

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 12-வது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 171 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. இவை தவிர இந்தியன் பனோரமா பிரிவில் இந்திய மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்ற திரைப்படங்களும் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன.
மீனும் பூனையும் (Fish & Cat)
மனித உணர்வுகளையும் வாழ்வியல் சிக்கல்களையும் யதார்த்தமாக விவரிப்பதில் பொதுவாக இரானியத் திரைப்படங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கிருந்து ஹாரர் வகைமையில் ஒரு திரைப்படம் வருவதென்பது சற்று ஆச்சரியமானதுதான். அந்த வகையில் இது இரானிய சினிமாவின் முதல் திகில் வகைத் திரைப்படமாக இருக்கலாம். கதை சொல்லும் உத்தி என்கிற வகையில் இத்திரைப்படம் மிக மிக முக்கியமானதொரு படைப்பு. ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதுதான் இதன் பிரத்யேகமான சிறப்பு.
இதற்கு முன் 2002-ல் வெளிவந்த அலெக்சாண்டர் சுக்ரவ் இயக்கிய ரஷ்யத் திரைப்படமான ‘ரஷ்யன் ஆர்க்’ (Russian Ark) ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 96 நிமிடத் திரைப்படம் என்கிற தனித்த சாதனையைக் கொண்டிருந்தது. ஆனால் ஷக்ராம் மோக்ரி (Shahram Mokri) இயக்கியிருக்கும் இந்த இரானியத் திரைப்படம், 134 நிமிடங்களைக் கொண்டு அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறது.
தொடர்ச்சியான ஒரே ஷாட்டில் எடுத்தது மாத்திரமே இதன் சிறப்பு அல்ல. ஒரே காட்சியை இரு காமிராக்களின் மூலம் வேறு வேறு கோணங்களில் பதிவு செய்வது, நான்-லீனியர் முறையில் கதை சொல்லும் உத்தி போன்ற விஷயங்களை ஒரே ஷாட்டில் சாதித்திருப்பது என்பது நிச்சயம் ஒரு மகத்தான விஷயம்.
ஒரு மாய வட்டமான புதிர்ப் பாதைக்குள் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது இத்திரைப்படம். இது போன்றதொரு பரிசோதனை முயற்சியிலான ஒரு திரைக்கதையை யோசிப்பதற்கும் அதைச் செயலாக்குவதற்கும் அபாரமான துணிச்சலும் கலையுணர்வும் தேவை. இதற்காக இரண்டு மாதங்கள் ஒத்திகை பார்த்திருக்கிறார்கள்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஓர் இரானிய உணவகத்தில் மனித இறைச்சி பரிமாறப்பட்டதாக வந்த ஒரு செய்தியின் அடிப்படையில் இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர். திகில் திரைப்படமென்றாலும் கூடக் காட்சிப்படுத்திய விதத்தில் எந்த வன்முறையும் பயங்கரமும் இல்லை. பெரியதொரு ஏரியை ஒட்டிய பகுதியில் வருடா வருடம் நிகழும் காற்றாடி பறக்கவிடும் நிகழ்ச்சிக்காகக் கல்லூரி மாணவர்கள் வந்திருக்கின்றனர்.
ஏரியின் அருகேயுள்ள ஒரு சிறிய உணவகத்தில் உள்ள நபர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி வருகின்றனர். பூடகமான சம்பவங்களும் நிகழ்கின்றன. பின்னணி இசையின் பங்கு மகத்தானது. சற்றுச் சலிப்பை ஏற்படுத்தும் திரைக்கதை என்றாலும், கதை சொல்லப்பட்ட உத்தியின் வகையில் இது முக்கியமான படம்.