க்ளாசிக் சினிமா: 4 - The Terminal (2004) 

க்ளாசிக் சினிமா: 4 - The Terminal (2004) 
Updated on
4 min read

அரசருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மெஹ்ரான் கரீமி நஸ்ஸேரி என்ற நபர், அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ஈரான் அரசாங்கம் உத்தரவிடுகிறது. சொந்த நாட்டிலேயே அகதியாக்கப்பட்ட அவர் லண்டனில் இருக்கும் தனது பெற்றோருடன் வாழ முடிவெடுக்கிறார். ஆனால் லண்டனுக்குச் செல்லும் வழியில் பிரான்ஸ் விமான நிலையத்தில் தனது ஆவணங்கள் திருடப்பட்டுவிட்டதாக அதிகாரிகளிடம் கூறுகிறார்.

எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் அவரை லண்டனுக்கு அனுப்ப முடியாமல், அவரது சொந்த நாடான ஈரானுக்கும் அனுப்ப முடியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். அரசாங்க உத்தரவு வரும் வரை அவரை விமான நிலையத்திலேயே தங்கிக் கொள்ள அனுமதிக்கின்றனர். ஏறக்குறைய 18 ஆண்டுகளை பிரான்ஸ் விமான நிலையத்திலேயே கழிக்கிறார் மெஹ்ரான்.

இது இன்று நாம் பார்க்கப்போகும் திரைப்படத்தின் கதையல்ல. 1988 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தன் வாழ்வின் பெரும்பகுதியை பிரான்ஸ் விமான நிலையத்திலேயே கழித்த ஒரு மனிதனின் உண்மைக்கதை.

பலவழிகளில் அலைக்கழிக்கப்பட்ட மெஹ்ரான் இறுதியாக 2006 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு பாரீஸில் வாழ அனுமதிக்கப்பட்டார்.

இனி

'தி டெர்மினல்'...

க்ரகோஷியா என்ற நாட்டிலிருந்து வரும் விக்டர் நவோர்ஸ்கி என்ற மனிதன் நியூயார்க்கின் ஜான் கென்னடி விமான நிலையத்திற்கு வருகிறான். உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்படும் க்ரகோஷியா நாட்டின் அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் விக்டர் அங்கு திரும்பிச் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அவனுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் முடக்கப்படுகின்றன. பாஸ்போர்ட் இல்லாததால் விக்டரால் தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாது. விசா ரத்தானதால் அமெரிக்காவினுள் நுழைவதற்கும் அவனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. விமான நிலையத்திலேயே தங்குகிறான் விக்டர்.

தனது பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருக்கும் விமான நிலைய இயக்குநரான டிக்ஸான், விக்டரை அங்கிருந்து வெளியேற்றிவிட துடியாய்த் துடிக்கிறார். அவனை மூளைச்சலவை செய்து எப்படியாவது விமான நிலையத்திலிருந்து அவனாகவே வெளியேற வைக்க முயற்சிக்கிறார். ஆனால் டிக்ஸானின் எந்தத் திட்டமும் பலனளிக்கவில்லை.

ஆனால் விக்டரோ ஏர்போர்ட் ஊழியர்களோடும், அங்கு வரும் பயணிகளோடும் நண்பனாகி டிக்ஸானின் வெறுப்பை எண்ணெய் ஊற்றி வளர்க்கிறான். சிறிய சிறிய வேலைகளை செய்து அன்றைய உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறான். பல்கேரியா மொழி மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் அவன் இரவு நேரங்களில் ஆங்கிலம் பயில்கிறான்.

அங்கு வரும் விமானப் பணிபெண்ணான அமெலியா என்பவளிடம் தான் ஒரு கட்டிட ஒப்பந்ததாரர் என்று கூறி அறிமுகமாகிறான். அவளின் மீது காதலை வளர்த்துக் கொள்ளும் விக்டருக்கு விமான நிலையத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகளில் ஒரு வேலை கிடைக்கிறது. அந்த வேலையின் மூலம் சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறான். இதற்கிடையே தனது நண்பனான விமான நிலைய ஊழியன் ஒருவனின் காதலுக்கு உதவி செய்து, அவனுக்குத் திருமணம் நடக்கவும் வழி செய்கிறான் விக்டர்.

விக்டர் தன் காதலைச் சொல்வதற்காகக் காத்திருக்கும் வேளையில் அமெலியை அழைத்துச் சென்று விக்டரை பற்றிய சில தகவல்களை கேட்கிறார் டிக்ஸான். விக்டரிடம் இருக்கும் ஒரு சிறிய வேர்க்கடலை அடைத்திருக்கும் கேனைப் பற்றி தெரியுமா எனவும் கேட்கிறார். தனக்கு எதுவும் தெரியாது என மறுக்கும் அமெலியாவை விடுவிக்கிறார் டிக்ஸான். விக்டரைச் சந்திக்கும் அமெலியா அந்த கேனில் என்ன இருக்கிறது என்று கேட்கிறாள். அந்த கேனிலிருந்து 40 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட 'A Great Day in Harlem’ என்ற ஒரு புகழ் பெற்ற புகைப்படத்தை வெளியில் எடுத்து அவளிடம் காண்பிக்கிறான் விக்டர்.

