

மண்ணில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள். எல்லோருமே செயற்கரிய செயல்களை செய்துவிட்டு மகாத்மாக்களாக மடிவதில்லை. அப்படியெல்லாம் எல்லோராலும் மகாத்மாவாக ஆகிவிடவும்முடியாது. நம்மிடையே உள்ள சில சாதாரண நல்ல ஆத்மாக்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை அறிந்துகொள்ள நமக்கு போதிய ஆற்றல் இல்லையோ என்பதை அந்த ஆத்மாக்கள் யாரென்று காலம் இனம் காட்டிய பிறகே நாம் தெரிந்துகொள்வதுதான் உலக நியதி என்கிறது 'The Twilight Samurai'(2002) ஜப்பானிய திரைப்படம்.
யோஜி யமோடா எனும் ஜப்பானிய இயக்குநர், சாமுராய் வம்சத்தில் வாழ்ந்த மிகவும் எளிய சாமுராய் ஒருவனைப் பற்றிய திரைப்படத்தைத் தந்துள்ளார். இகுச்சி செய்பெய் எனும் சாமுராய் அரசின் தானியக் கிடங்கின் கணக்குப் பிரிவில் தற்போது பணியாற்றிவருபவன். ஒருகாலத்தில் சாமுராய்கள் என்றாலே வாளெடுத்து வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கி ஒரு கை பார்த்தவர்கள். இன்று தானியக் கிடங்கில் வரவு செலவு எழுத பழைய தூசிபடிந்த லெட்ஜர்களைப் புரட்டிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட பல சாமுராய்கள் அவனைப் போலவே அவனுடன் பணியாற்றுகிறார்கள்.
இகுச்சி செய்பெய் தன் மனைவியின் இறப்புக்குப் பின் தன் இரு பெண்குழந்தைகளுக்காகவே வாழ்கிறான். சாமுராய்களின் பரம்பரையில் பலரும் செய்வதே வேறு... எந்நேரமும் கெய்ஷா விடுதிகளுக்குச் சென்று ஆடல் மகளிரோடு மது ஆட்டம் பாட்டம் என காலத்தையும் பணத்தையும் செலவிட்டு ஒவ்வொரு நாளையும் திருநாளாக மாற்ற விழைபவர்கள் அவர்கள். இதனால் பலமுறை அவர்களின் பலத்த கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறான் இகுச்சி. ''நாமெல்லாம் யாரு... சாயந்தரம் ஆனா நேரா வீட்டுக்குப்போறான். இவனெல்லாம் என்ன சாமுராய்?''
இகுச்சி செய்பெய் எனும் சாமுராய்க்கோ அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. தனது வயதான தாயை உடன் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டியது முக்கிய கடமை. ஒவ்வொரு நாளும் குழந்தைகளை கல்வி கற்க பாடசாலைக்கு அனுப்பிவைப்பதிலும் அவர்கள் ஒழுங்காக படிக்கிறார்களா என்பதிலும் கருத்தூன்ற வேண்டிய வேலை வேறு உள்ளது.
அவனுடைய நண்பனான இன்னொரு சாமுராய் லினுமா மிச்சினோஜா ஒருமுறை இகுச்சியை தனியே அழைத்து பேசுகிறான்... ''என் தங்கை டோமோயி உன்னுடைய வகுப்புத் தோழியாக இருந்தவள்.. அவளைத் தெரியாத்தனமாக அந்த சாமுராய் தளபதிக்கு கட்டிவைத்து நாங்கள் படாத பாடு படுகிறோம். அவன் தினம் தினம் குடித்துவிட்டு அவளை அடிப்பதும் உதைப்பதுமாக இருக்கிறான்... நல்லவேளையாக அவனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டோம். அவள் பலமுறை உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள். நீயும் தற்போது துணையில்லாமல் இருக்கிறாய் அவளை திருமணம் செய்துகொண்டால் எல்லாம் நல்லபடியாக அமைந்துவிடும்'' என கேட்கிறான்.
''யோசித்துச் சொல்கிறேன்...'' என்று இவன் வந்துவிடுகிறான். அவன் யோசிப்பதற்கு காரணம் தன் குழந்தைகளுக்கு நல்ல தாயாக அவளால் இருக்கமுடியுமா என்பதுதான்.
