

கலகலப்பாக வாழ்ந்துகொண்டிருந்த குடும்பம் ஒரு நிலநடுக்கத்தால் கலகலத்துப் போகும் அவலத்தை aftershock திரைப்படம் அகல்விரிவாக எடுத்துக்காட்டுகிறது.
1976ல் சீன நாட்டில் டாங்ஷான் மாநகரில் ஓர் இரவில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்திற்கு முன் மாலைப்பொழுது. மக்கள் வீடு திரும்பிக் கொண்டிகிறார்கள். வானில் ஆயிரக்கணக்கான தும்பிகள் நிலத்தை நோக்கி பறந்துவருவதை நகரமே வேடிக்கைப் பார்க்கிறது. பரபரப்பான சாலையில் தந்தை ஓட்டிவரும் டிரக் வேனில் அமர்ந்திருக்கும் இரட்டையர்கள் சிறுவன் ஃபாங் டாவும் சிறுமி ஃபாங் டெங் தும்பிகளை அதிசயமாய்ப் பார்க்கின்றனர். சிலமணி நேரங்களில் அவர்கள் வாழ்க்கை முற்றிலுமாக மாறப்போவது அவர்களுக்கு தெரிய நியாயமில்லை.
சின்ன அப்பார்ட்மெண்ட் என்பதால் இரவு குழந்தைகளுக்கு படுக்கை போட்டுவிட்டு கட்டிடத்திற்கு வெளியே உள்ள ட்ரக்கில் அமர்ந்து பேசலாம் என ஃபாங் டேக்கிவாங்- லீ யுவானி தம்பதியினர் வருகிறார்கள். அப்போது எதிர்பாராத ஒரு நிலநடுக்கம் ஏற்பட கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற அவர்கள் ஓடுகிறார்கள் மனைவி மேல் விழ இருந்த கற்களிலிருந்து அவளைக் காப்பாற்ற ஓடிய கணவன் மீது சாய்ந்து கொண்டிருந்தகொண்டிருந்த கிரேன் விழுகிறது. அவர்களது அப்பார்ட்மெண்ட் கட்டிடமும் அதிர்ந்து விழ அவர்களது குழந்தைகள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொள்கின்றன.
மீட்புப் படையினரிடம் தனது குழந்தைகள் மிகப்பெரிய கான்கிரீட் பலகையின் அடியில் மாட்டிக் கொண்டிருப்பதை தாய் கூறுகிறாள். அவர்கள் இடிபாடுகளின் கற்களையெல்லாம் அகற்றி கான்கிரீட் பலகையை தூக்க முயல்கிறார்கள். அப்போதும் ஒரு உயிரைதான் காப்பாற்றமுடிகிறது. காப்பாற்றப்பட்ட மகனை அழைத்துக்கொண்டு தாய் எங்கோ செல்கிறாள். அதன்பின்னர் சிறுமி ஃபாங் டெங்கும் உயிர் பிழைக்கிறாள். அவள் வாழ்க்கையோ திசை மாறுகிறது. தன் தாய் தன்னைத் தேடவில்லையே என்ற ஆதங்கமும் அவளை வாட்டுகிறது.
ராணுவத் தம்பதியிரிடம் வளர்ப்பு, கல்லூரி வாழ்க்கை, காதல் ஏமாற்றம், ஒரு குழந்தை, ஆசிரியைப் பணி நண்பர் ஒருவரின் ஆதரவு என அமெரிக்காவுக்கு வாழ்க்கை நகர்கிறது. பிரிந்தவர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்தார்களா என்பதை மீதி படம் ஒரு துயரார்ந்த திரைக்காவியமாக முன்வைக்கிறது. 1976ல் டாங்ஷான் நகரில் 2லட்சத்து 40 ஆயிரம் பேர் மரணமுற்ற நிலநடுக்க இயற்கைச்சீற்றத்தை துல்லியமாக பேசும் இத்திரைப்படம் வெளிநாட்டுப் படப் பிரிவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கென பரிசீலனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா, 1968. வியட்நாம் போரின்போது ராணுவ வீரர்களுக்கு இசைவிருந்து படைக்க மெல்போர்னிலிருந்து சென்ற மகளிர் இசைக்குழுவினர் பற்றிய படம். ஆஸ்திரேலிய கிராமத்து தொல்குடிப் பெண்கள் நால்வரின் இசையார்வத்தை நன்கு உணர்ந்த தேவ் எனும் வெள்ளையின ராணுவ வீரன் அவர்களை குரல் தேர்வுக்கு கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான்.
