார் செய்து இயக்கி வருகிறோம். தேனியில் ஒரு லேபுக்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். விரைவில் அது தயாராகிவிடும்.

கரோனா காற்றில் பரவக்கூடியதா?

நேரடியாக இருமும்போதும், தும்மும்போதும் பரவக்கூடியது 20 சதவீதம். அதன் பின்னர் அவர் இருமிய, தும்மிய பகுதிகளைத் தொடுவது, அவர் உபயோகப்படுத்திய செல்போன் போன்ற பொருட்களைப் பயன்படுத்தும்போது அது 80 சதவீதம் பரவும்.

தடுக்கும் முறைகள் என்ன?

மற்ற நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் , சிங்கப்பூர், சீனா சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூறுவதும் அதுதான். மிக முக்கியமான விஷயம் கைகளைக் கழுவுவது. மற்றவர்கள் சொல்வது என்னவென்றால் கை கழுவுவதுதான் சிறந்த தடுக்கும் முறை. வெளியில் சென்றுவிட்டு வந்தால் கையைக் கட்டாயம் கழுவ வேண்டும் என்பதே அது. அடுத்ததாக பீதியடைய வேண்டாம். கரோனா வந்த அனைவரும் உயிரிழப்பது இல்லை.

இறப்பு முறை பார்த்தால் சீனாவிலேயே 2 லிருந்து 3 சதவீதம் மட்டுமே. பிற நாடுகளில் உயிரிழப்பு 100க்கு .2 சதவீதம் மட்டுமே. ஆகவே கரோனா வந்தாலே இறப்பு என்றில்லை. இதற்கான மருந்து இல்லையே தவிர அவருக்கான காய்ச்சலைக் குணப்படுத்தலாம். இருமலைச் சரி செய்யலாம். அதன் மூலம் சரியாகும் நிலைக்குக் கொண்டுவரலாம். கேரளாவில் சரி செய்துள்ளார்களே.

நோய் எதிர்ப்பு சக்தி, சில நோய்கள் இருந்தால் வரும் என்கிறார்களே?

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற சுவாசப்பிரச்சினை நோய் உள்ளவர்கள் அதற்கான மருந்தை எடுத்து கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அது குறையும்போது நோய்த் தொற்று ஏற்படலாம். ஆகவே அதைச் சரியாகப் பராமரிக்க வேண்டும்.

அதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இதுபோன்ற பிரச்சினை வரும் என்கிறார்கள் நிபுணர்கள். அதற்கேற்ற உணவு போன்றவற்றை சரியாக உட்கொள்ளவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். இதற்கு மேல் கேள்வியும் பதிலும் பொதுமக்களை குழப்பிவிடும் ஆகவே இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x