இவன் யோசிப்பதற்கு மாறாக டோமோயி இவன் வீட்டுக்கு வந்து இவன் குழந்தைகளை பராமரித்துவிட்டுச் செல்கிறாள். குழந்தைகளின் தரம் நாளுக்குநாள் கூடியிருப்பது கண்டு அவள் வந்துசென்றிருப்பதை அறிகிறான்.
டோமோயியின் முன்னாள் கணவன் தளபதி கோடாவுக்கு இது தெரியவருகிறது. கோடா ஒருநாள் இரவு அவளின் வீடுதேடி சென்று கலவரத்தில் ஈடுபட அங்கு நண்பனைத் தேடி வரும் இகுச்சியின் வருகையால் கலவரம் முடிவுக்கு வருகிறது. அதுமட்டுமின்றி டோமோயியின் அண்ணன், இகுச்சியை கோடாவோடு ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு கோர்த்து விட்டுவிடுகிறான். ''உனக்கு தைரியம் இருந்தா இவனை நீ கத்தி சண்டையில் ஜெயித்துக்காட்டு.''
டோமோயியின் முன்னாள் கணவனும் இதை ஏற்றுக்கொள்கிறான். சாமுராய்கள் ஊருக்குள் வாள்வீச்சு சண்டையிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால் மறுநாள் காலை ஆற்றங்கரையில் சண்டையை வைத்துக்கொள்வதென்பது முடிவாகிறது. டோமோயின் முன்னாள் கணவன் சாதாரண ஆள் இல்லை. பெரும் சண்டைகளில் தளபதியாக பதவி வகித்தவன். அவனிடம் எப்படி மோத முடியும்? ஆனால் மறுநாள் காலை அந்த சண்டையை இகுச்சி எதிர்கொள்கிறான். ஆற்றங்கரையில் கோடோவையும் அவனது சகாக்களையும் ஓடஓட அடித்து விரட்டுகிறான்.
இதைப்பற்றி ஊரே பேசத் தொடங்குகிறது. இவன் எப்பொழுதும்போல் தானியக் கிடங்கில் வேலைக்குப் போகும்போது அவனது சக ஊழியர்கள் இவனிடம் நெருங்கவே பயந்து தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொள்கிறார்கள். ஒருகாலத்தில் இவனைப் பற்றி கடுமையாக கிண்டலடித்தவர்கள் அவர்கள். அதுமட்டுமின்றி இவனைப் பற்றி அப்பகுதியின் நிலப்பிரபுவும் கேள்வியுறுகிறார். இவனை வரச்சொல்கிறார். இவனது வீரத்தைப் பாராட்டி, ஒரு முக்கியமான ஆளின் கதையை முடிக்கவேண்டுமென இவனைக் கேட்டுக்கொள்கிறார். அதற்கான சன்மானம் குறித்தும் பேசி முடிவெடுக்கிறார்கள். குறிப்பிட்ட ஆளின் கதையை முடிக்கச்செல்லும்போது தவறுதலாக முடிவு மோசமாக இருக்கும் நிலை ஏற்பட்டால் இவனது குழந்தைகளை படிக்கவைப்பது, வளர்த்து பராமரிப்பது உள்ளிட்ட செலவுகளை தானே ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.
நிலப்பிரபு குறிப்பிடும் ஆள் கத்திசண்டையில் அதிகம் பயன்படுத்தப்படக்கூடாத 'செகுப்பு' எனும் வித்தையை பிரயோகித்ததால் போர்வீரர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர். அதனால் தனது மிகப்பெரிய வீட்டில் தனித்து வாழ்ந்துவருபவர். அவர் பெயர் யோகோ. போர்வீரர்களின் பட்டியலிலிருந்து பழைய மன்னரால் நீக்கப்பட்டாலும் அவரது வாரிசுகளுக்கு அவரால் எப்போதும் ஆபத்து எனும் அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. அவனைக் கொல்ல சென்றவர்கள் யாரும் இதுவரை திரும்பி வந்ததாக வரலாறு சொல்லவில்லை.