இசை ரசிகரான விக்டரின் தந்தை அந்தப் புகைப்படத்தில் இருக்கும் 57 இசைக் கலைஞர்களிடமிருந்தும் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டதாகவும், 58-வது நபரான பென்னி கோல்சனை சந்திக்கும் முன்பே இறந்து போய்விட்டதாகவும் கூறுகிறான். தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றவே நியூயார்க் வந்ததாகவும் விக்டர் கூறுகிறான். நெகிழ்ந்து போகும் அமெலியா விக்டரை முத்தமிடுகிறாள்.

9 மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் காலையில் உறங்கிக் கொண்டிருக்கும் விக்டரை எழுப்பும் அவனது நண்பர்கள் க்ரகோஷியாவில் நடந்து கொண்டிருந்த போர் முடிந்து விட்டதாகக் கூறுகின்றனர். விமான நிலையமே உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது.

தனது முன்னாள் காதலரின் மூலம் விக்டர் அமெரிக்கா செல்வதற்கான ஒருநாள் விசாவுக்கு அமெலியா ஏற்பாடு செய்கிறாள். தன் தந்தையின் கனவை நிறைவேற்றத் தயாராகிறான் விக்டர். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. விக்டரின் ஒருநாள் விசா டிக்ஸான் கையெழுத்திட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும். டிக்ஸானிடம் செல்கிறான் விக்டர்.

இந்த சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் டிக்ஸான், பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஒரு போலீஸ்காரரைத் தாக்கிவிட்டு அமெரிக்காவுக்கு ஓடிவந்த விமான நிலைய ஊழியரும் விக்டரின் நண்பருமான முதியவர் குப்தாவை இந்தியாவுக்கு அனுப்பி விடுவதாகவும், இன்னும் சில நண்பர்களின் வேலைக்கு உலை வைத்து விடுவதாகவும் மிரட்டுகிறார். இவற்றைச் செய்யாமல் இருக்க விக்டர் மீண்டும் தனது நாட்டுக்கே சென்று விட வேண்டும் என்று கூறுகிறார்.

நண்பர்களின் நலனுக்காக தன் நாட்டுக்கே சென்று விடுவதாகக் கூறுகிறான் விக்டர். இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் குப்தா விமான ஓடுதளத்திற்குச் சென்று விக்டர் செல்லவேண்டிய விமானத்தை மறித்து போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். விமானம் தாமதாகிறது.

இந்த நேரத்தில் விக்டர் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் பிரதான வாசலுக்கு வருகிறான். விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் அவனை வழியனுப்ப பரிசுகளோடு வருகின்றனர். விமான நிலைய காவல் அதிகாரிகளிடம் விக்டரைத் தடுத்த நிறுத்த வாக்கி டாக்கியில் டிக்ஸான் உத்தரவிடுகிறார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள் விக்டர் வெளியே செல்வதற்கு அனுமதிக்கின்றனர். விமான நிலையத்துக்கு வெளியே வந்து நியூயார்க் நகரின் முதல் பனியை அனுபவிக்கிறான் விக்டர். ஒரு டாக்ஸியை பிடித்து பென்னி கோல்சன் இருக்குமிடத்துக்கு அவரிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு திரும்புகிறான். எங்கே செல்லவேண்டும் என கேட்கும் டாக்ஸி டிரைவரிடம் "I am going home" என்று கூறுகிறான் விக்டர்.

படம் நிறைவடைகிறது.

மெஹ்ரான் கரீமி நஸ்ஸேரியின் கதையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 2003 ஆம் ஆண்டு அவரிடம் 250,000 அமெரிக்க டாலர்களை (ரூ.1,77,39,125) கொடுத்து கதைக்கான உரிமையை வாங்கினார். ஆனால் அந்தக் கதையின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு பல விஷயங்களை மாற்றினார்.

படத்துக்காக Krakozhia என்ற கற்பனையான ஒரு நாட்டை உருவாக்கினார். அதற்காக ஒரு தேசிய கீதத்தையும் உருவாக்கி படத்தில் ஒரு காட்சியில் இடம்பெறச் செய்திருந்தார் ஸ்பீல்பெர்க். முழுக்க முழுக்க விமான நிலையத்திலேயே நடக்கும் கதை என்பதால் தன் கற்பனைக்கேற்ற விமான நிலையத்தைத் தேடி ஸ்பீல்பெர்க் உலகம் முழுக்கச் சுற்றினார். ஆனால் அவர் தேடிய விமான நிலையம் எங்கும் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு பிரம்மாணட செட் அமைத்து ஒரு விமான நிலையத்தையே உருவாக்கினார் ஸ்பீல்பெர்க்.

2002 ஆம் ஆண்டு வெளியான 'Catch Me If You Can' படத்தை இயக்கி முடித்த கையோடு ஒரு பேட்டியில் ஸ்பீல்பெர்க், “நம்மை அழவைக்கக் கூடிய, சிரிக்க வைக்கக் கூடிய இவ்வுலகத்தைப் பற்றி உணரவைக்கக் கூடிய ஒரு படத்தை இயக்க விரும்புகிறேன். இது நாம் சிரிக்கவேண்டிய நேரம், ஹாலிவுட் படங்கள் மக்களின் துன்பமான நேரங்களில் அதைத்தான் செய்யவேண்டும்” என்று கூறியிருந்தார் .

படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலித்த தொகை 219 மில்லியன் டாலர்கள்.

ஜூராசிக் பார்க், மைனாரிட்டி ரிப்போர்ட் போன்ற பிரம்மாணட படங்களை இயக்கிக் கொண்டிருந்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஒரு எளிமையான கதையுடன் களமிறங்கி அதில் வென்றும் காட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in