Last Updated : 06 Jun, 2015 05:56 PM

 

Published : 06 Jun 2015 05:56 PM
Last Updated : 06 Jun 2015 05:56 PM

தி ஃபஸ்ட் அசைன்மென்ட்: குழந்தைகளைக் கரையேற்றும் வகுப்பறைகள்

ஐம்பதுகளின் காலகட்டத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. இன்னமும் கிராமங்களில் கல்வியின் நிலையும் ஆசிரியர்கள் என்னவிதமான வாழ்க்கைப் பின்னணியில் இருந்தெல்லாம் வந்து மாணவர்களை அணுகுகிறார்கள் என்பதற்கு 2010ல் வெளியான இந்த இத்தாலியப் படம் (தி ஃபர்ஸ்ட் அசைன்மெண்ட்) ஒரு சிறந்த உதாரணம்.

நீனா ஒரு படித்த கிராமத்துப் பெண். கிராமத்துக் குழந்தைகளை மிகவும் நேசிப்பவள். குழந்தைகளுடன்தான் அவள் அதிக நேரங்களை செலவிடுவாள். அவள் எண்ணம்போல பள்ளி ஆசிரியை வேலைக்கான நியமன உத்தரவு அவளைத் தேடி வருகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தன் அம்மாவிடம் ஓடிச்சென்று பகிர்ந்துகொள்கிறாள்.

அம்மாவுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சிதான் என்றாலும் வெகுதூரம் உள்ள ஒரு மாவட்டத்திற்குச் சென்று பணியாற்றுவதில் அவளுக்குச் சுத்தமாக உடன்பாடில்லை. மேலும் மகளைப் பிரிந்து வாழ வேண்டுமே, ஆனால் இவள் போயே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். அரசு சம்பளத்தில் கிடைத்த ஒரு வேலை என்பதைவிட நல்ல படிப்புக்குக் கிடைத்த நல்ல தகுதி என்பதே அவளது எண்ணம்.

அடுத்ததாக தான் காதலித்து வரும் உள்ளூரின் பணக்கார வீட்டுப்பிள்ளை பிரான்சிஸ்கோவிடமும் சென்று இச்செய்தியை பகிர்ந்துகொள்கிறாள். அவனுக்கு இவள்மீது மிகவும் அக்கறையும் உண்மையான அன்பும் உண்டு. தனது வீட்டின் சில காரணங்களினால் இவளைத் திருமணம் செய்துகொள்வதைத் தள்ளிப்போட வேண்டிய சூழ்நிலையில் உள்ளவன்.

அவர்கள் வீட்டுக்கெல்லாம் செல்லும் இவள் எல்லோரிடமும் பேசுவாள். ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்களோ இவளைத் திருமணம் செய்துகொள்வதில் உடன்பாடில்லாதவர்களாக இருப்பவர்கள். இவளுக்கு வேலை கிடைத்த செய்தி கேட்டு காதலன் மகிழ்ச்சியடையவில்லை என்றாலும், வேறுவழியில்லாமல் அவளுக்கு விடைகொடுக்கிறான். குழந்தைகளிடமும் பிரியாவிடை பெறுகிறாள் நீனா.

வெகுதூரம் பயணிக்கும் அவள் பணியாற்ற வேண்டிய கிராமம் மலைச் சூழல்களோடு அற்புதமாக இருப்பதைக் காண்கிறாள். அதேநேரத்தில் வெளி உலக வாசனையே அறியாத மக்களைக் கண்டு திகைக்கிறாள். அந்த ஊரின் முக்கியஸ்தரான ஒரு பெரியம்மா வீட்டில் தங்கி சின்னஞ்சிறு பள்ளிக்கூடத்து வகுப்பறையில் தனது பணியைத் தொடங்குகிறாள். குழந்தைகளிடமும் உள்ளூர் மனிதர்களிடமும் அவள் எதிர்கொள்ளும் அனைத்துச் சூழ்நிலைகளையும் மிகமிக அற்புதமாக இயக்கியுள்ளார் ஜியார்ஜியா செசரே.

