புகழஞ்சலி: ‘சினிமாதான் இவர் சுவாசம்’ - பிரெஞ்சு புதிய அலை இயக்க முன்னோடி கோதார்த்

கோதார்த்
கோதார்த்
Updated on
2 min read

பிரெஞ்சு நியூ வேவ் திரைப்பட இயக்கத்தின் முன்னோடி கோதார்த் நேற்று செப்டம்பர் 13-ல் மறைந்தார். சினிமா சிந்தனையிலிருந்து தனது இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டபோது அவருக்கு வயது 91.

ழான்-லூக் கோதார்த் டிசம்பர் 3, 1930-இல் பாரிஸில் பிறந்தார், பிரஞ்சு-சுவிஸ் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்த கோதார்த். அப்பா தனியாக கிளினிக் வைத்து மருத்துவத் தொழிலை மேற்கொண்டு வந்தார். அம்மாவோ பாரம்பரிய சுவிஸ் வங்கி முதலாளிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். எனினும் அவர்கள் ஒருகட்டத்தில் பிரிய நேரிட்டது. சுவிஸ்சில் பள்ளிப்படிப்பை முடித்த நிலையில் தனித்துவிடப்பட்டார். அந்நேரத்தில் வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில்தான் அவர் பாரீஸுக்கு பயணம் மேற்கொண்டு தனது பல்கலைக்கழக மேற்கல்விக்கான வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

என்றாலும் ஏற்கெனவே தாய், தந்தையர்கள் பிரிந்துவிட்ட நிலையில் பிள்ளை படிக்கிறான் என எதோஒரு வகையில் சிறுபணம் அனுப்பினர். ஆனால், கடைசியில் சினிமா முயற்சிகளில் ஈடுபடுகிறான் என்று அறிந்ததும் பெற்றோரிடமிருந்து பணம் வருவது நின்றுவிட கோதார்த் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு தனக்கான பொருளை வருமானத்தை தேடிக்கொண்டார். சாப்பாட்டுக்கும் உடுத்திக்கொள்ளவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த காலங்களில்தான் புதிய சினிமா எப்படி இருக்க வேண்டுமென்று அவர் உருவாக்கிய தியரி புதிய அலையாக உருவெடுத்தது. புதிய அலை என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது சினிமா வரலாறாக இன்று பேசப்படுகிறது.

பிரெஞ்சு புதிய அலை என்பது 1950களின் பிற்பகுதியில் தோன்றிய ஒரு பிரெஞ்சு திரைப்பட இயக்கமாகும். வழக்கமான மரபு முறையில் கதை சொல்லும் சினிமா பாணியிலிருந்து விலகி வித்தியாசமான கதை சொல்லும் தன்மையை இப்படங்களை உருவாக்க இந்த இயக்கம் முன்னெடுத்தது.

ழான் லூக் கோதார்த், எரிக் ரோமர், ஜாக் ரிவெட் மற்றும் கிளாட் சாப்ரோல் ஆகியோர் கேஹியர்ஸ் டூ சினிமா இதழில் மரபுவாய்ந்த சினிமாக்களின் கரடுதட்டிய குறைகளை கிழித்து தொங்கவிட்டனர். இதற்காக பல்வேறு பத்திரிகைகளையும் கூட அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். பல்வேறு பத்திரிகைகளில் இந்நால்வரும் எழுதிய கட்டுரைகளால் மிகப்பெரிய அதிர்வலைகள் ஏற்படத் தொடங்கின.

''அப்படியென்றால் நீங்கள்தான் சினிமா எடுங்களேன் பார்க்கலாம்'' என்ற அறைகூவல் அவர்களுக்கு விடுக்கப்பட்டது. அந்த அறைகூவலையும் அவர்கள் துணிந்து ஏற்றனர். அதன்படியே இவர்கள் வெறுமனே விமர்சனம் எழுதிக் கொண்டிராமல் தங்களது பட முயற்சிகளில் இறங்கினர். ஆரம்பத்தில் சின்னஞ்சிறு படங்களில் தொடங்கியவர்கள் பிறகு முழுநீளப் படத்தை எடுத்தனர். இந்த புதிய அலை திரைப்படங்கள் பெரும்பாலும் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தியது.

முதல் படமான ப்ரீத்லெஸ் படக் காட்சி.
முதல் படமான ப்ரீத்லெஸ் படக் காட்சி.

கோதார்த் 60களில் முழுநீள படத்தை எடுக்கத் தொடங்குகிறார். பிரீத்லேஸ் முதல் படம், அதன் அவரது மைல்கற்களாக கண்டெம்ப்ட், பேன்ட் ஆப் அவுட்சைடர்ஸ், பைரேட் லே ஃபோயு... ஆல்பாவெல்லி, குட் பை லாங்வேஜ், மாஸ்குலைன் பெமினைன், விவ்ரே சா வியீ போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

இதில் ஒரு அரிதான அம்சம் என்னவெனில் 50களில் குறும்பங்களில் தொடங்கி 60களில் முழுநீளப்படங்கள் என வளர்ந்து இன்றைய 2K திரைப்பட தலைமுறையோடும் ஜீன் லூக் கோதார்த் பணியாற்றி வந்தார் என்பதுதான். தனது 88வது வயதில் தி இமேஜ் புக் என்ற படத்தையும் அவர் இயக்கினார். அப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாம்டிஓர் விருது பட்டியலில் இடம்பெற்றது. விருது கிடைக்கவில்லை யெனினும் வரலாற்றில் முதல்முறையாக ஸ்பெஷல் பாம் டி ஓர் விருது ஒன்று தோற்றுவிக்கப்பட்டு அந்த விருது ஜூரிகளால் கோதார்த்க்கு வழங்கப்பட்டது. கோடர்ட்டின் சினிமா இயக்க பாணியிலான அவந்த் கார்டெ வகைமையிலான படம் என்பதால் நல்ல விமர்சனங்களையும் இப்படம் பெற்றது.

ஓவியம் என்னை நிராகரிக்கும்வரை எனக்குள்ள ஓவியத்தின் மீதான ஈடுபாடு குறையாது என்று பிகாஸோ சொன்னதை நினைவுபடுத்தி பேட்டியில் ஒரு பேட்டியில் கோதார்த் சொன்னார், ''பிகாஸோ சொல்வதை போலத்தான் நானும் சொல்கிறேன், சினிமா என்னை நிராகரிக்கும் வரை நான் சினிமாவை விட்டு விலகமாட்டேன்'' என்று. அவ்வகையில்தான் பல பத்தாண்டுகள் அவர் சினிமாவோடு வேலை செய்துவந்தார். 1960ல் பிரீத்லெஸ் தொடங்கி 2018 தி இமேஜ் புக் வரை கிட்டத்தட்ட 45 படங்களை அவர் இயக்கியுள்ளார். உலகின் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ள கோடர்டுக்கு ஆஸ்கரின் சிறப்பு விருது 2010ல் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in