

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 12-வது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 171 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன.இவை தவிர இந்தியன் பனோரமா பிரிவில் இந்திய மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்ற திரைப்படங்களும் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன.
சார்லியின் தேசம் (Charlie's Country)
ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு ஆஸ்திரேலியக் கண்டத்தில் ஐநூறு வகையான மூன்று லட்சம் பழங்குடி மக்கள் வசித்துவந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இந்தப் பழங்குடி மக்களை வேட்டையாடி அப்புறப்படுத்திய துயரமான வரலாறு ஆஸ்திரேலியா என்கிற தேசம் உருவானதிற்குப் பின்னால் உள்ளது. அந்த வரலாற்றுப் பின்னணியின் சமகாலத் தொடர்ச்சிதான் இந்த ஆஸ்திரேலியத் திரைப்படம்.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் வாழ்பவன் சார்லி. பழங்குடி மனநிலையை இழக்காத மூப்பன். தனியன். தங்களின் வாழ்வாதாரங்களைப் பறித்துக்கொண்ட ஆங்கிலேயர்களின் மீது அவனுக்கு வரலாற்றுக் கோபமிருக்கிறது. தங்களின் வேட்டையாடும் கருவியையும் அதற்கான உரிமைகளையும் பறித்துக்கொள்ளும் காவல்துறையினரின் மீது கோபம் கொண்டு காட்டுக்குள் சென்று தனியாக வாழத் தொடங்குகிறான்.
தானே மீன் பிடித்து உண்டு தன்னுடைய முன்னோர்களின் ஆதிகால வாழ்வியலை மீட்டெடுக்க முயல்கிறான். என்றாலும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுப் பின்பு வெளியேறி விடுகிறான். காவல் துறையால் துரத்தப்பட்டுக்கொண்டேயிருக்கும் ஒரு பழங்குடியினரின் குழுவில் இணைந்து குடித்துக் கொண்டேயிருக்கிறான்.
காவலர்களுடன் ஏற்படும் மோதலில் சிறையில் அடைக்கப்படுகிறான். பின்பு வீடு திரும்பும் அவன், பழங்குடிகளின் பிரத்யேக நடனத்தை இளம் தலைமுறையினருக்குக் கற்றுத் தந்து அந்த வரலாற்றுக் கண்ணியின் தொடர்ச்சி அறுபடாத முயற்சியில் ஈடுபடுவதோடு படம் நிறைவு பெறுகிறது.
காலனியாதிக்கத்தினால் ஆக்ரமிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட எந்தவொரு பிரதேசத்திற்கும் ஆதிமக்களுக்கும் இத்திரைப்படத்தைப் பொருத்திப் பார்க்கலாம். ஆங்கிலக் காவல் அதிகாரியை “you white bastard” என்று அன்பாகச் சார்லிஅழைக்கத் தொடங்கும் ரகளையுடன் படம் துவங்குகிறது. மிக நிதானமான திரைக்கதை. சார்லியாக நடித்திருக்கும் டேவிட் குல்பில்லி (David Gulpilil) அசத்தியிருக்கிறார். ரால்ஃப் டி ஹீர் இயக்கியிருக்கும் இப்படம் ஆஸ்திரேலிய நாட்டின் சார்பில் ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்ட திரைப்படம்.