

கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை
அரசின் ஒடுக்குமுறையாக இருந்தாலும் சரி, தீவிரவாதத்தின் கோர முகமாக இருந்தாலும் சரி.. அதனை பிரதிபலிப்பதும் முரண் கொள்வதும் கலையே. கலையே அதற்கான வேலைகளைச் செய்கிறது. அந்தக் கலையின் வடிவம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவை மக்களுக்கானதாக, கலைஞர்களுக்கானதாக இருக்க வேண்டும்.
சிக்கெந்தரும், ஷாப்பும் காபூல் பலகலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். ஆஃப்கானிஸ்தானில் நிலவி வரும் நெருக்கடியின் நிலையின் காரணமாக திரையரங்குகளும் இசை நிகழ்ச்சி நடத்தும் அரங்குகளும் மூடப்பட்டே இருக்கின்றன. இவை மட்டுமல்லாமல் கலை சார்ந்த அனைத்து விஷயங்களும் கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.
இந்நிலையில், சிக்கெந்தரும், ஷாப்பும் அவர்களது நண்பர்களும் இசை விழாவினை நடத்தவும் புதியதாக ஒரு கலாச்சார மையத்தினை ஆரம்பிக்கவும் ஆசைப்படுகின்றனர். சிக்கெந்தரும் ஷாப்பும் அவர்களது நண்பர்களும் அதனை நிறைவேற்றினார்களா என்பதுதான் 'காபுலிவுட்'.
ஆஃப்கானிஸ்தான் என்று சொன்னவுடன் தாலிபான்களும், தீவிரவாதமும் நியாபகம் வருவதை தவிர்க்க இயலாது. ஏனென்றால், நாம் இதுவரையில் பார்த்த படங்கள், கேட்ட செய்திகள் அனைத்துமே அதனைத்தான் நமக்கு சொல்லி இருக்கிறது.
காபூலிவுட்டை பார்க்க நேர்ந்தால் நாம் ஆஃப்கானிஸ்தானை அதன் இயல்பு வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியும். நாட்டின் பல்வேறு பகுதிகளும் சிதைந்த நிலையில் இருந்தாலும் மக்களது அன்றாட வாழ்க்கையானது எல்லாவற்றிற்கும் பழகிய விதமாகவே இருக்கிறது.
சிக்கெந்தரும் அவனது நண்பரகளும் தங்களது நாட்டைப் பற்றியும், நாட்டின் கலைஞர்களைப் பற்றியும் பேசிக்கொள்ளும்போது அந்நாட்டின் கலை எவ்வளவு அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறது என்பதை அறியலாம்.
இசை நிகழ்ச்சி நடத்த அரங்குகள் தேடி ஒவ்வொரு இடமாக அவர்கள் அலையும்போது பல்வேறு அரங்குகளும் தாக்குதலுக்கு உள்ளாகி சிதைந்த நிலையிலேயே இருக்கின்றன. அப்படியே அரங்கு கிடைத்தாலும் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதியும் பாதுகாப்பும் கிடைப்பது கடினமாகத்தான் இருக்கிறது.
சிக்கெந்தரின் அப்பா ராணுவத்தில் ஜெனரலாக இருப்பது கலாச்சார மையத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் எந்தவித உதவியும் இல்லாமல் சிக்கெந்தர் தனியே கலச்சார மையத்தினை ஏற்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்ட பின்பும் அதனை எதிர்கொண்டு செய்து முடிக்கும் விதம் சிறப்பு.
திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியிலேயே எங்கேயோ தாக்குதல் நடைபெற, வீட்டினுள் இருக்கும் சிக்கெந்தரும் அவனது குடும்பமும் அதனைப் பற்றிய எவ்வித பதைபதைப்பும் இல்லாமல் இருக்கின்றனர். அந்தச் சத்தங்கள் அவர்களுக்கு பழகிப்போய்விட்டன போலும்.
சிக்கெந்தர் மற்றும் அவர்களது நண்பர்கள் குழுவில் ஷாப் மட்டுமே பெண்ணாக இருக்கிறாள். அதனாலேயே அவளுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். அவளது அண்ணனுக்கு ஷாப்பின் செயல்பாடுகள் மீது விருப்பம் இல்லை. கலச்சார மையம் ஆரம்பிப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்றே அவன் நினைக்கிறான்.
ஷாப்பின் அண்ணன் அடிப்படைவாதியாக இருக்க வேண்டும். அவனை ஒரு தீவிரவாதியாக சித்தரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் அவன் சிக்கெந்தரையும் அவனது நன்பர்களின் முயற்சிகளையும் எதிர்க்கிறான். அம்முயற்சிகளை ஒன்றுமில்லாமல் செய்ய முயல்கிறான். உண்மையில் இதுபோன்ற அடிப்படைவாதிகளே ஆஃப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு காரணமாகவும் இருக்கிறார்கள்.
சிக்கெந்தரும் அவனது நண்பர்களும் ஆயுப் சினிமா அரங்கத்தை புதுப்பிக்கும்போது அங்கு தங்கியிருக்கும் குழந்தைகளின் நிலையைக் காட்டும் ஒரு காட்சியே காபூலை, ஆஃப்கானிஸ்தானை நமக்கு புரியவைக்கிறது. கல்வியும் வாழ்க்கைத் தரமும் வீழ்ந்து போய் இருக்கின்றன. காபூல் போன்ற நகரங்களில் இந்த நிலைமை எனில் மற்ற கிரமங்க்லளில் நிலையை யோசிக்க முடியவில்லை.
பல்வேறு நாடுகளில் கலை என்பது வியாபாரமாகிவிட்ட நிலையில், ஆஃப்கானிஸ்தானில் மக்களின் வாழ்க்கைத்தரமே கேள்விக்குறியாக இருக்கும்போது, அங்கே கலை என்பதற்கான இடம் என்பதும் கேள்விக்குறிதான் என்ற மனநிலை நமக்குள் கண்டிப்பாய் எழும். ஆனால், வணிகமென்ற நிலையைத் தாண்டி கலையை மக்களுக்காக நிகழ்த்துவதைத்தான் சிக்கெந்தரும் அவரின் நண்பர்களும் செய்கின்றனர். அதற்கான முயற்சிகளும் அதனை நடைபெற விடாத தடைகளுமே காபூலிவூட்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதே பல்வேறு தாக்குதல் நடைபெற்றுள்ளன. இப்படம் வெளியான பின் இதில் நடித்த நடிகர்கள் பலரும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனையெல்லாம் தாண்டி படத்தின் இறுதியில் சிக்கெந்தர் சொல்லும் வார்த்தைகள்தான் காபூலிவுட்டைப் பார்ப்பதற்கான திரை அனுபவம். அவை:
'நாங்கள் இப்போது ஜெயித்திருக்கிறோம், தொடர்ந்து இதே நிலை இருக்குமா என தெரியாது. ஆனால், கலையை கலைஞர்கள் எடுத்துக்கொண்டு விட்டார்கள். கலைஞர்கள் இனி பேசத் தொடங்குவார்கள். அதுவே போதும்.'
- சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com