

கிழக்கு அல்ஜீரியப் பகுதிகளில் ஆரெஸ் மலைப் பிரதேசத்தில் ஒரு விவசாயக் குடும்பம். அக்குடும்பத்தை திடீரென்று ஒரு துக்கம் தாக்குகிறது. அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு இயல்பு வாழ்க்கைத் திரும்புகிறார்கள் என்பதை The Yellow House எனும் அல்ஜீரிய திரைப்படம் மிக அழகாக கூறியுள்ளது.
உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயி மௌலாத் என்பவரின் மகன் அல்ஜீரிய ராணுவத்தில் பணியாற்றும்போது விபத்தில் இறந்துவிடுகிறான். விவசாயியும் தன் மகனின் சடலத்தை தேடிச் செல்கின்றார். அரசாங்க விதிமுறைகளுக்குட்பட்டு தன் மகனின் உடலை எடுத்துவருகிறார். உறவினர்கள் சூழ ஊருக்கு வெளியே உள்ள மலைப் பிரதேசத்தில் புதைக்கிறார்.
எல்லாச் சடங்குகளும் முறையாக நடந்து முடிகிறது. மகனின் இழப்பைத் தாங்கமுடியாமல் படுத்த படுக்கையாகிவிடுகிறாள் மௌலாத்தின் மனைவி. தன் மனைவியின் கவலையைத் தீர்க்கும் மருந்து தேடி நகரத்திற்கு செல்வதிலிருந்துதான் படம் ஒரு புதிய செய்தியை நமக்குச்சொல்வதை உணரத் துவங்குகிறோம்.
வீட்டிற்கு மஞ்சள் வண்ணம் பூசினால் மனைவியின் சோகத்தை போக்கலாம் என்று நகரத்திலுள்ள மருந்து கடைக்காரர் மௌலாத்திடம் யோசனை சொல்கிறார். அதன்படி பக்கெட் நிறைய மஞ்சள் வண்ணத்தை எடுத்துக்கொண்டு மௌலாத்தின் மோட்டார் சைக்கிளின் பின்னே பொறுத்தப்பட்ட மினி இழுவை ஊர்தியுடன் ஊருக்கு திரும்புகிறார்.
வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து, வீட்டின் சுவர் வெளியெங்கும் மஞ்சள் வண்ணத்தை பூசுகிறார்கள். கடைசி குழந்தைகூட ஒரு பிரஷ் எடுத்து வண்ணம் பூசுகிறது. வீடு மஞ்சள் வண்ணமாக மாறுகிறது.ஆனால் அதற்கும் ராணுவவீரனின் தாய் (மௌலாத்தின் மனைவி) சோகத்தில் இருந்து மீண்டெழவில்லை.
எப்போதோ வீட்டைவிட்டு போய்விட்ட தங்கள் வீட்டு நாயை அழைத்துவந்து ஒருமுறை சோகத்திலிருந்து மீட்டெடுத்த பழைய சம்பவத்தை தன் மூத்த மகள் ஆல்யாவிடம் மௌலாத் கூறுகிறார்.
மகளும் ஒரு நாயை பிடித்துவரலாம் என்று சம்மதிக்கிறாள். மௌலாத் ஏதோ ஒரு நாயைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு இழுத்து வருகிறார். வீட்டின் இடது ஓரம் ஒரு கட்டிலில் படுத்தப்படுக்கையாகிவிட்ட அந்த வீட்டம்மாள் அதற்கும் எழுவதாக இல்லை.
மகனின் உடலை எடுத்துவரும்போது அவனுடைய பொருளையும் எடுத்து வந்தபோது அதில் ஏதோ ஒரு வீடியோ டேப் இருந்ததை நினைவுபடுத்திப் பார்க்கிறார் மௌலாத். மௌலாத் நகரத்தில் வாடிக்கையாக உருளைக்கிழங்கு விற்கும் உணவு விடுதி நினைவுக்கு வருகிறது. இவர் கொடுக்கும் உருளைக்கிழங்கு தரமானது என்று கூறுபவன் அந்தக் கடைக்காரன். இவர் மீது நல்மதிப்பு கொண்டவன்.
