கடுகைத் துளைத்து ஏழ் சினிமாவை எடிட் செய்து புகுத்தும் Montage Of யூடியூப் தளம்!

கடுகைத் துளைத்து ஏழ் சினிமாவை எடிட் செய்து புகுத்தும் Montage Of யூடியூப் தளம்!
Updated on
2 min read

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் திரைப்படங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. இணையமும், தற்போது புழக்கத்தில் உள்ள பல்வேறு செயலிகளும், திரைப்படங்கள் சார்ந்த பார்வையை இன்னும் செம்மைப்படுத்தியுள்ளன. முன்பெல்லாம், புதிய திரைப்படங்களை விளம்பரப்படுத்த சொற்ப எண்ணிக்கையிலான சாதனங்களே இருந்தன. உரிய நேரத்தில் மக்களிடம் சென்று சேராததால், உலகத்தரம் வாய்ந்த பல திரைப்படங்கள் காலம் கடந்தே கவனிப்பை பெற்றன.

ஆனால், இந்த நிலை தற்போதுள்ள திரைப்படங்களுக்கு இல்லை. மேலும் நாம் முன்பு தவறவிட்ட எந்தவொரு திரைப்படத்தையும் இப்போது எளிதாக பார்த்துவிட முடியும். அதற்கு இணையமும், செயலிகள் பலவும் துணை நிற்கின்றன. அதில் குறிப்பிடத்தகுந்த பணியை யூடியுப் செவ்வனே செய்து வருகிறது. யூடியூப் உள்ளிட்ட செயலிகளில் ஏற்படும் தீமைகள் குறித்து குறைபட்டுக் கொண்டாலும்கூட, அவற்றை சிறப்பாக பயன்படுத்துபவர்களும் இருக்கவேச் செய்கின்றனர். அந்த வகையில் அண்மையில் பார்த்து பிரமித்துப் போன ஒரு யூடியுப் சேனல்தான் 'Montage Of'

ஒரு திரைப்படம் உருவாவது பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சி என்றாலும், எடிட்டிங் துறை தனித்துவமான ஒன்றாகவே இருந்து வருகிறது. சன் தொலைக்காட்சிக்குப் போட்டியாக சரியான ஒரு பொழுதுபோக்கு சேனல் இல்லாத காலகட்டத்தில், அந்தத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக போகும் திரைப்படங்களின் ட்ரெய்லர் ஒளிபரப்பப்படும். அந்த திரைப்படத்தை நாம் ஏற்கெனவே பார்த்திருந்தாலும்கூட, அவர்கள் ஒளிபரப்பும் ட்ரெய்லர் காட்சிகள் அத்தனை நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டிருக்கும். இதனை பலரும் அப்போது பாராட்டிப் பேசுவர்.

அந்த வகையில் அண்மையில் பார்த்து பிரமித்துப் போன ஒரு யூடியுப் சேனல்தான் 'Montage Of'. அப்படி என்ன இந்த சேனலில் இருக்கிறது? இந்த யூடியுப் தளத்தின் சிறப்பு, இந்த உலகம் தூக்கி கொண்டாடிய உலகத் தரம் வாய்ந்த சினிமாக்கள் ரத்தினச் சுருக்கமாக இங்குள்ளது. மிக குறைவான நேரத்தில் அதாவது சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய அளவில் அந்தப் படங்களின் மிக முக்கியமான காட்சிகள் நேர்த்தியாக எடிட் செய்து பதிவிடப்பட்டுள்ளது.

இந்தத் தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களும், காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளும், பின்னணி இசையும், மீண்டும் ஒரு முறை அந்தத் திரைப்படத்தை நம்மை பார்க்கத் தூண்டுகிறது. ஷசாங் ரெடெம்ப்ஷன் (Shawshank Redemption) முதல் பஞ்சாயத் (Panchayt) வெப் சீரிஸ் வரை அனைத்துமே இந்தத் தளத்தில் உள்ளன.

ஆஸ்கர் விருதுகளை வென்று, பல திரைப்ப இயக்குநர்களின் திரையுலக கனவு நிஜமாக காரணமாக இருந்த ஷசாங் ரெடெம்ப்ஷன் (Shawsank Redemption) திரைப்படத்தின் கருவும், கதையும் சிதையாமல் கனகச்சிதமாக 3 நிமிடங்களுக்குள் பதிவு செய்து மனதை தொட்டிருக்கிறது 'Montage Of'.

மிகையில்லா உடல்மொழிக்குச் சொந்தக்காரரான இர்பாஃன் கான், மற்றொரு நடிப்புக் களஞ்சியம் நவாசுதீன் சித்திக் கூட்டணியில் அனைவரது பாராட்டையும் பெற்ற லன்ச் பாக்ஸ் (The Lunch Box), நவாசுதீன் சித்திக்கின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த ராமன் ராகவ் 2.0 (Raman Raghav 2.0), இயக்குநர் மணிரத்னத்தின் ராவணன், இருவர் என 'Montage Of' யூடியூப் சேனலில் நீளும் பட்டியலில் உள்ள திரைப்படக் கோர்வை நம்மை மீண்டும் மீண்டும் அந்த மான்டேஜ் கட்டிங்ஸை பார்த்து ரசிக்க வைக்கின்றன.

இவை மட்டுமின்றி, இந்தியில் பெரு வெற்றி பெற்ற ஆமிர் கானின் லகான் (Lagaan), ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் கூட்டணியில் வெளிவந்த பாஜ்ராவ் மஸ்தானி (Bajirao Mastani), உத்தரப் பிரதேச அரசியலை கதைக்களமாகக் கொண்ட மிர்ஸாபூர் (Mirzapur) வெப் சீரிஸ், அதேபோல் பதால் லோக் (Paatal lok) என அண்மைக் காலத்தில் நாம் பார்த்து ரசித்த அத்தனையும் இடம்பெற்றுள்ளன.

ஜோஜி (Joji), இருள் (Irul), த்ரிஷ்யம் 2 (Drishyam 2), ஜல்லிக்கட்டு (Jallikkattu) என இயல்புமாற மண்மனத்துடன் குடும்ப உறவுகளையும், அதன் மேன்மையையும் மையமாக கொண்ட கதைகளின் அட்சயப் பாத்திரமாக விளங்கும் கடவுளின் தேசத்துப் படங்களும் இந்த 'Montage Of'தளத்தில் இடம்பெற்றுள்ளன.

தன் பாலின ஈர்ப்பு, காமம், பாலியல் உறவுகள் சார்ந்த கதைக்களங்களைக் கொண்ட வங்க மொழி படமான காண்டு (Gandu), இந்தியில் இயக்குநர்கள் அனுராக் காஷ்யாப், கரன் ஜோகர் உள்ளிட்டோர் இயக்கத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்டமான லஸ்ட் ஸ்டோரிஸ் (Lust stories),தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe) உள்பட பல படங்களை இந்த 'Montage Of' தளத்தில் உள்ளன.

இவை மட்டுமின்றி, அண்மையில் வெளிவந்த பான் இந்திய திரைப்படமான புஷ்பா (Pushpa) , ஏற்கெனவே இந்தியில் வெளியான தும்பாட் (Tumbaad), தி ஓயிட் டைகர் (The white Tiger)என பல படங்கள், மதிய உணவுக்குப் பின் வரும் குட்டித் தூக்கத்துக் கனவு போல் கண்களுக்குள் விரிந்து மறையும் உணர்வை தருகிறது இந்த 'Montage Of' யூடியுப் தளம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in