வகுப்பறைக்கு முறைப்படுத்தப்படாத குக்கிராமத்துக் குழந்தைகளின் உலகம் திரைப்படத்தில் பலக் காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. அதற்காக மெனக்கெடும் ஆசிரியர் எவ்வளவு பாடுபடுகிறார் என்பதைக் காணும்போது, கடமை உணர்வுமிக்க ஆசிரியர்கள் நிலையையும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. என்றாலும, ஆசிரியையிடம் விளையாட்டுக் குணத்தோடு முரண்படும் குழந்தைகளின் உலகம் மிக மிக அழகானது.

முரண்படும் பள்ளி மாணவர்களைப் பற்றியும், இங்குள்ள மனிதர்கள் பற்றியும் அவள் ஊருக்கு கடிதங்கள் எழுதுகிறாள். பிறகு, அவர்கள் ஆசிரியை நடத்தும் பாடங்களை சரியாக உள்வாங்கி அதை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் அவள் எதிர்பாராத பல விஷயங்கள் இங்கு வந்தபிறகு கூட நடந்துவிடுகின்றன.

வெளிவிஷயங்கள் எப்படி போனாலும் வகுப்பறையில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவள் கனவு. அதற்காக கிராம சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப தன் கற்பித்தலை தகவமைத்துக்கொள்கிறாள். அவள் கடும் முயற்சியெடுத்து மிகவும் தோழமையோடு அவர்களுக்கு பாடம் நடத்துகிறாள். அதன்படி பள்ளிக் கல்வி ஆய்வாளர் வரும்போது மாணவர்கள் துல்லியமான விடைகளை வழங்கி இவளுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்துவிடுகிறார்கள்.

இவளின் காதலனும் இவளைத் தேடி வந்து சந்தித்துவிட்டு செல்கிறான். ஆனால் சென்ற வேகத்திலேயே அவனுக்கு திருமணம் நிச்சயமாகிறது. அவன் திருமணம் செய்துகொண்ட செய்தியையும் அறிகிறாள். இவள் காதல் வாழ்க்கைத் தோல்வியில் முடிய தற்கொலைவரைக்கும் போய்விடுகிறாள். கிராம மக்கள் அவளைக் காப்பாற்றிக் கூட்டி வருகிறார்கள்.

இவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காலப்போக்கில் எப்படி சீரடைகின்றன என்பதை சுவாரஸ்யம் குன்றாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அதைத் தொடர்ந்து எல்லோருக்கும் சாதாரணமாக தோன்றக் கூடிய தடாலடி முடிவை அவளும் எடுக்கிறாள். தன் காதலனைப் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு உள்ளூரில் இவளை மையல் கொண்ட இளைஞனோடு (மழையில் ஒழுகும் வகுப்பறைக்கு சிமெண்ட் பூச்சு வேலைகள் செய்யவந்தவன்) இவள் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதோடு அவனை திருமணமும் செய்துகொள்கிறாள்.

ஆனாலும் திருமணத்திற்குப் பிறகு அவனிடமிருந்து விலகியே இருக்கிறாள். அவனது பாமரத்தனங்களையும் படிப்பறிவின்மையையும் கண்டு அவனை ஒதுக்குகிறாள். காதலன் ஏமாற்றியதை நினைத்து மனம் புழுங்கும் இவள் ஒருமுறை ஊருக்கேச் சென்று அவனை சந்திக்க முயல்கிறாள். அவனோ உடல்நிலை கெட்டு மனைவியைப் பிரிந்து வந்திருக்கிறான். இவள் அவனை சந்திக்கும்போது அடிக்கடி கர்சீப்பால் மூக்கிலிருந்து வரும் ரத்தத்தைத் துடைத்துக்கொள்கிறான்.

அவன் வாழ்வில் உற்சாகம் இழந்ததையும் தன்னைப் புரிந்துகொள்ளாத அவர்கள் குடும்பத்தார்களின் இரக்கமில்லாத நிலையையும் எண்ணி எதுவும் சொல்லமுடியாதவளாய் இவள் வருத்தத்தோடு திரும்பவும் அவள் பணியாற்றும் கிராமத்துக்கு வருகிறாள். பணியாற்றிவரும் கிராமத்தில் வாழும் வீட்டிற்கு வருகிறாள். அன்று அவள் கணவன் எங்கோ வேலைக்குச் சென்றிருக்கிறான்.

அவள் பள்ளிக் குழந்தைகளைப் பார்க்க வகுப்பறைக்குச் செல்கிறாள். குழந்தைகளைப் பார்த்ததும் உற்சாகமடைகிறாள். குழந்தைகளுக்கான புதிய பாடம் தொடங்குகிறது.

