

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 12-வது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 171 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. இவை தவிர இந்தியன் பனோரமா பிரிவில் இந்திய மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்ற திரைப்படங்களும் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன.
மெல்போர்ன் (Melbourne)
சுமார் 90 நிமிடங்கள் ஓடுகிறது இந்த இரானியத் திரைப்படம். ஆனால் ஒரு நொடிகூட உங்களுக்குச் சலிப்பு வராது. அத்தனை பரபரப்பான திரைக்கதை. பெரும்பாலும் ஒரு வீட்டின் உட்புறம், இரண்டே இரண்டு பிரதானப் பாத்திரங்கள். இதனை வைத்துக் கொண்டு அதகளம் செய்திருக்கிறார்கள். 2011-ல் வெளிவந்து புகழ்பெற்ற இன்னொரு இரானிய திரைப்படமான ‘எ செபரேசன்’ (A Separation) போன்ற வகைமையில் அமைந்த திரைக்கதை.
எதிர்பாராத ஒரு சம்பவத்தால் ஏற்படும் குற்றவுணர்ச்சியும் அதைச் சார்ந்த பதற்றங்களும்தான் இதன் கதைக்களம். மெல்போர்னுக்குப் பயணப்படுவதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் ஒரு இளம் தம்பதியினர். விமான நிலையம் செல்ல இன்னமும் சில மணி நேரங்கள். அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்கிறது.
‘இதோ வந்துவிடுகிறேன், பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பக்கத்து வீட்டுக்கார பெண்மணி தந்து சென்றிருக்கும் குழந்தை, சத்தம் கேட்டாலும் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று பார்த்தால்... ஓ... காட்... இறந்து போயிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் அந்த இளம் தம்பதியினர் செய்யும் பதற்றமான எதிர்வினைகளின் தொகுப்புதான் இந்தத் திரைப்படம்.
எதிர்பாராத நெருக்கடியான சூழல்களில் மனித மனம் எவ்வாறெல்லாம் இயங்கும், சிந்திக்கும், அபத்தமாக நடந்து கொள்ளும் என்பதெற்கெல்லாம் நிமா ஜாவிதி (Nima Javidi) இயக்கியிருக்கும் இந்தப் படத்தை உதாரணமாகக் கொள்ளலாம். செப்ரேஷனில் நடித்த பேமேன் மோஆதி (Peyman Moaadi) இதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். உச்சக் காட்சியை யூகிப்பது சற்றுச் சிரமம்.
இதே போன்றதொரு சிக்கலான சூழலையும் பதற்றத்தையும் ஒரு தம்பதியினர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் சார்ந்த திரைக்கதையை, தமிழ் சினிமாவின் சம்பிரதாயமான காட்சிகளுடன், கே.பாலச்சந்தர் ‘எதிரொலி’ (சிவாஜி, கே.ஆர்.விஜயா நடித்திருப்பார்கள்) என்ற திரைப்படத்தில் திறம்படக் கையாண்டிருப்பார்.