Last Updated : 18 Dec, 2022 06:19 PM

 

Published : 18 Dec 2022 06:19 PM
Last Updated : 18 Dec 2022 06:19 PM

CIFF 2022 | ‘லக்கி சேன் சில்’ முதல் 'லீலாஸ் பிரதர்ஸ்' வரை: டிச.19-ல் என்ன படம் பார்க்கலாம்? - பரிந்துரைப் பட்டியல்

ஈரான் திரைப்படம் லீலா'ஸ் பிரதர்ஸ் படத்தில் ஒரு காட்சி.

Melchior the Apothecary (Apteeker Meichior) | Dir: Elmo Nuganen | Estonia | 2022 | 98' | WC

Six Digrees | 9.15 AM

வரலாற்றின் மத்திய காலக்கட்டம். பால்டிக் கடலில் கடற்கொள்ளையர்களிடமிருந்து ஒரு புகழ்பெற்ற மாவீரர் விடுவிக்கப்படுகிறார். ஆனால் அவரை யாரோ கொலை செய்துவிடுகிறார்கள். வீரனின் தலை துண்டிக்கப்பட்டு வாயில் காசுகள் அடைக்கப்பட்டுள்ளன. அதே நாளில் வாங்கிய தங்கச் சங்கிலியை காணவில்லை. குற்றத்தை விசாரிக்க, ஒரு ஆளைத் தேடுகிறார்கள். துடிப்பு மிக்க கற்றறிந்தவர்களிடம் பேசத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

அப்போது அவர்களுக்கு தெரிவது மருந்தாளுனர் மெல்சியோ என்ற இளைஞர். தனக்கு இடப்பட்ட துப்பறியும் பணியை ஆர்வத்தோடு செய்கிறார். மாவீரனின் கொலை குறித்த சில தடயங்கள் கிடைக்கின்றன. ஆனால் அந்த தடயங்கள் டொமினிகன் மடாலயத்திற்கு இட்டுச் செல்கின்றன. அதிர்ச்சியூட்டும் தொடர் ரத்தக்களரி கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த ரகசியத்துடன் தொடர்பு கொண்ட எவரும் மரணத்திற்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில், மருந்தாளுனர் தனது பயிற்சியாளரின் மீது சந்தேகம் கொள்கிறார், அவர் எதையோ மறைக்கிறார் என்பதும் தெரியவருகிறது.

ஒருவிதத்தில் வேறு காலகட்டம் என்பதால் நமது பொறுமையை சோதிக்கக்கூடும். ஆனால் ஒரு பழைய நகரம், கடலில் அக்கால கப்பல்கள், உயர்ந்து நிற்கும் கோட்டைகள் என பார்வையாளரை பழங்காலத்திற்கே அழைத்துச்செல்ல வேண்டும் என்பதில் உள்ள மெனக்கெடல் வியக்க வைக்கிறது. மாறுதலுக்காக வித்தியாசமான படம் ஒன்றை பார்க்க விரும்புபவர்களுக்கு ஒரு மருந்தாளுனர் கதாபாத்திரத்தைக் கொண்டு ஒரு மர்மக் கதையுலகத்திற்கு அழைத்துச் செல்லும் இயக்குநர் எல்மோ நுகனென் உழைப்பு முக்கியமானது.

ஈஸ்டோனிய தலைநகர் தாலினில் செயின்ட் கேத்தரின் மடாலயம், டேனிஷ் கிங்ஸ் கார்டன், டவுன் ஹால் சதுக்கம் மற்றும் பிக் ஜல்க் தெரு. குரேஸ்ஸாரே கோட்டையிலும் சில காட்சிகள் சர்ச்சைக்குரிய மதப்பிரச்சினையை படமாக்க ஒப்புக்கொண்டது படைப்பாளியை சரித்திரத்தை விவாதிக்க அனுமதிக்கும் ஒரு சுதந்திரம் என்பதாக எடுத்துக்கொள்ளலாம்.