ஒரு சாதாரண குடியானவனாக வாழும் இகுச்சி இதைக்கேட்டு பெரும் சஞ்சலத்துக்கு ஆளாகிறான். ஆனாலும் இந்த சவாலை ஏற்று செல்கிறான். முடிவு என்ன என்பதை ''டுவலைட் சமுராய்''த் திரைப்படம் ஒரு பதட்டமிக்க மிக நீண்டதொரு காட்சியின் வழியே சொல்லிச் செல்கிறது.
ஷூஹெய் புஜிசாவாவின் நாவலை அதேபெயரில் அந்த நாவலின் ஆன்மா கெட்டுவிடாமல் அதை செதுக்கிச்செதுக்கி இப்படத்தை இயக்குநர் தந்திருக்கிறார். இப்படத்தின் இசோ டோமிடோவின் இசையும் மன்சூவோ நாகனமாவின் ஒளிப்பதிவும் திரைக்கதையின் திசையின்போக்கோடு மிகச்சரியாக ஈடுகொடுத்துள்ளன. இகுச்சியாக நடித்த ஹிரோ யுகி சனாடாவும் அவனது தோழி டோமோயியாக நடித்த ரியீ மியாசவாவும் அவ்வளவு ஒரு பொருத்தமாக அலட்டல் இல்லாமல் அவ்வளவு ஒரு பாந்தமாக நடித்து நம்மை வசீகரித்துவிட்டார்கள்.
படத்தில் இரண்டு காட்சிகள் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியதாக உள்ளன. ஒன்று சண்டை நடைபெறும் இறுதிக் காட்சி. நம் ஊரில் சிலம்பம் கேரளாவில் களரிபைட்டு, என ஊருக்குஊர் சண்டைகள் இருப்பதுபோல ஜப்பானிலும் சமுராய்கள் பிரயோகிக்கும் வாள்வீச்சு சண்டைகளிலேயே பலவிதம் உண்டு. இதில் ஒன் ஹா இட்டு ரியூ சண்டை இன்று அங்கு கற்றுத்தரப்படுகிறது. இதன் மூலவேரான இட்டோ ரியூ சண்டைதான் யோகோவின் சண்டைமுறை. மிகவும் பழங்காலத்தில் திகழ்ந்த இட்டோசை காங்கேய்ஷா எனும் வாள்வீச்சுக்கலையிலிருந்து இது உருவானது. இகுச்சிவின் கொடாச்சி சண்டைமுறைக்கே உண்டான கத்தியைப் பார்த்து யோகா விழுந்துவிழுந்து சிரிக்கிறான். என்ன கத்தி இது. என்ன இது மரக்கத்தி? சின்ன பசங்க விளையாட்டு மாதிரி இந்தா இத வச்சிக்கோ... இந்தமாதிரி கத்தியோட சண்டை போடறதுலதான் எனக்கு விருப்பம். செத்தாலும் இதுல அடிபட்டு செத்த பெருமையாவது மிஞ்சும் என்கிறான். ஆனால் இகுச்சி மறுத்துவிடுகிறான். மட்டுமின்றி யோகோவை அவனது வீட்டுக்குள்ளேயே தாக்குவதற்கான ஒரு வேலையை முன்னிட்டு வந்திருந்தாலும் இகுச்சிவிடம், ''தற்சமயம் நீ என் விருந்தினன்'' எனக் கூறி சவகாசமாக அமரவைத்து தேநீர் போட்டுவந்து கொடுக்கிறான்.
இக்காட்சியைப் பார்க்கும்போது மிகவும் வியப்பு மேலிடுகிறது. தவிர அவன் மனைவி இறந்தது, குறைந்த சம்பளத்தில் நீ எப்படி குடும்பத்தை நடத்துகிறாய், குழந்தைகள் நன்றாக படிக்கிறார்களா? என்பன போன்ற கேள்விகளை அக்கறையோடு கேட்கிறான். யோகோவை கொல்லாதபட்சத்தில் தனக்கு மரணம் தான் என்ற நிலையில் உள்ளேவந்துள்ள இகுச்சியும் அவன் எதிரே அமர்ந்து தேநீர் அருந்தியபடியே எச்சரிக்கையோடு பதில்களை வழங்கிக்கொண்டிருக்கிறான். இதில் ரசிக்கத்தகுந்த இன்னொரு இடம் யோகோவின் ஆலோசனை.
