

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும், யானைகளை பராமரிக்கும் தமிழகத்தின் முதுமலை தம்பதிகள் பற்றிய ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணக் குறும்படத்துக்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்துள்ள கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உலக அளவில் திரைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி ஸ்டுடியோவில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், துணை நடிகர், நடிகை உட்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடித்து வெற்றிபெற்ற ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’பாடல், சிறந்த ஒரிஜினல் பாடல்பிரிவில் ஆஸ்கர் விருதின் பரிந்துரை பட்டியலில், இடம்பெற்றிருந்தது. ஏற்கெனவே ‘கோல்டன் குளோப்’ விருதை இப்பாடல் பெற்றிருந்ததால், இதற்கு ஆஸ்கர் விருதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது நேற்று வழங்கப்பட்டது. விருதை இப்பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி (மரகதமணி), பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் பலத்த கைதட்டலுக்கு இடையே பெற்றுக் கொண்டனர்.
இதன்மூலம், ஆஸ்கர் விருதைவென்ற 2-வது இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். கடந்த 2009-ல் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, தமிழகத்தின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதிகளான பொம்மன் - பெள்ளி குறித்த ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண குறும்படத்துக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை உதகையை சேர்ந்த கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். குனீத் மோங்கா தயாரித்துள்ளார். இருவரும் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.
குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் வாழ்த்து
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ஆஸ்கர் விருது வென்ற கலைஞர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி: ‘நாட்டு நாட்டு’ பாடல் இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவில் இருக்கும். இந்த பெருமையை பெற்றுத்தந்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்த ஆஸ்கர் விருதுகளால் இந்தியா மகிழ்ச்சி, பெருமை கொள்கிறது. கார்த்திகி கான்சால்வ்ஸ், குனீத் மோங்கா உள்ளிட்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
முதல்வர் ஸ்டாலின்: ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்திய மற்றும் ஆசியப் பாடல் என்ற சாதனையை ‘நாட்டு நாட்டு’ பாடல் படைத்துள்ளது. இந்த மகத்தான சாதனைக்காக கீரவாணி, சந்திரபோஸ், ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா, ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்ளிட்ட ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படம் மூலம் ஓர் இந்திய தயாரிப்புக்காக முதல்முறையாக ஆஸ்கர் விருதை 2 பெண்கள் வென்றுள்ளனர். படக்குழுவுக்கு வாழ்த்துகள்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி: ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணக் குறும்படம் மண் சார்ந்த கலாச்சாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சியின் முக்கியத்துத்தை எடுத்துக் காட்டியுள்ளது. வெல்க தமிழகம். ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது உலகத்தடத்தில் இந்திய சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரம்.
நடிகர் ரஜினிகாந்த்: கீரவாணி, ராஜமவுலி, கார்த்திகி கான்சால்வ்ஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பெருமைமிக்க இந்தியர்களுக்கு எனது வணக்கங்கள்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: நாட்டையே ஆடவைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.