Published : 22 Dec 2014 10:31 AM
Last Updated : 22 Dec 2014 10:31 AM

A Girl a my door: யார் அந்த குட்டிப்பொண்ணு?

A Girl a my door/Korea/July Jung /119’/2014

உலக சினிமா என்று பேச ஆரம்பித்தால், அதில் தென்கொரிய படங்கள் பற்றிய பேச்சு எழாமல் இருக்காது. வாயில் நுழையாத தென்கொரிய இயக்குனர்கள் பெயரை மனப்பாடமாக ஒப்பிக்கும் திரைப்பட வெறியர்கள் நம்மூரில் உண்டு என்றால், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட கொரியாவில் அவர்களுக்கே உரித்தான விறுவிறுப்பில் 2014-ல் வெளிவந்திருக்கும் மற்றொரு படம்தான் A Girl at My Door.

காவல்துறையின் இடமாற்றத்தால் ஒரு கடலோர கிராமத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிகொண்டு வருகிறாள் நம் கதையின் நாயகி. வந்த இடத்தில் ஒரு சிறுமியை அவளது தந்தையும் பாட்டியும் துரத்தி துரத்தி அடிப்பதை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அவளால் காண முடிகிறது. பொறுப்பான காவல் அதிகாரியாக அதை தட்டிக் கேட்க, அவளிடமே வந்து தஞ்சம் அடைகிறாள் அந்த சிறுமி. முதலில் அதை மறுத்தாலும் அந்தச் சிறுமியின் மீதுள்ள பரிதாபத்தால் அவளை தன் வீட்டில் தங்க அனுமதிக்கிறாள் நாயகி. இதன்பின் அவள் எதிகொள்ளும் திருப்பங்கள்தான் விறுவிறுப்பான திரைக்கதை.

கொரியப் படங்களுக்கே உண்டான அந்த மர்மமான சூழல் இந்தப் படத்திலும் உண்டு (உ.ம்: Memories of Murder [2003], Mother [2009]). அதுவே திரைக்கதையின் சுவாரசியத்திற்கு வலு சேர்க்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் "யார் இந்த சிறுமி? இவளை நம்பலாமா? இதில் யார் நல்லவங்க? யார் கெட்டவங்க?" என்ற பல கேள்வி நம்முள் எழ, அதுவே நம்மை படம் நெடுக ஒன்றவைக்கிறது. "எனக்கு விறுவிறுப்புதான் முக்கியம்" என்கிறவர் நீங்கள் என்றால், தவறவே விடக்கூடாத திரைப்படம் இது.

சினிமா ஆர்வலர் வைஷ்ணவ் சங்கீத் வலைதளம்:>http://spellingmistakevaish.blogspot.in/