''ஒரு வேலை நீ ஜெயிச்சிட்டா, வேலையை முடிச்சிட்டுப் போகும்போது தவறாம பணத்தைக் கேட்டு வாங்கிடு. நீ பேசியிருக்கற சம்பளம் ரொம்ப ரொம்ப குறைவு. இந்த காலத்து விலைவாசியை பாக்கும்போது மட்டமான சம்பளம்., ஆனா அதையாவது சரியா கேட்டுவாங்கிடு. பெரிய மனுசனுங்க சிலநேரத்துல நம்மளை ஏமாத்திடுவாங்க...'' என்று தனது சக சாமுராயின் வாழ்நிலையை உணர்ந்து யோகோ கூறுமிடம் அவன் எவ்வளவு உயரத்தில் இருக்கிறான் என்பதைக் காட்டுவதாகவே உள்ளது. ஒருவேளை இகுச்சியைவிட யோகோதான் சிறந்த ஆத்மாவோ? அத்தகைய மனிதர்கள்தான் பழிவாங்கப்பட்டு தனிமைச்சிறையில் இருந்துகொண்டு உலகை எதிர்கொள்கிறார்களோ என்றும் நமக்குத் தோன்றுகிறது.
இன்னொரு காட்சி... சாமுராய்கள் சண்டைக்குப் புறப்படும்போது அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சம்பிரதாயங்களை வீட்டுப் பெண்கள் செய்யவேண்டும். இதற்காகவே இவனுடைய பால்யகால தோழியை வரச்சொல்கிறான்... முடிவெட்டிக்கொள்வது, தகுந்த உடையை அணிவது, இன்னும் சில சம்பிரதாயங்களை செய்து மோடோயி அவனை வழியனுப்பிவைக்கிறாள்... ''ஒருவேளை நான் திரும்பிவந்தா நிச்சயம் உன்னைக் கல்யாணம் நிச்சயம் செய்துகொள்கிறேன்'' என்று கூறிவிட்டுச் செல்லும் இடம் நம் மனம் மெல்ல கசிகிறது. ஜப்பானைப் பொறுத்தவரை சாமுராய்களுக்கென்று மிகப்பெரிய சகாப்தங்களே இருந்திருக்கின்றன. ஆனால் ஆட்சிகள் மாற மாற அவர்களுக்கான தேவைகளும் வளர்ச்சிப்பாதையும் நாடு மாற பலரும் மாறிப்போகவேண்டிய நிலையும் காலம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுவிடுகிறது.
ஒரு கனவின் அழகான பிம்பங்களாக அமைந்துள்ளன டுவலைட் சாமுராய் படத்தின் இறுதிக்காட்சிகள். மகள்கள் இருவரும் திருமணமாகி வேறொரு நகரத்திற்கு இடம்பெயர்ந்துவிடுகின்றனர். தனது தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகிய இருவரது கல்லறைக்கும் வந்து செல்லும் இளையமகள் கதையை பின்னணி குரலில் சொல்லி முடிக்கும்விதமாக அமைத்துள்ளார்கள். ''யோகோவோடு நிகழ்ந்த சண்டைக்குப் பிறகான உள்நாட்டுப் போர் நடைபெற்ற போஷின் சண்டையில் என் தந்தை இறந்துவிட்டார். எங்கள் தந்தையைவிட எங்களை பெரிதும் நேசித்த வளர்ப்புத் தாயை எங்களால் மறக்கவியலாது...''
சிறுமிகளாய் அவர்கள் வாழ்ந்த வாழ்வில் என்றென்றும் மறக்கமுடியாத நினைவுகளாக அமைந்துவிட்ட தனது வளர்ப்புத்தாயின் நினைவுகள் ஒரு காவியப் படைப்பாக திகழ்வதோடு சரித்திரகால வீரதீர சாகசத் திரட்டை நம் கண்முன் நிறுத்திவைத்துவிட்டார் இயக்குநர் யோஜி யமோடா.
முந்தைய அத்தியாயம்: >தழுவும் வறுமையும் கலாச்சார சிக்கல்களும்!