

ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜீத் மஜீதி இந்தியப் பின்னணியில் எடுத்துவரும் 'பியான்ட் த கிளவுட்ஸ்' திரைப்பட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளநிலையில் இரண்டாவதாக இன்னொரு இந்தியப் பின்னணி சினிமாவை இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.
புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜீத் மஜீதி தற்போது அவர் இந்தியப் பின்னணியில் திரைப்படங்களை இயக்கிவருகிறார். இந்திய வாழ்வை அடிப்படையாகக் கொண்ட அவரது இரண்டாவது படத்திற்கு 'கோல்டு மைன்' எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி இயக்குநர் மஜீத் மஜீதி தெரிவித்ததாவது:
இந்தியாவின் ஒரு வித்தியாசமான சூழலில் எண்ணற்ற கலாச்சாரங்கள் உள்ளன. இதற்குள்ளாகவே ஏராளமான கதைகள் இருப்பதை நான் காண்கிறேன்.
இந்தியாவின் சூழல் வேறு எந்த நாட்டிடனும் ஒப்பிடக்கூடியதாக இல்லை என்பதே ஒரு மேஜிக். அம் மக்களின் இறந்துவிடாத ஆத்மா, வாழ்க்கை எவ்வளவு சிரமங்களோடு இருந்தாலும் அந்த வாழ்க்கைமீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை நம்ப முடியாதது.
இதுவே என் அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான உத்வேகத்தை அளித்தது, தங்கள் பாதையில் இருக்கும் தடைகளை மீறி ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளும் மேலெழுந்து வர முயல்கிறார்கள். அவர்களது முயற்சியின் வலிமையைத் தக்கவைத்துக்கொள்ளும் வாழ்க்கையை சித்தரிக்கும் படமாக இது இருக்கும்.
மீண்டும் ஷாரீன் மான்ட்ரீ கேடியா மற்றும் கிஷோர் அரோரா ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான நாமா பிக்சர்ஸ்ஸுடன் இணைந்துள்ள இயக்குநர், ''அது ஒரு நல்ல குழு. அவர்களது அணுகுமுறை மிகவும் தொழில்ரீதியாக உள்ளது'' என்று குறிப்பிடுகிறார்.
இப்படத்தில் பங்கேற்கும் திரைக்கலைஞர்களுக்கான தேர்வு இரண்டு மாதங்களில் இறுதிசெய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கும். 2018 ஆம் ஆண்டின் மத்தியில் 'கோல்ட் மைன்' திரைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில்ட்ரன் ஆப் ஹெவன், கலர் ஆப் பாரடைசோ, ஃபாதர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன்மூலம் இந்த ஈரானிய இயக்குநருக்கு உலகளாவிய புகழ் கிட்டியது குறிப்பிடத்தக்கது.