Last Updated : 14 Dec, 2022 08:50 PM

 

Published : 14 Dec 2022 08:50 PM
Last Updated : 14 Dec 2022 08:50 PM

CIFF 2022 | ‘ஹார்டு ஷெல்’ முதல் ‘பலோமா’ வரை: டிச.15-ல் என்ன படம் பார்க்கலாம்? - பரிந்துரைப் பட்டியல்

ஹார்கின்ஸ் படத்தில் ஒரு காட்சி.

Hard Shell, Soft Shell (Fragile) | Dir: Emma Benestan | France/2021 | 100' | WC | venue: Seasons - 10.00 Am: பிரெஞ்சு சினிமாவின் புகழ்பெற்ற படத்தொகுப்பாளினி எம்மா பெனஸ்டன் இயக்குநராக களம் இறங்கியுள்ள திரைப்படம். பிரான்ஸின் அப்தெல்லாடிப் கிச்சே போன்ற பெரிய இயக்குநர்களுடன் பணியாற்றிய எம்மா, புதிய தலைமுறை கலைஞர்களுடன் கைகுலுக்கி ஓர் அற்புதமான காதல் கதையை நகைச்சுவை ததும்ப தந்துள்ளார்.

சற்றே உணர்ச்சிவசப்படக்கூடிய இருபது வயது இளைஞன் அஸ். கடலில் மூழ்கி சிப்பி எடுக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் அஸ் எந்த ஒன்றையும் மிகவும் தீவிரமாக யோசிக்கக்கூடியவன். பெண்களால் சூழப்பட்ட அவனுக்கு வளர்ந்து வரும் தொலைக்காட்சி நடிகையான ஜெஸ் மீதான காதல். அவனுடைய ஒரு சாதாரணமான காதல்கூட சவாலாக மாறுகிறது. அவனுடைய அம்மா, பாட்டி, தமக்கை, பல நண்பர்களும் கூட அவனுக்கு ஏற்படும் மனநெருக்கடியை தீர்க்க உதவுகின்றனர். கடலில் நூற்றுக்கணக்கான சிப்பிகளை எடுத்து அவற்றை திறந்து பார்த்து பழக்கப்பட்டவன். ஆனால் ஒரு காதல் இதயத்தை திறக்கமுடியவில்லை.

தனது காதலை முன்மொழிய ஒரு சரியான வழி இருப்பதாக அவன் நினைக்கிறான். நிச்சயதார்த்த மோதிரத்துடன் ஒரு புதிய சிப்பியை சேர்ததுத் தருகிறான். என்றாலும் ஒரு நடன நிகழ்ச்சியில் அவன் காதல் சற்றே திசை மாறுகிறது. இளமைத் துடிப்புமிக்க இளைஞர்களின் நட்பு அன்பும் எவ்வளவு வலிமையானது என்பதை இயக்குநர் எடுத்துக்காட்டியுள்ளார். அல்ஜிரிய-பிரான்ஸ் பெண் இயக்குநரான எம்மா பெனஸ்டன் பல்லுயிர் நிறைந்த அழகிய கடற்பகுதியான பிரான்ஸின் சேட் துறைமுக நகரில் அழகாக இத்திரைப்படத்தை படமாக்கியுள்ளார்.

Paloma (Paloma) | Dir: Marcelo Gomes | Brazil 2022/104' | WC | venue - Seasons 3.00 PM: திருநங்கைகளின் வலிகள், அபிலாஷைகளை இயல்பான வாழ்க்கையோடு கலந்து வெளிப்படுத்தப்பட்டுள்ள படம் பாலாமோ. விவசாயத் தொழிலாளியான பலோமா என்ற திருநங்கைக்கு ஒரு அழகான காதலன் இருக்கிறான். தேவாலயத்தில் தனது காதலன் ஸீ-யை பாரம்பரிய முறையில் கரம்பற்ற விரும்புகிறாள் பாலாமா.

பழமைவாத கிராமப்புற பிரேசிலிய சமூகம் அதை ஏற்கவில்லை. அத்தகைய சடங்குக்காக ஏங்கும் பலோமாவை எல்லோரும் முட்டாள்தனமான ஆர்வம் கொண்டவளாகவே பார்க்கிறார்கள். தேவாலாயத்தின் மதகுருவும்கூட இதை அனுமதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவளுடைய காதலனும்கூட மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்று கூறி இந்த யோசனையை இப்போதைக்கு கைவிடலாம் என்றே கூறுகிறான்.