Lucky Chan-Sil | (Chansilineum bokdo manhji) | Dir: Cho-hee kim | South Korea |2019 | 96'

Santham 10.15 PM

தொழில்நுட்பம், திரைக்கதையாக்கத்தில் படு விறுவிறுப்புடன் கூடிய நவீனத்தன்மை என்று கலக்கிவரும் கொரிய இயக்குநர்களுக்கு கொஞ்சம் மூளையின் நியூரான்கள் சற்று அதிகம் என்பதை உளமாற ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கரோனா காரணமாக பார்வையாளர்களை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது 'லக்கி சான் சில்' என்ற இந்த கொரிய திரைப்படம். 2019ல் வெளியானாலும் 2020 ஆண்டிலிருந்து தொடர்ந்து இடர்பாடுகள். தற்போது மீண்டும் வெளியாகி ஒரு புதுமையான கதையம்சம் மூலம் பார்வையாளர்களுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டது.

மிகவும் எளிய கதைதான். ஒரு சினிமா தயாரிப்பாளர் பெண்மணி. நிறைய படங்களை தனக்காக எடுத்து தந்துகொண்டிருந்த இயக்குநரின் மரணம் சான் சில் என்ற பெண்மணியின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடுகிறது. வேலை எதுவும் இல்லாதநிலையில் அடுத்தது என்ன? ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில்தான் ஒரு வீட்டில் வீட்டுவேலைகளை செய்ய ஒப்புக்கொள்கிறார். வேலை, பணம் மற்றும் அந்தஸ்தை இழந்ததால், சான்-சில் தனது தேவைகளைக் குறைத்துக்கொள்கிறார்.

புறநகர் பகுதியில் ஒரு சிறிய ஸ்டுடியோ குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, தனது இளம் தோழியும் நடிகையுமான சோஃபிக்கு துப்புரவாளராக வேலை செய்யத் தொடங்குகிறார். அங்கு ஒரு நல்ல மனிதரையும் சந்திக்கிறார். அவர் அந்த வீட்டிற்கு பிரெஞ்சு கற்றுக்கொடுக்க வந்தவர் அவர். அவருடனான பரிச்சயம் ஒரு மெல்லிய காதலுக்கு வழிவகுக்கிறது. ஆனால் முன்னாள் திரைப்பட தயாரிப்பாளரான சான் சில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறார். தான் இதுவரை ஒரு பரிசோதனை முயற்சி இயக்குநரின் படைப்புகளை தயாரித்து வந்ததால் வாழ்க்கையில் பேர்புகழைத் தவிர பெரிய லாபம் ஈட்டமுடியவில்லை என்பதையும் உணர்கிறார். திரையுலகில் மீண்டும் கால்பதித்து வெற்றிகரமான திரைக்கதைகளை உருவாக்க வேண்டும் என்ற ஆசையும் துளிர்விடுகிறது.

இன்னொரு புறம் பிரெஞ்சு ஆசிரியரின் அன்பான அணுகுமுறை வாழ்க்கையைப் பற்றி பார்வையை மெல்ல மாற்றுகிறது. இதற்கு பிறகு ஒரு வாழ்க்கையா என்ற விட்டேற்றியான மனநிலை அதை சற்றே தடுக்கிறது. பல திருப்பங்களைக் கொண்டிருந்தாலும் வாழ்க்கையில் எங்கு மனதிற்கு நெருக்கமாக அந்தத் திருப்பம் தொடங்குகிறது என்பதுதான் முக்கியம் இப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம்.

