

கோவா சர்வதேச திரைப்பட விழாவில், ‘வேவ்ஸ் ஃபிலிம் பஜார்’ பிரிவில், சிறந்த திரைப்பட அடையாள விருதை ‘ஆக்காட்டி’ திரைப்படம் பெற்றுள்ளது. படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெற்றனர்.
தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமுதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனதில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது. இதில் ஆண்டனி, முல்லையரசி, சிறுவன் சுபாஷ் நடித்துள்ளனர்.
இசக்கி ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார். மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியாக இருக்கிறது.