இப்படத்தில் இசபெல்லா ரகோனிசா பொறுப்பும் வேகமும் மிக்க பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் என்பதைவிட லட்சிய வாழ்வைக் குறுக்கிடும் ஆசாபாசங்களின் நிம்மதியற்ற மனக்கசப்பை மென்றுவிழுங்கி அதை வென்றெடுக்க முயலும் பாத்திரத்தில் வரும் நீனாவாகவே மாறிவிட்டாரோ என்று நமக்குத் தோன்றுகிறது.

இத்திரைப்படத்தில் ஆசிரியர் மாணவர் வகுப்பறை போன்ற அம்சங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக சின்னஞ்சிறு மாணவன் ஒருவன் இளம் ஆசிரியை கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருப்பான். அப்போது ஆசிரியை எந்தக் கேள்விக்கும் பதில்தரமாட்டாயா என கோபமாகக் கேட்கிறார். அதற்கு அங்குள்ள சிறுமி ''டீச்சர்... அவன் யாரு கேள்வி கேட்டாலும் பதில் சொல்லமாட்டான். அவனுக்காக தோணிச்சுன்னாதான் பதில்சொல்வான்'' என்பாள்.

குழந்தைகளை மலைவெளியின் அழகிய பூமரங்கள் இருக்கும் சரிவுக்கு விளையாட அழைத்துச் செல்கிறாள் நீனா. அப்போது அச்சிறுவன் காணாமல் போய்விட எல்லோருக்கும் பகீர் என்கிறது. மலைச்சரிவு வேறு... எங்காவது போய் விழுந்துவிட்டானா என அச்சம் பற்றிக்கொள்ள, ஆசிரியைக்கும் திரைப்படத்தின் பார்வையாளர்க்கும் மனம் பதைபதைக்கிறது. தேடி ஓய்ந்துபோய் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க அப்போது இளம் ஆசிரியையின் மீது மரத்திலிருந்து பூக்களாகக் கொட்ட, நிமிர்ந்துபார்த்தால் சிரித்தபடி அச்சிறுவன்.

அவனின் செயலைக் கண்டு கோபப்படாமல் அவனைப்பார்த்து மிகவும் உற்சாகமாக ஆசிரியை சிரிப்பதும் அவனை அடிக்காமல் கையசைத்து வரவேற்று குழந்தைகளோடு குழந்தைகளாக ஆடிப்பாடி அவள் அழைத்துச் செல்வதும் கவிதை.

உண்மையில் ஆசிரியர் மாணவர் உறவை இவ்வளவு அழகாகச் சொன்ன படங்கள் குறைவு. மேலும் சில திரைப்படங்களில் ஆசிரியரை கேலிக்குரியவர்களாக அறிமுகப்படுத்தும் காட்சிகள் ஒருவித அறியாமையின் வெளிப்பாடு என்றுதான் குறிப்பிட வேண்டும். இதற்கு மாறாக தமிழில் 'வாகைசூடவா' போன்ற படங்களை சிறந்த லட்சிய ஆசிரியரை கலைவெளியில் முன்னிறுத்தியதை மற்ற இயக்குநர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும்.

ரஷ்ய மொழியில் வெளியான சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட 'தி ஃபர்ஸ்ட் டீச்சர்' இதற்குச் சிறந்த உதாரணம்.

இது ஃபர்ஸ்ட் டீச்சரைப் போன்ற லட்சியத் திரைப்படம் இல்லையென்றாலும் தன்னளவில் ஒரு அழகியலையும் நேர்மையையும் சிறப்பாகவே கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். 2010ல் நடைபெற்ற 67வது வெனிஸ் திரைப்படவிழாவில் 'கான்ட்ரோ கெம்போ' எனும் சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

கற்பித்தலை வேள்வியாகக் கருதும் ஆசிரியர்களின் வாழ்வின் பின்புலத்தை பாசாங்கில்லாமல் சொன்ன 'தி ஃபர்ஸ்ட் அசைன்மென்ட்' போன்ற திரைப்படங்கள் தமிழிலும் உருவாகுமெனில், சமூக மாற்றத்திற்கான சாத்தியங்கள் நிச்சயம்! நடக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x