இதனை சொல்ல தனியே ஒரு அக்கறையுள்ள பேய் கேரக்டரை இயக்குநர் உருவாக்கியுள்ளார். உண்மையில் இது பேய் கதாபாத்திரம் அல்ல. மனசாட்சியின் ஏதோ ஒரு புள்ளியிலிருந்து வெளிப்படும் சர்ரியலிச பிம்பம். கொஞ்சம் அசந்திருந்தாலும் மெலோடிராமாவாக மாறுவதற்கான கூறுகள் எதிலும் இயக்குநர் சிக்கவில்லை. கறுப்பு நகைச்சுவையை நோக்கி திரைக்கதையின் விறுவிறு பயணத்தின் ஊடே வாழ்க்கையைப் பற்றிய முடிவெடுக்க வேண்டிய கொந்தளிப்பான தருணங்களை ஆராய்கிறது. ஆர்ப்பாட்டமின்றி ஆனால் பார்வையாளர்களிடம் வெடிச்சிரிப்புகளை ஏற்படுத்தி நம்பிக்கையின் கதையையும் இப்படம் உருவாக்கியுள்ளது.

Burning Days (Kurak Gunler) | Dir: Emin Alper | Turkey, France, Germany, Netherlands, Greece, Croatia | 2022 | 129' | WC

Anna Cinemas 10.00 AM

துருக்கி இயக்குநர் நூரீ பில்கே செய்னானுக்குப் பிறகு இந்தமுறை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளவர் எமின் அல்பர். இயக்குநர் எமின் அல்பர் தனது 'எரியும் நாட்கள்' படத்திற்காக எடுத்துக்கொண்ட கதை ஓர் இளம் வழக்கறிஞரைப் பற்றியது. இளம் வழக்கறிஞர் என்பது ஒரு ஒற்றைக்கோடுதான். அதை வைத்துக்கொண்டு படத்தில் எமின் அல்பர் வைத்துள்ள அடுக்குகள் ஏராளம். ஒரு லட்சியத்தோடு வாழ நினைப்பவர்களுக்கு எப்போதுமே கடும் நெருக்கடிகள் உண்டு. அதிலும் ஊழல் மற்றும் அதிகாரப் போட்டிகள் நிறைந்த அரசியல் வட்டாரங்களில் இந்த மாதிரி நல்லவர்கள் சிலர் நுழைந்துவிட்டால் அவர்கள் பாடு பெரும்பாடுதான்.

நிலத்தடி நீருக்காக தோண்டப்படும் ஆழமான பள்ளங்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வழக்கு ஒன்றை இளம்வழக்கறிஞர் ஒருவர் கையில் எடுக்கிறார். அவர் ஊருக்கு புதியவரும்கூட. தேர்தல் பிரச்சாரத்தின்போது உள்ளூர் தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்க காசு பார்க்கும் நோக்கத்தில் அளித்த வாக்குறுதி காரணமாக ஆளுங்கட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள பணி அது. அதனால் வழக்கறிஞர், உள்ளூர் சேர்மனிடம் முரண்பட வேண்டிய நிலை. அதிகாரம் எப்போதும் நேர்மையின் பாதையிலிருந்து வழுக்கிச் செல்லும் சகலவிதமான வாய்ப்புகளை கொண்டுள்ளதையும் இயக்குநர் எமின் அல்பர் எக்கச்சக்கமான சம்பவங்களில் அடுக்கிய வண்ணம் இருக்கிறார். ஒரு கொலை, ஒரு பாலியல் வன்கொடுமை, பேரினவாத கொடூரம், ஆணாதிக்கம், அதிகாத் திமிர் என அவர்கள் போடும் ஆட்டங்களை ஒரு சித்திரம்போல அவர் தீட்டியுள்ளார்.

கிராமிய தன்மையுள்ள சிறு நகரத்தை கண்முன் நிறுத்தியுள்ள ஒளிப்பதிவு படத்தின் சிறப்புகளில் முன்னணியில் நிற்கிறது. வழக்கறிஞர் எம்ரேவாக வரும் செலாட்டின் நடிப்பும் எகின் கோஸ்
முராத் உள்ளிட்ட ஏராளமான உறுதுணை நடிகர்களின் பங்களிப்பும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்திற்கு மேலும் மதிப்பழகை கூட்டுகிறது. தொடர்ந்து ஏராளமான விருதுகளை குவித்துவருகிறது பர்னிங் டேஸ்.