ஆனால் பாலோமா மக்கள் என்ன சொல்வார்கள் என்றோ பணத்திற்கு என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையோ இல்லாமல் இந்தத் திருமணம் நடந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். மூன்றாம் பாலினத்தவர்களின் உணர்வுகள் மார்செலா கோம்ஸ் திரைக்கதை இயக்கத்தில் இப்படத்தில் சிறப்பாக கவுரவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் சர்வதேச அளவில் சிறந்த வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

Harkis (Les Harkis) | Dir: Philippe Faucon | France, Belgium | 2022 | 82' | WC | venue: Seasons - 12.30 pm: பிரான்சிலிருந்து விடுதலைபெற அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி பெரும் போராட்டத்தை நடத்தியது. ஒரு 1954 முதல் 1962 வரை பிரான்சுக்கும் அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையே போர் மூண்டது. அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அல்ஜீரியாவின் சுதந்திரத்தை வென்றெடுக்க வழிவகுத்த இப்போரின் சில சம்பவங்களின் அடிப்படையில் இத்திரைப்படம் பின்னப்பட்டுள்ளது.

அல்ஜீரியப் போரின் போது (1954-1962), "ஹர்கிஸ்" என்று அழைக்கப்படும் வறுமைநிலையில் உள்ள அல்ஜீரிய இளைஞர்கள் பிரெஞ்சு ராணுவத்தில் சேர முன்வந்தது ஒரு கசப்பான உண்மை. அல்ஜீரிய இளைஞர்களான சலாவும் கடூரும் லெப்டினன்ட் பாஸ்கலின் கட்டளையின் கீழ் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். ஆனால் மோதல் முடிவுக்கு வரும்போது, அல்ஜீரிய சுதந்திரத்திற்கான வாய்ப்பு உருவாகிறது. இதனை அடுத்து ஹர்கிஸ் வீரர்கள் அதாவது சலா, கடூர் போன்றவர்களின் நிலைமை மிகவும் மோசமானதாக மாறுகிறது.

லெப்டினன்ட் பாஸ்கல் புதிய கட்டளை அவர்கள் வாழ்க்கையை திசை திருப்புகிறது. பிரஞ்சு படைப்பிரிவில் தங்களை இணைத்துக்கொண்ட ஹர்கிஸ்களையும் கூட அல்ஜீரியாவை விட்டு பிரான்சுக்கு வெளியேற்றபபட வேண்டுமென்று அவர் வலியுறுத்த மேலதிகாரிகள் மறுக்கின்றனர். ஆனால் அவர் அவர்களை எதிர்க்கத் துணிகிறார். சில வரலாற்றுப் பிழைகளை இத்திரைப்படம் பேசியுள்ள விதத்தில் முக்கியமான படமாக இத்திரைவிழாவில் கவனம் பெற்றுள்ளது.

Natural Lefty (Mancino Naturale) | Dir: Salvatore Allocca/Italy | France | 2021 | 106' | WC | venue: 6 Degrees - 1.00 pm: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த இளம் தாயான இசபெல்லா, நிறைய துயரங்களை கடந்து வந்தவள். எனினும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம் வேண்டுமென நினைக்கிறாள்.தன் மகன் பாவ்லோ விளையாட்டில் துடிப்புமிக்கவனாக வளர்த்து வருவதைக் காண்கிறாள், அவனது தந்தையின் பெயர் பாவ்லோ ரோஸ்ஸிக்கு மரியாதை செலுத்தும் விதமாக மகனை ஒரு விளையாட்டு வீரனாக ஆக்கவும் இசபெலலா முயற்சிக்கிறாள்.

உண்மையில் கால்பந்து விளையாடுவதில் பாவ்லோவுக்கு மிகவும் விருப்பம்தான். ஆனால் மிகப்பெரிய நட்சத்திரமாக வேண்டுமென்பதெல்லாம் ஆசையில்லை. ஆனால் இசபெல்லாவுக்கு இருக்கிறது. தன் மகனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளில் இறங்குகிறாள். ஆனால் அது பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. அவளது முயற்சி மகனை நட்சத்திர கால்பந்து விளையாட்டு வீரனாக ஆக்கியதா? அல்லது வேறு பிரச்சினைகளை கொண்டுவந்து சேர்தததா? என்பதை இயக்குநர் சால்வட்டோடர் அலாக்கா தனது படத்தில் ஒரு த்ரில்லரான பாணியில் விறுவிறுப்பாக தந்துள்ளார். கவனத்துக்குரிய மற்ற படங்கள்:

  • Triangle of Sadness / Dir: Ruben Ostlund / 2022 / 147' / WC | Satyam opening film followed opening function at 6.00pm
  • Queens (Reines) / Dir: Yasmine Benkiran / France, Belgium/2022/83, WC | Serene 3.30 pm
  • Fishbone /Ribena Kost / Dir: Dragomir Sholev, Bulgaria, Romania/ 2021/107'/WC | Santham 12.30PM

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x