Published : 26 Apr 2014 10:25 AM
Last Updated : 26 Apr 2014 10:25 AM

‘தானே’ புயல் நிவாரண நிதியில் முறைகேடு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

‘தானே’ புயல் நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு நடந்துள் ளதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த ஜி.விஜயன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011-ம் ஆண்டு வீசிய ‘தானே’ புயல் காரண மாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கின.

இந்நிலையில், புயலால் பாதிக் கப்பட்ட, 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நிவாரண நிதி வழங்கியது. அரசாணைப்படி சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே அந்த நிதி வழங்கப்பட வேண்டும். ஆனால், இதற்கு மாறாக மரக்காணத்தில் பெரும் பணக்காரர் களுக்கு, குறிப்பாக 100 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ளவர் களுக்குகூட நிவாரணநிதி வழங்கப் பட்டுள்ளது. உதாரணமாக, 138 ஏக்கர் நிலம் வைத்துள்ள ஒருவருக்கு ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் வழங்கியுள்ளனர். அதேபோல், 40 ஏக்கர் வைத்துள்ள ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 23 ஆயிரம், 33 ஏக்கர் நிலம் உள்ளவருக்கு 89 ஆயிரம் என பெரும் பணக்காரர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் இத்தகைய பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால், உண்மையிலேயே பாதிக்கப்பட்ட ஏழைகளான சிறு, குறு விவசாயிகளுக்கு அரசின் நிவாரண நிதி முறையாகக் கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு மனுவில் விஜயன் கூறியுள்ளார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x