நகரத்திற்கு சென்று, கடைமுதலாளியின் மகனிடம் உணவுவிடுதியின் தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டுக்காட்டுமாறு கேஸட்டை கொடுக்கிறார்.
அவன் வீடியோ டேப் போட, விபத்தில் இறந்த மகன் அதில் தோன்றி பேசுவதை மௌலாத் பார்க்கிறார். லேசாக புன்னகைக் கீற்று துளிர்க்கிறது. கடை முதலாளியிடம் ''இதன் விலை என்ன?'' என்று கேட்கிறார். ரூ.50 ஆயிரம் என அவர் சொல்ல ''தொலைக்காட்சிப் பெட்டியையும் வீடியோ டெக்கையும் கடனாகத் தரமுடியுமா அதற்கு உருளைக்கிழங்கு கொடுத்து கடனை அடைத்துவிடுகிறேன்'' என்று கேட்க அவரும் சம்மதிக்க அதை வீட்டுக்கு எடுத்துவருகிறார்.
வீட்டின் உள்ளே மங்கிய லாந்தர் விளக்கொளியில் மகள் ரொட்டிக்கு மாவு பிசைய, மனைவி படுத்தபடுக்கையாக இருக்க விவசாயி மௌலாத் தொலைக்காட்சிப் பெட்டியை பார்வையான இடத்தில் வைக்கிறார். ''இதென்ன பெட்டி? இது எதுக்கு நமக்கு? இதுக்கு எவ்வளவு செலவாச்சு?'' என படுக்கையில் இருந்தபடியே மனைவி கேட்க இது 50 ஆயிரம் என்று கூறுகிறார். ''என்னது 50 ஆயிரமா?'' என்று அவள் வியக்கிறாள்.
''இதுக்கு பணம் ஏது?'' என்று கேட்கிறாள். ''உருளைக்கிழங்கு கொடுத்து கடனை அடைச்சிடலாம். நம்ம தோட்டத்தை இன்னும் கொஞ்சம் பெரிசுப்படுத்திக்கலாம்'' எனறும் கூறி அவளை சமாதானப்படுத்துகிறார். அவளின் அடுத்த கேள்விக்கு ''இதுல நம்ம பையன் பெல்காசிம் இருக்கான். ஆனா இந்தப் பெட்டியில இப்ப பாக்கமுடியாது. வீட்டுக்கு கரண்ட் ஒயர் இழுத்து பெட்டிக்கு கனெக்ஷன் கொடுத்தாத்தான் அவனைப் பார்க்கமுடியும்'' என்று கூறுகிறார்.
''என்னது பெல்காசிமா இந்த பெட்டியிலா?'' என்று ஆச்சரியமாக எழுந்து உட்கார்ந்துகொள்கிறாள்.
''எப்படியாவது நம்ம வீட்டுக்கு கரெண்ட் ஒயர் இழுத்துடலாங்க. எனக்கு பெல்காசிமை பாக்கணும். நாளைக்கு டவுன்ல இருக்கற ஆபீசர போய் பார்த்து ஒயர் இழுத்துடலாம்.. நானும் வரேன்'' என்கிறாள்.
மறுநாள் விவசாயி, விவசாயியின் மனைவி பாத்திமா, மூத்த மகள் ஆல்யா, இன்னொரு பெண்குழந்தை அனைவரையும் சுமந்துகொண்டு மினி டிரக் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், மின் இணைப்பு கோரும் பொருட்டு நகரத்தை நோக்கிய பாதையில் செல்கிறது. துணை அதிகாரிகளைப் பார்த்து பேசுவதும் அவர்கள் தடையாயிருக்க, அவர்களை மீறி நகரத்தின் உயர் காவல் அதிகாரியைப் பார்த்து பாத்திமா ''இந்த நாட்டுக்காக என் மகன் உயிரை விட்டிருக்கான். அவனைப் பார்க்கத்தான் எங்க வீட்டுக்கு கரண்ட் கேக்கறோம்.'' என்று சொல்ல, அதிகாரி உடனே ஒப்புதல் அளிக்கிறார்.
வீட்டில் கரண்ட் வருகிறது. தொலைக்காட்சிப் பெட்டிக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இயக்கப்பட, அதில் பெல்காசிம் தோன்றுகிறான். அவனைப் பெற்ற தாய் பாத்திமாவின் முகம் மலர்கிறது.
