Last Updated : 19 Dec, 2014 11:08 AM

 

Published : 19 Dec 2014 11:08 AM
Last Updated : 19 Dec 2014 11:08 AM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 4

பிரிட்டிஷ் அரசால் தோஸ்த் முகமது நாடு கடத்தப்பட்ட அடுத்த வருடமே (1841) ஆப்கானிய இனத்தவர்கள், பாமியானில் இருந்த தோஸ்த் முகமதுவின் மகன் முகமது அக்பருக்குத் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்தனர். பிரிட்டனுக்கு எதிரான பலமான எதிர்ப்பையும்தான்.

வேறு வழியில்லாமல் காபூலில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது. ஆனால் ஆப்கனின் எல்லையை பிரிட்டிஷ் ராணுவத்தினர் தாண்டுவதற்கு முன்பே அவர்கள் (மொத்தம் 16,000 பேர்) படுகொலை செய்யப்பட்டனர்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் உதவி இல்லாமல் ஷுஜா ஷாவால் சில மாதங்களே ஆட்சியில் தாக்குப் பிடிக்க முடிந்தது. சில மாதங்களே ஆட்சி சுகத்தை அனுபவித்த அவர் உள்ளூர்வாசிகளால் கொலை செய்யப்பட்டார்.

பிரிட்டன் ஆவேசம் அடைந்தது. எத்தனை அவமானம்! காந்தஹாரிலும் பெஷாவரிலும் கூடாரம் அடித்திருந்த பிரிட்டிஷ் ராணுவம், காபூலுக்குள் நுழைந் தது. காபூலின் பெரிய அங்காடியை நெருப்புக்கு இரையாக்கியது.

தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்த பல்வேறு ஆப்கானிய இனத்தவர் ஓரணியில் திரளத்தொடங்கினார்கள். காபூல் கலவரங்களைத் தொடர்ந்து, 1834 ஏப்ரலில் முகமது அக்பர், காபூலை கைப்பற்றினார்.

இப்போது சமாதானத்தை விரும்பிய பிரிட்டன் அவர் தந்தை தோஸ்த் முகமதைக் காபூலுக்கு அனுப்ப, அவருக்கு ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்தார் மகன்.

கிட்டத்தட்ட ஒரு டஜன் வருடங்களுக்கு தோஸ்த் முகமதை அலட்சியம் செய்த பிரிட்டிஷ் அரசு, 1854-ல் மீண்டும் அவருடன் நல்லுறவு தொடரவேண்டும் என்று எண்ணியது. 1855-ல் இருதரப்பிலும் தூதரக உறவுகள் உருவாயின. பெஷாவர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. “உன் நண்பன் இனி எனக்கும் நண்பன். உன் எதிரி இனி எனக்கும் எதிரி” என்கிற அளவுக்கு ஒட்டுறவை வெளிப்படுத்தியது அந்த ஒப்பந்தம். சில வருடங்கள் கழித்து பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பகுதி காந்தஹாரில் தங்க அனுமதிக்கப்பட்டது. இரானி யர்களை எதிர்க்க இது உதவும் என்று கூறப்பட்டது.

சில வருடங்களுக்குப் பிறகு தோஸ்த் முகமது இறந்தார். அவரது மூன்றாவது மகன் ஷேர் அலி அவரது வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாட்டின் தெற்குப் புறத்தில், ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக எல்லைப்புற ஊடுருவல் செய்தது ஷேர் அலிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதைச் சரிப்படுத்திக் கொள்ள பிரிட்டனின் ஆலோசனையைக் கோரினார் ஷேர் அலி.

அதற்கு முந்தைய வருடம்தான் பிரிட்டனும் ரஷ்யாவும் ஓர் ஒப்பந் தத்தில் கையெழுத்து இட்டிருந்தன. இதன்படி ரஷ்யா தன் வடபகுதியில் உள்ள ஆப்கானிய எல்லைகளை மதிக்க வேண்டும்.

இந்த நிலையில் ஷேர் அலி கோரிக்கை வைத்தவுடன் பிரிட்டன் நினைத்திருந்தால் மேற்படி ஒப்பந்தத்தையே காரணம் காட்டி ரஷ்யாவை கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால் இது தொடர்பாக எந்த உறுதி மொழியையும் ஷேர் அலிக்கு அளிக்க மறுத்தது பிரிட்டன். இதில் கடுமையாக ஏமாற்றமடைந்தார் ஷேர் அலி.

அவருக்கு மேலும் பல சோதனைகள் காத்திருந்தன. 1878-ல் ரஷ்யா ஒரு தூதரகக் குழுவை காபூலுக்கு அனுப்பியது. இப்படி ஒரு குழுவுக்கு ஷேர் அலி அனுமதி அளித்திருக்கவில்லை. அதைப் பாதிவழியிலேயே திருப்பி அனுப்புவதற்காக (சமாதான முறையில்தான்) ஷேர் அலி மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.

உடனே பிரிட்டன் “எங்களது தூதுக்குழுவும் காபூலுக்கு அனுப்பப்படும்” என்றது. ஷேர் அலி விழித்துக்கொண்டார். ஏனென்றால் இதுபோன்ற தூதுக்குழுக்களின் முக்கிய நோக்கம் நல்லுறவை வளர்ப்பது அல்ல என்பதும், தனது மேலாண்மையை ஆப்கனில் வலியுறுத்திவிட்டுச் செல்வதே என்பதும் அவருக்குப் புரிந்திருந்தது. எனவே பிரிட்டிஷ் தூதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க மறுத்தார் ஷேர் அலி.

பிரிட்டனுக்கு இது ஒரு சவாலாக விளங்கியது. நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்பதுபோல் தனது குழுவை அனுப்பியது. ஆனால் கைபர் கணவாயின் கிழக்கு நுழைவாயிலில் அது நுழைய முற்பட்டபோது, ஆப்கன் படைகள் அதைத் திருப்பி அனுப்பி விட்டன.

இதை ஒரு மானப் பிரச்னையாகவே எடுத்துக் கொண்டார் பிரிட்டனின் வைஸ்ராய் லிட்டன் பிரபு. நாற்பதாயிரம் பேர் அடங்கிய பிரிட்டிஷ் ராணுவம், ஆப்கானிஸ்தானின் மூன்று பகுதிகளை முற்றுகையிட்டது.

பதைபதைத்துப்போன ஷேர் அலி, ரஷ்யாவின் உதவி கேட்க முயற்சி செய்தார். மாஸ்கோ சென்றார். ஆனால் அவரது முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. அங்கிருந்து திரும்பி வரும்போது மஸார்-இ-ஷெரிப் நகரில் அவர் இறந்தார்.

ஷேர் அலியின் மகன் யாகூப், நிலைமையை யோசித்து (நாட்டின் பெரும்பகுதியை பிரிட்டிஷ் படைகள் ஆக்ரமித்து விட்டி ருந்தன) பிரிட்டனுடன் ஓர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆப்கனின் வெளியுறவுக் கொள்கைகளை இனி பிரிட்டனே தீர்மானிக்கும் என்கிற அளவுக்கு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தமாக அது விளங்கியது.

இதைத்தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதிநிதிகள், காபூலில் தங்கத் தொடங்கினர். பிரிட்டனின் கட்டுப்பாடு கைபர் கணவாய் வரை நீடித்தது. தனது எல்லைப்பகுதிகள் பலவற்றையும் மறைமுகமாக பிரிட்டனுக்குத் தாரைவார்த்தது ஆப்கானிஸ்தான்.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x