Sick of Myself (Sick of Myself) | Dir: Dristoffer Borgli | Norway |2022 | 97' | WC

Six Digrees | 2.30 PM

திருடப்பட்ட தளவாடங்களில் இருந்து சிற்பங்களை உருவாக்கும் சமகால கலைஞர் தாமஸ். சிற்பி என்றவகையில் அவனுக்கு பேரும் புகழும் கிடைப்பது மிகையான ஒன்றல்ல. ஆனால் தனது காதலன் சமீபத்தில் புகழ் பெற்றதால், தானும் எதாவது ஒன்று செய்து புகழ் பெற வேண்டுமென நினைக்கிறாள். இது ஒஸ்லோவின் (நார்வே) கலாச்சார உயரடுக்கின் சூழல் மட்டுமல்ல, உலகின் பல இடங்களிலும் உள்ள ஒரு கேவலமான மனப்பான்மைதான். பலவிதமான இடங்களிலும் சுயமோகப் (நார்சிசம்) பேய் பிடித்திருப்பதை பார்க்கமுடியும். சர்ஜரி செய்துகொள்கிறேன் என்று ஆபத்தின் எல்லைக்கே சென்றவர்கள் உண்டு. அப்படி எதாவது ஒன்றை செய்தால்தான் மக்களை கவனத்தை ஈர்க்கமுடியும் என்று நம்பும் பெண்ணின் கதையை இப்படம் பேசுகிறது.

பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் தொடர்பான ஒவ்வாமை தனக்கு இருப்பதாக பொய் சொல்வதோடு என்னென்னவோ பரிசோதனைகளில் இறங்குகிறாள். முகம் வீங்குகிறது. இப்படியான முயற்சிகளில் விளைவு விபரீதமாகும் என்பதையும் இயக்குநர் சொல்லத் தவறவில்லை. அதுமட்டுமின்றி படத்தை வகுப்பறையில் எடுக்கும் பாடம்போல தராமல் அபத்த நகைச்சுவை காட்சிகளின் ஊடே சொல்லியிருப்பது பார்வையாளர்களை நகர விடாமல் செய்கிறது.

இப்படிப்பட்ட குறுக்கு யோசனைகள் ஏற்படுவது கூட ஒருவித மனநலம் பாதிக்கப்பட்ட நோயுடன் தொடர்புபடுத்தக்கூடியதுதான் என்பதை மறுக்க இயலாது. ஆனால் இந்தக் கதையை தீவிர யதார்த்தத்தில் சொல்லாமல், அபத்த நகைச்சுவையில் இயக்குநர் வைத்துள்ளார்.

இயக்குநர் கிறிஸ்டோஃபர் போர்க்லி அபூர்வமான நார்ச்சிஸ ஆசைகளினால் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முற்படும் ஒரு பெண்ணின் கதையை துணிச்சலான திரைக்கதையாக்கத்தில் பேசியிருக்கிறார். சிக்னே இளம்பெண்ணின் குழப்பமான சிக்கலான சவாலான பாத்திரத்தில் வருகிறார் கிறிஸ்டீன் குஜாத் தோர்ப். அவர் தனது சிறந்த நடிப்பாற்றலில் பதற்றத்தின் உச்சத்திற்கே நம்மை கொண்டுசென்று விடுகிறார். கவனத்துக்குரிய மற்ற படங்கள்:

Leila's Brothers (Baradaran-e-Leila) Dir: Saeed Roustayi | Iran | 2022 | 165' | WC

Santham | 6.00 PM


Diary okf a fleeting affiar (Chonique D'une Liasion Passagere) | Dir: Emmanuel Mouret | France | 2022 | 100' | WC

Six Degrees | 7.15 PM

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x