

கெட்டதை கேட்கக்கூடாது, கெட்டதை பார்க்கக் கூடாது, கெட்டதை பேசக்கூடாது.. என்று இருத்தல் உத்தமம். ஆனால் நம்மைச் சூழ்ந்துள்ள சமூகநிலை நம்மை அப்படியா விட்டுவைக்கிறது? சந்தர்ப்பவசத்தால் சூழ்நிலைக் கைதிகளாக சிக்கும் மனிதர்களின் கதையைச் சொல்கிறது Three monkeys எனும் துருக்கிய நாட்டுத் திரைப்படம்.
நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்காக ஓய்வில்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் பணக்கார தொழிலதிபர் செர்வெத். அவர் தேர்தல் நேரத்தில் காரை ஓட்டிக்கொண்டே தூங்கி வழிய அவரால் சாலை விபத்து நேர்ந்துவிடுகிறது.
அன்று கார் டிரைவிங் செய்யவில்லையென்றாலும் இந்தக் குற்றத்தை தான் செய்ததாக பொறுப்பேற்று தன் முதலாளியைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஐயூப் என்ற அவருடைய கார் டிரைவருக்கு. அவன் தன் முதலாளிக்காக சிறைக்குச் செல்கிறான்.
அவன் சிறைசென்ற நேரம் அவன் சொந்த விஷயங்கள் பலதும் எக்கச்சக்கமான சிக்கல்களுக்கு உள்ளாகிவிடுகின்றன. அதற்குக் காரணம் செர்வத் என்ற அந்தப் பணக்காரன். யாரோ செய்த தவற்றுக்கு சிறையில் இருந்து வந்ததுதானே இதற்குக் காரணம் எனக் குமுறுகிறான்.
அவன் சிறையிலிருந்து விடுதலையாகி வீட்டுக்குத் திரும்பும்போது குடும்ப சூழ்நிலை முற்றிலும் மாறியிருக்கிறது. அவன் மகன் இஸ்மாயிலும் இதைப் புரிந்துகொள்கிறான். வீட்டில் தவறாக நடப்பது எதையும் அவனால் தடுக்கமுடியாத கோழைத்தனமும் அவனை வாட்டுகிறது.
அன்று இரவு அந்தப் பணக்காரன் செர்வெத் கொலையுறுகிறார். அதற்கு ஐயூப் மற்றும் அவன் மகன் இஸ்மாயில் ஆகியோரின் மீது போலீஸார் சந்தேகப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்கிறது.
உண்மையில் கொலை செய்தது இஸ்மாயில்தான். ஆனால் அவன் சிறை செல்ல விரும்பவில்லை. சிறைவாசத்திலிருந்தும் இந்த வழக்கிலிருந்தும் தப்பவேண்டுமே என யோசிக்கிறான். ஒருமுறை சிறைவாசம் அனுபவித்ததற்கே குடும்பம் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டது. தான் இந்த முறை சிறைக்குப் போனால் குடும்பத்தையும் குழந்தைகளையும் மறந்துவிடவேண்டியதுதான் என நினைக்கிறான்.
அதற்கு பதிலாக டீக்கடையோரம் படுத்துக்கிடக்கும் ஒரு பஞ்சப் பராரியைக் கண்டுபிடிக்கிறான். அவனையே சிறைக்கு செல்லவும் தகுந்த ஏற்பாடுகளை செய்கிறான்.
தான் மற்றவருக்காக சிறைசென்றதால் எவ்வளவு பிரச்சனைகள் என்பதை நன்குணர்ந்தவன் சாமான்யனான அந்த டிரைவர் ஐயூப். ஆனால் தனக்கு ஒன்று என்றவுடன் இன்னொருவனை சிறைக்கு அனுப்பிவைக்கிறவனும் அவன்தான். சூழ்நிலை மனிதர்களை எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பதை இத்திரைப்படம் சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறது.
தேவையற்ற பூதாகார காட்சிப்படுத்தல்களும் நாடகத்தனமும் இன்றி ஒருவித சிபியா டோனில் நம்மைச்சுற்றியுள்ள சதிவலைப் பின்னல்களைக் காட்ட அக்ரிலிக் படிமம் போன்ற ரகஸ்ய தொனியிலான பிம்பங்களை உருவாக்கும் ஒளிப்பதிவு வேண்டியிருக்கிறது. சிலநேரங்களில் நாம் வாழ்வின் அழுத்தமான கணங்களையும் ஒரு கனவைப்போல நாம் உணரக்கூடும்.
மனம் தடுமாறும் பேதலிக்கும் நிலைக்கேற்ப புறநிலை வெளிப்புறத் தோற்றங்களை உருவாக்குவது சாதாரணமில்லை.
வானத்திற்குக் கீழே மேகங்களும் கட்டிடங்களும் கூட ஒருவித வண்ணத்தில் சிலநேரங்களில் நம்மனதின் உள்நிலையை வெளிப்படுத்துவது போலவே இருக்கும்.
ஓர் அக்ரிலிக் ஓவியம்போல காட்சிகளை ஒளிப்பதிவு செய்துகொடுத்த கோகன் டிர்யாகி சூழ்நிலைக்குத் தகுந்த ஒழுங்கான, சரியான மதிப்பீடுகளோடு தரவிரும்பினார்.
எனில், நாம் வழக்கமாகப் பார்க்கும் படங்களில் பார்க்கும் வண்ணங்களிலிருந்து மாறுபட்ட தன்மையைத் தரவிரும்பினார். டிஜிட்டல் கேமராவில் முயற்சிக்காமல், நேர்க்கோட்டு வண்ண இடைவெளிகளை பெருக்கிக்காட்டும் ஹெச்டி கேமராவில் இதைத் துல்லியமாகக் கொண்டுவந்தார்.
துருக்கிய திரைப்பட இயக்குநர் நூரி பில்கே செலான் இயக்கிய 'த்ரீ மங்கீஸ்' திரைப்படம், 'ஆரண்ய காண்டம்' போன்ற முயற்சிகளுக்கு அடித்தளமிட்ட உத்வேகம் எனலாம். 'த்ரீ மங்கீஸ்' கேன்ஸ் திரைப்படவிழாவில் இயக்குநர் நூரி பில்கே செலான் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுத்தந்தது.
ஏமாற்றுதல், ஏமாறுதல், பழிவாங்குதல்கள் எனக் குழம்பிய மனித உளவியலை நவீன தொழில்நுட்பங்களில் கூடிவந்த புதிய சாத்தியங்களை நிகழ்த்திய படம் இது.
Three Monkeys / Turkey / Dir: Nuri Bilge Ceylan / 2008
முந்தைய உலக சினிமா : >டிவா டியூ டியான்: வினோத உத்தியில் நூற்றாண்டு வரலாறு!