அவர்களில் இளையவளான ஜுலியை விட்டுவிட்டு குரல்தேர்வுககு அவர்கள் மட்டும் நகரத்திற்குச் செல்கிறார்கள். அவள் மிகவும் சின்னப்பெண் என்பதால் உருவான தடையை மீறி ஜுலியும் யாரையோ பிடித்து நகரத்திற்கு வந்து சேர்ந்துவிடுகிறாள். குரல் தேர்வில் அவளும் பங்கேற்க அவள் குரலே சிறந்த குரல் என தெரிவாகிறாள். நால்வருக்கும் சிற்சில கருத்து வேறுபாடுகள் உண்டானாலும் உடனுக்குடன் சரியாகிவிடுகிறார்கள். நால்வரும் இணைந்த 'தி சபையர்ஸ்' என்ற இசைக்குழு வியட்நாம் பறக்கிறது. மூத்தவளான கெயில் குழுவுக்கு தலைமையேற்கிறாள். போர்க்களத்துக்கு அருகே ராணுவ வீரர்கள் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள கொள்ள இசைக்குழு பேருதவியாகத் திகழ்கிறது. இசைக்குழுவியின் கறாரான தலைவி கெயில் மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவதிலும் அதே நேரத்தில் அவர்களைப் பாதுகாப்பதிலும் உயர்ந்துநிற்கிறாள். கெயிலை ராணுவ வீரன் தேவ் நேசிப்பது பனிபடர்ந்த இலைகளிலிருந்து சின்னஞ்சிறு மலர்போல வெளியே தெரிய தொடங்குகிறது. போர் உக்கிரமடைந்துவிட இசைக்குழு பத்திரமாக ஊர் திரும்ப முடிந்ததா? கெயிலும் தேவ்வும் வாழ்வில் இணைய முடிந்ததா? அற்புதமான இசைப்பாடல்கள் ஒருபக்கம். பதற வைக்கும் பல்வேறு சிக்கல்கள் இன்னொரு பக்கம். படம் மேலும் பாய்ந்துசெல்கிறது.
கிராமங்களில் கோடைக்காலம் என்பது குழந்தைகளின் திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். வகுப்புகள் முடிந்து, தேர்வுகள் முடிந்து கோடையை எதிர்பார்த்துக் காத்திருந்தால்தான் அவர்கள் குழந்தைகள். வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் நன்கு பிடித்துவிட்ட தென்றால் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து கிராமத்தையே ஒரு கலக்கு கலக்கிவிடுவார்கள். ஆஸ்திரிய திரைப்பட இயக்குநர் பெர்ண்ட் நியூபர்க்கர் இயக்கியுள்ள Summer with the Ghosts ஆஸ்திரிய நாட்டுத் திரைப்படத்தில் சிற்சில கற்பனைகள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாமேகூட அவர் மனதில் உள்ள தனது சின்னவயது கிராமத்துக் கொண்டாட்டங்களின் வண்ணங்களே.
சொந்த கிராமத்துக்கு விடுமுறைக்கு வருகிறாள் 10 வயது கரோலின். திரைப்பட இயக்குரான அவளது தந்தையும் கூட படக்குழுவினரோடு வந்திருக்கிறார். கரோலின் தோழர்கள் ஒரு பக்கம் விளையாடினாலும் கிராமத்தில் படக்குழுவினருக்கும்
நடந்துகொள்ளும் அலம்பல் இவர்களால் தாங்கமுடியவில்லை. கிராமத்தையே இரண்டாக்கும் மிகுந்த ஓசையிலான சேவலின் 'கொக்கரக்கோ' கூவல்கூட படபிடிப்புக்கு தடையாயிருக்கிறது என வெகுண்டெழுகிறார் அங்கு படம் எடுக்கவந்த கரோலின் தந்தையான இயக்குநர்.
படபிடிப்புக்குழுவின் ஒலிப்பதிவு பொறியாளர் ஆத்திரமடைந்து சேவலைத் தேடி ஓடிவருவார். குழந்தைகள் அந்த சேவலை அவருக்குப் போக்குகாட்டி அங்குமிங்குமாய் சேவலை மறைத்து ஓடிச்சென்று சேவலை திரும்பத் திரும்ப கூவவைப்பது கதிகலங்கும் நகைச்சுவை. குழந்தைகள் படம் என்றால் ஏதாவது அறிவுரை வசனங்கள் பக்கம்பக்கமாய் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் பார்த்து தங்களை புனரமைத்துக்கொள்ள இப்படத்தில் பல சுவையான அம்சங்கள் ஏராளம்.
தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in