'ஹாய் அம்மா.. ஹாய் அப்பா.. ஹாய் குட்டிப்பெண்ணே.. ஹாய் ஆல்யா.. எல்லாரும் எப்படியிருக்கீங்க'' என்று அவன் பேசும்போதும் இவ்வளவு நாளாக எங்கேயோ மறைந்துவிட்டிருந்த அந்தத் தாய்க்கு புன்னகை அரும்புகிறது.
அவன் பேசப்பேச, வீடே இயல்பு நிலைக்கு திரும்புகிறது. அந்த கணத்தில் தாயின் முகம் மலரும் தருணம் வரையிலுமே விவசாயியின் மனைவி பாத்திமாவாக நடித்துள்ள டௌனஸ் அத் அலி எனும் பெண்மணியின் நடிப்பு படத்திற்கு ஆணிவேராகத் திகழ்கிறது.
தந்தையின் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும் ஆல்யாவாக நடித்த 12 வயது அயா ஹம்சதீனின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. மகன் இறந்துவிட்டதை கேள்வியுற்று தன் டிரக் மோட்டார் சைக்கிளை மாநகரம் நோக்கி பல்வேறு நெடுஞ்சாலை பயணங்களின்வழியே ஓட்டிச் செல்கையில், நள்ளிரவில் வண்டியில் பொறுத்தத்தக்க விளக்கைத் தரும் போலீஸ்காரர், சடலம் வைக்கப்பட்ட அலுவலகத்தில் உள்ள பொறுப்பு அலுவலர், சடலத்தோடு திரும்பிவரும்போது வண்டி மக்கர் செய்துவிட அதை சரிசெய்து அனுப்பிவைக்கும் மெக்கானிக் என ஓர் எளிய மனிதனுக்கு உதவிகள் செய்யும் நல்ல மனிதர்களைக் காண்கிறோம்.
அதேபோல படத்தின் பின்பாதியில் வீட்டிற்கு மஞ்சள் வண்ணம் அடிக்க யோசனை தரும் மருந்துகடைக்காரர், விவசாயி கேட்ட உடனே தொலைக்காட்சிப் பெட்டியை கடனாகத் தரும் உணவு விடுதி முதலாளி, குடும்பத்தோடு வந்து கரண்ட் இணைப்பு கேட்டதற்கு 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு வழங்க உத்தரவிடும் உயர் அதிகாரி என மகனை பறிகொடுத்துவிட்டு சோகத்தில் தத்தளிக்கும் அந்த குக்கிராமத்துக் குடும்பத்துக்கு உதவிகள் செய்வதன்மூலம் மனநிறைவடையும் மனிதர்கள் படம் முழுக்க வருகின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிக்கோலஸ் ரோச் ஆரெஸ் மலைத்தொடரின் அழகிய காட்சிகளையும் இரவில் நெடுஞ்சாலைப் பயணத்தையும் மலைமுகட்டில் உள்ள கிராமத்து வீட்டையும் ஓவியம் போல தீட்டித் தந்துள்ளார்.
குடும்பத்தை நல்லபடியாக வைத்திருக்க வேண்டும் என்பதை உள்ளத்தில் சுமந்து திரியும் மௌலாத்தாக வரும் அமர் அக்பரே இப்படத்தின் இயக்குநர்.
துக்கத்திலிருந்து மீண்டெழுதால்தான் அடுத்த கட்ட வாழ்வுக்குத் தேவையான செயலூக்கம் பெறமுடியும் என்பதையும் அதன்மூலம்தான் புதிய வெளிச்சத்தை பெறமுடியும் என்று நம்பிக்கைத் தரும் படமாக தி யெல்லோ ஹவுஸ் திகழ்கிறது.
இந்த உலகத்தில் துக்கம் என்பது எதிர்பாராமல் யாரையும் தாக்கக் கூடியதுதான். அது நல்லது என்று எவரும் சொல்வதில்லை. அப்படி வந்து தாக்கிய பிறகு துக்கத்திலேயே துவண்டு கிடப்பதினால் ஒரு சிறுகல்லைக் கூட அசைக்க இயலாது என்பதை அழுத்தமாக சொல்லியதில் இயக்குநர் அமர் அக்பர் சிறந்து விளங்குகிறார்.